அத்தியாயம் 30
அஞ்சலி அதிர்ச்சியாகத் தன் கணவனைப் பார்க்க, அவன் கண்கள் சிவந்து காணப்பட்டன.
“என்னங்க, இவங்க…” என்று காயத்ரி பேசியதைச் சொல்லத் தன் கணவனுக்கு எடுத்துரைக்க முயற்சி செய்ய, “வாயை மூடு! எல்லாம் கேட்டுட்டுதான் இருந்தேன். அவ வினுஷாவோட ஃப்ரெண்ட், தன்னை அப்படித்தான் அறிமுகப்படுத்திக்க முடியும். அதுக்காக அவங்க மேல கை நீட்டுவியா? வயசுக்கு மரியாதை வேண்டாமா? இன்னும் அவ மேல உனக்கு வக்கிரம் போகலையா? என்னடி தெரிஞ்சுக்கணும்? அவளுக்கு முக்கியத்துவம் தர்றேன்னு நினைச்சுட்டு இருக்கியா? முட்டாள்! அவள் இந்த உலகத்தில் இல்லை என்று சொன்னால்தான் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க முடியும். எப்பவுமே எனக்கு வினுதான் முதலிடம், அதன் பிறகுதான் நீ! ஏன்னா, அவளோட இதயம் உனக்குள்ள துடிக்குது; அந்த ஒரு காரணம்தான் என் மனசை உன் பக்கம் கட்டி இழுக்குது. இருந்தாலும் நீ வருத்தப்படக்கூடாதுன்னு எல்லாத்தையும் கட்டுப்படுத்திட்டு உன் கூடச் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கேன். ஆனா ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிச்சு அலையுற? என்னை இப்படி ஏத்துக்கோ!”
என்று கண்டபடி பேசியவன், காயத்ரியிடம் மன்னிப்புக் கேட்க, அவள் பெருந்தன்மையாக “அதெல்லாம் ஒன்னும் இல்ல, சின்னப் பொண்ணு” என்று சொல்லி அஞ்சலியைப் பார்த்து நக்கலாகச் சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள். அஞ்சலி அப்படியே அங்கே முழங்கால் போட்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
‘இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கு? இதுக்கு மேல என்ன தேவை? அவர் மனசுல எப்பவுமே நமக்கு இடம் கிடையாது அஞ்சலி. நீ ஒரு வேஸ்ட்! அவரைத் தூரத்திலிருந்து காதலிச்சு அவன்கூட இருந்தாலும், கானல் நீர் மாதிரி ஒரு வாழ்க்கை இது. உனக்கு இது தேவையா? இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும்’ என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டு கீழே இறங்கி வந்தாள். பார்ட்டி அமோகமாக நடந்து கொண்டிருந்தது. அஞ்சலி வந்தவுடன் அவளோடு சேர்ந்து கேக் கட் செய்த விஜய், அவளை விட்டுத் தனியாக விலகி நண்பர்களோடு சேர்ந்துவிட்டான். அனைவரும் டான்ஸ் ஆடும் பொழுது, கணவன் மனைவி இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக இருந்தனர். சரி, பிஸியாக இருக்கிறார்கள் என்று யாரும் கண்டு கொள்ளவில்லை. விழா முடிந்தவுடன் உடனடியாக விஜய் அஞ்சலியிடம் மன்னிப்புக் கேட்டுச் சிம்லா போவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தயாராக இருந்தான். ஆனால் மறுபக்கம் அஞ்சலி, விஜய்யின் சகோதரி கணவனான இனியனிடம் பேசினாள்.
“அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா? என்னால இனிமே இவர் கூட வாழ முடியுமான்னு தெரியல, எனக்குப் பயமா இருக்கு. எனக்காக இல்லாவிட்டாலும் என் வயித்துல வளர குழந்தைக்காகவும்…” என்று காயத்ரி அவளிடம் பேசியதையும், விஜய் அதைப் புரிந்து கொள்ளாமல் தன்னை வசைபாடியதையும் சொல்லி அழுதாள். ‘இவன் இன்னும் திருந்தவில்லை, இவனுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும்’ என்று எண்ணிய இனியனும், “சரி, நான் சொல்ற இடத்துக்கு நீ கொஞ்ச நாள் இரு. விஜய்க்கு உன்னோட அருமை புரிஞ்ச பிறகு நானே அவனை உன்கிட்ட சேர்க்கிறேன்” என்று சொல்ல, அஞ்சலி அதை வேறுவிதமாக எடுத்துக் கொண்டாள். ‘எதுக்கு அருமை புரிய வேண்டும்? இவன் எனக்கு வேண்டவே வேண்டாம்’ என்ற முடிவோடு, இனியன் பாதுகாப்பில் மறுநாள் விடியலுக்காகக் காத்திருந்தாள்.
