அத்தியாயம் 9
சுவாதி ஆசிரமத்தில் அனைவரோடும் அமர்ந்து கொண்டு பதற்றமாக இருக்க, மாலை ஆறு மணி அளவில் குழந்தையோடு அங்கே வந்து சேர்ந்தாள் அஞ்சலி.
“சோட்டு! அஞ்சலி அம்மா அங்கே பாருங்க, குழந்தையோட அஞ்சலி வரா!” என்று சொல்லிக்கொண்டே ஓடிச் சென்று சோட்டுவை அஞ்சலியிடம் இருந்து வாங்கிக்கொண்டாள் சுவாதி. “சோட்டோட அப்பாதான் அவனை கூட்டிட்டுப் போயிருக்காரு. மத்தபடி வேறொன்னும் இல்லை. நீ குற்ற உணர்வு (Guilty) அடையுற அளவுக்கு எதுவும் நடக்கல. அவர் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுற மாதிரி, அவர் முன்னாள் காதலியை நினைச்சுக்கிட்டு என் கூட குடும்பம் நடத்த ஆசைப்படுறாரு. என்னால முடியாதுன்னு சொல்லிட்டேன்,” என்று அஞ்சலி சாதாரணமாகச் சொன்னாலும், அவள் அடிமனதில் இருந்த வேதனை புரிந்தது.
“ஏன் இவர் இப்படி இருக்காரு?” என்று சுவாதி கேட்க, “அவர் இன்னும் வினுஷா அக்காவோட மரணத்திலிருந்து வெளிவரவே இல்லை. அவங்க இறந்து போனதையே அவரால் ஏற்றுக்கொள்ள முடியல. நான் அன்னைக்கே அவங்களோட சேர்ந்து செத்துப் போயிருக்கலாம். உயிரோடு இருந்தது மட்டும் இல்லாம, அந்த அக்காவோட இதயத்தை எனக்கு மாத்தி வச்சுட்டு இப்ப நான் அவஸ்தைப்படுறேன். பத்து வருஷமா அவரை நான் காதலிச்சேன், இப்பவும் காதலிச்சுக்கிட்டு இருக்கேன். ஆனா அவர் பதிலுக்குக் காதலைக் கொடுக்கல. அவர் முன்னாள் காதலியை நினைத்து என் கூட வாழ ஆசைப்படுறார்னு சொல்றதுக்கே வாய் கூசுது. அதுமட்டும் இல்லாம அவர் எனக்குச் செய்ததெல்லாம் என்னால மறக்க முடியாது. சரி, அதெல்லாம் விடு, நம்ம வீட்டுக்குக் கிளம்பலாமா?” என்று அஞ்சலி கேட்க, இருவரும் ஆசிரமத்திலிருந்து விடைபெற்றுத் தங்கள் வீட்டிற்கு வந்தனர்.
அங்கு வீட்டிற்கு வெளியே இனியனும் இன்னிசையும் காத்துக்கொண்டிருந்தனர். “அண்ணா, அண்ணி! நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க? ஒரு போன் பண்ணியிருக்கலாம் இல்ல?” என்று அஞ்சலி கேட்க, இன்னிசை தன் மருமகனை வாங்கிக் கொண்டு முத்தமிட்டார். வினோ வர்மன் பார்க்க அப்படியே விஜய்யையும் அஞ்சலியையும் சேர்த்து வைத்தது போல் இருந்தான்.
“குழந்தை பிறந்தது கூட என்கிட்ட சொல்லாம இருந்திருக்கீங்க. உங்க அண்ணன்கிட்ட மட்டும் எல்லாம் சொல்லியிருக்க இல்ல நீ?” என்று இன்னிசை கேட்க, சுவாதி கதவைத் திறக்க அனைவரும் உள்ளே சென்றனர். “விஜய் உன்னை அடிச்சுட்டுப் போன பிறகு எல்லாருக்கும் கோபம் வந்துருச்சு. அதுக்கப்புறம் இவர் உன்னைத் தொடர்புகொண்டார், நீ போன் எடுக்கவே இல்லை. அப்புறம் என்ன ஆச்சு?” என்று கேட்டனர்.
“நான் ஆசிரமத்துக்குப் போனேன். அங்கே குழந்தையை அவரோட ஆட்கள் கூட்டிட்டுப் போயிட்டாங்கன்னு தெரிஞ்சது. அவர் சொன்ன இடத்துக்குப் போனேன். மறுபடியும் பழைய விஜய்யாவே இருக்காரு. கொஞ்சம் கூட மாறல. வினு அக்கா இந்த உலகத்தில் இல்லைங்கிறதை அவர் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாரு. அஞ்சலி, வினுஷா ரெண்டு பேருக்கும் வித்தியாசம் தெரியாம ஒரே உருவத்தில் பார்க்க ஆசைப்படுறாரு. குழந்தையைச் சாக்கா வச்சு எமோஷனல் பிளாக்மெயில் பண்ணப் பார்த்தாரு, நான் ஒத்துக்கல,” என்று கவலையாகச் சொன்னாள் அஞ்சலி.