எல்லாரும் வீடு வந்து சேர்ந்தனர். விஜய் அஞ்சலியிடம் எதுவும் பேசவில்லை. அவன் கண்டுகொள்ளாமல் இருந்தது அவளுக்கு வசதியாகப் போயிற்று. உடனடியாக அவள் அணிந்திருந்த பழைய உடைகள், சில புடவைகள், திருமணப் புகைப்படம், முக்கியமாகப் பிரக்னன்சி கிட் (Pregnancy kit) ஆகியவற்றை எடுத்துப் பத்திரமாக வைத்துக் கொண்டாள். பிற்காலத்தில் அது அவனுக்குத் தெரிந்துவிட்டால் ஏதாவது செய்து விடுவான் என்ற பயத்தோடு, அதிகாலை மூன்று மணிக்கு இனியனுக்கு மெசேஜ் செய்தாள். சரியாக ஒரு கார் மூலம் அஞ்சலியை ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பி, திருப்பதியில் இருக்கும் தன் நண்பன் வீட்டிற்குச் செல்லுமாறு இனியன் வழிவகை செய்தான். ஆனால் அஞ்சலி, அவள் அவசரமாக தட்கலில் எடுத்து வைத்திருந்த ஊட்டி டிக்கெட்டைக் காண்பித்து, ஊட்டி செல்லும் ரயிலில் ஏறினாள்.
‘இனி என் வாழ்வு அங்குதான்’ என்று நினைக்கும் பொழுதுதான், அவளுக்குச் சுவாதியின் நட்பு கிடைத்தது. சுவாதி வீட்டில் தங்கி, ஒரு சிறிய ரிசார்ட்டில் அக்கவுண்ட்டன்ட் வேலை பார்த்துக்கொண்டு, தன் கர்ப்ப காலத்தையும் கவனித்து, குழந்தையைப் பெற்றெடுத்தாள். எப்படியோ ஒரு வழியாகச் சௌகரியமான நிலையில் அஞ்சலி தப்பித்து வந்தாள். ஆண்கள் தொல்லை இருந்தாலும், பொது வெளியில் அவர்களைக் கேள்வி கேட்டுவிடுவாள் என்பதால் யாரும் அவளிடம் சீண்டுவதில்லை. அதே சமயம், சுவாதி ஒரு குற்ற உணர்வில் சென்னையை விட்டு இங்கே வந்து, வேலையையும் குழந்தையையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அஞ்சலிக்குத் தன் குழந்தைதான் உலகம் என்று வாழ்க்கை நகர்ந்தது.
தன்னால் ஒரு உயிர் போனது அஞ்சலியின் கண் முன்னே அவ்வப்போது வந்து நின்றாலும், ‘என்னைக்காவது ஒரு நாள் கடவுள் இந்தத் தப்புக்கான தண்டனை எனக்குக் கொடுப்பார், அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்’ என்ற மனநிலையில் அவள் இருந்தாள். இப்படியாக ஆண்டுகள் கடந்தன.
இங்கே அஞ்சலி போன பிறகு விஜய் பித்து பிடித்த நிலையில் இருந்தான். அவளைத் தேடாத இடமில்லை என்று சொல்ல முடியாது; ஆனால் ஒரு கட்டத்தில், “கொழுப்பு எடுத்துப் போனவள் தானே, அவளாக வந்தால் வரட்டும் இல்லையென்றால் போகட்டும்” என்று கர்வத்துடன் இருந்துவிட்டான். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் “அவள் சும்மா சென்றிருக்க மாட்டாள், ஏதோ நடந்திருக்கிறது” என்று பேசினர். விஜய்யின் அம்மா ராதா, வினுஷாவின் தோழி வந்த பிறகுதான் ஏதோ நடந்திருக்கிறது என்று சரியாகக் கண்டுபிடித்தார். விஜய் நடந்தவற்றைச் சொல்ல, “ஏதோ உள்குத்து இருக்கிறது” என்று ராதா அந்த ரிசார்ட்டைத் தேடிச் சென்று காயத்ரியிடம் விசாரணை நடத்தினார். காயத்ரி பயந்துபோய் உண்மையைச் சொல்ல, அவளுக்கு ஒரு அடியைப் போட்டுவிட்டுத் தன் மகனிடம் வந்து, “உனக்கு இது தேவைதான், இப்படித் தனியாகக் கிடந்து சாவு! இனிமேல் இந்த வீட்டுப் பக்கம் வராதே” என்று அவனைத் துரத்தி அடித்தார்.