“நீ சொல்றது சரிதான் மா. உன் புருஷன் முழுமையா மாறி உனக்காக வரும்போதுதான் நீ அவன் கூட வாழணும். காதலில் உண்மைத்தனம் வேண்டும். இன்னொருத்தவங்க நம்ம வாழ்க்கைக்குள்ள வரவே கூடாது, அது கற்பனையாக இருந்தாலும் சரி. பத்திரமா இருங்க, திங்கட்கிழமை ஆபீஸ்க்குப் போற. விஜய் உன்னைத் டார்ச்சர் பண்ண ரெடியா இருப்பான், ஜாக்கிரதையா இரு,” என்று அறிவுரை கூறிவிட்டு இனியனும் இன்னிசையும் கிளம்பினர்.
அஞ்சலி தன் கம்பெனியின் முதலாளி தன் கணவன் தான் என்று தெரியாமல் இருந்த தன் மடத்தனத்தை எண்ணி வருந்தினாள். “உன்னாலதான் சுவாதி இது எல்லாம். நான் சென்னைக்கு வரமாட்டேன்னு சொன்னேன். ஊட்டியில் நிம்மதியா இருந்தேன்,” என்று திட்ட, சுவாதி, “எனக்கு என்ன தெரியும்? இவ்வளவு பெரிய வில்லங்கம் இருக்கும்னு தெரிஞ்சா நான் வந்திருக்க மாட்டேன். போதாக்குறைக்கு உன் புருஷனுக்கு அசிஸ்டென்டா ஒருத்தன் அடிக்கடி மெசேஜ் பண்றான்,” என்று சொல்லி முடிக்கும் முன் ரித்திக் போன் செய்தான்.
“இங்க பாரு, அந்தப் பிசாசு போன் பண்ணுது. பேசிட்டு வர்றேன்,” என்று சுவாதி சென்றாள். “என்ன சார், மறுபடியும் ஏதாவது சலுகையா?” என்று சுவாதி கேட்க, “அப்படியெல்லாம் இல்லை மேடம். குழந்தையை டே-கேரில் (Day Care) சேர்க்க ஃபார்ம் அனுப்பியிருந்தேன், இன்னும் பதில் இல்லை. அதைச் செஞ்சாதான் மண்டேல இருந்து குழந்தையைச் சேர்க்க முடியும்,” என்று ரித்திக் கடுகடுப்பாகப் பேசினான்.
சுவாதி அந்த ஃபார்மைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு, “பேபிக்கு அட்மிஷன் கிடைச்சாச்சு. திங்கட்கிழமை பார்க்கலாம் உன் புருஷன் என்ன செய்றான்னு,” என்று சிரிக்க, அஞ்சலி பீதியில் இருந்தாள்.
இங்கு ரித்திக் ஒரு செய்தியால் மனமுடைந்து இருந்தான். ஆனால் அதை விஜய்யிடம் காட்டிக்கொள்ளவில்லை. “எத்தனை வருஷமா தேடிட்டு இருந்த கொலைக்காரி இவதான்! இவளைப் பார்த்தா நான் மயங்கினேன்? சுவாதி, உன்னை விடமாட்டேன்,” என்று பித்து பிடித்தவன் போல் அலைந்தான். அவன் அறையில் இருந்த புகைப்படத்தில் அவனது குடும்பம் இருந்தது. அவனுக்கு ஒரு தங்கை இருந்திருக்கிறாள். ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை அவள் இருந்தாள். தான் தேடிக் கொண்டிருந்த நபர் சுவாதிதான் என்று தெரிந்த பிறகு அவனால் எதுவும் செய்ய முடியாத நிலை. ஆனால் விதி வேறொன்றைத் திட்டமிட்டிருந்தது.
இரவு உறங்கிக் கொண்டிருந்த சுவாதிக்குக் கனவுகள் வந்தன. “எல்லார்கிட்டயும் உண்மையா இருக்கணும், இல்லைன்னா என் நிலைமை வந்துரும்,” என்று ஒரு பெண் கதறுவது ஞாபகம் வர, திடுக்கிட்டு எழுந்தாள். “இது நடந்து அஞ்சு வருஷத்துக்கு மேல ஆகுது. அன்னைக்கு நான் மட்டும் ஜாக்கிரதையா இருந்திருந்தா அந்தப் பெண்ணைக் காப்பாத்தியிருக்கலாம். அந்தச் சம்பவம் என்னால மறக்கவே முடியாது. அஞ்சலி, சோட்டு இவங்கதான் எனக்காகக் கிடைச்ச உறவுகள். இவங்களைச் சேர்த்து வைக்கிறதுதான் என் கடமை,” என்று நினைத்துக்கொண்டாள்.
சோட்டுவின் தலையில் முத்தமிட்டு, “உங்க அம்மாவை உங்க அப்பா கூடச் சேர்த்து வைப்பேன். நீங்க மூணு பேரும் ஹாப்பியா இருக்கணும்,” என்று உறங்கச் சென்றாள். ஆனால், அவளைச் சீர்குலைக்க ஒருவன் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்.