விஜய்யும் “போனால் போகட்டும்” என்று தான் வாங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்றுவிட்டான். இரண்டு வருடங்கள் யாரிடமும் பேசாமல் வேலைக்குச் செல்வதும், அஞ்சலி மீது இருக்கும் கோபத்தைப் பாக்ஸிங் பேக் (Boxing bag) மீது காட்டித் தீர்த்துக் கொள்வதுமாக நாட்கள் சென்றன. அஞ்சலியோ, “விஜய் ஒருநாளும் மாற மாட்டான்” என்று புரிந்து கொண்டு விலகி இருந்தாள். ஆனால் அவனது சாதனைகள் பற்றிய விபரங்களை மட்டும் சேகரித்து வைத்திருந்தாள். சுவாதி தன் குற்ற உணர்வு போகத் தனக்கென்று ஒரு குடும்பம் வந்துவிட்டது என்று நிம்மதி அடைந்தாள். மறுபக்கம் ரித்விக், தன் தங்கையின் மரணத்திற்குச் சுவாதிதான் முழு காரணம் என்று அவளை வேட்டையாடத் துடித்தவன், பிறகு அவள் முழு காரணம் அல்ல என்று புரிந்து கொண்டு விலகிப் போனான்.
நால்வரும் ஒவ்வொரு சிந்தனையில் இருந்தனர். சுவாதி உறக்கத்தில் ஆழ்ந்துவிட, ரித்விக் நண்பனுக்கு அறிவுரை சொல்லத் துடித்தான். விஜய் மீண்டும் அஞ்சலியிடம் காதல் யாசகம் பெற வேண்டுமா என்று ஆணவத்தில் இருந்தான். அஞ்சலி குழந்தைக்குப் பால் புகட்டி முடித்து, மகனுக்கு ஒரு முத்தத்தைக் கொடுத்து உறக்கத்தைத் தழுவினாள்.
பிளாஷ்பேக் முடிந்தது.
மறுநாள் காலை, மனதிலிருந்த பாரங்களை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டதால் இரு பெண்களும் அமைதியாக வேலைக்குச் சென்றனர். குழந்தையை டே கேரில் (Day care) விட்டுவிட்டுத் தங்கள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தனர். விஜய் அமைதியாகவே இருந்தான்; அஞ்சலியும் அவனை ஒரு அந்நியன் போலக் கருதித் தன் வேலையைத் தொடங்கினாள். விஜய் அவளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்தான். ‘நேற்று அதீத போதையில் அவளை ஆக்கிரமித்தோம். ஆனால் நம் மனம் இப்போதும் வினுஷாவை நினைத்துக் கொண்டிருப்பதால் இவளை உதாசீனப்படுத்துகிறோமா? இல்லை, இவள் வினுஷாவை மறந்துவிட்டு என்னை நேசி என்று சொன்னதால் இன்னும் அதிகமாக வினுஷாவை நேசிக்கிறோமா?’ என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான்.
மறுபக்கம், சுவாதியிடம் மன்னிப்புக் கேட்பதற்காக ரித்விக் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தான். அவளால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், ஐந்து வருடங்களாகச் செய்யாத தப்பிற்குத் தான் காரணம் என்று அவள் குற்ற உணர்வில் இருந்ததை நினைத்து வருந்தினான். மேலும் அவன் நேசித்த பெண்ணும் இவள்தானே! அதனால் அவளைச் சுற்றியே வந்தான். அதை உணர்ந்த சுவாதி, வேலைப் பளு இல்லாத நேரத்தில் “நான் பிரேக் எடுக்கப் போறேன்” என்று சொல்லிவிட்டுப் பணியாளர்களுக்கான சிறு ரெஸ்டாரண்டிற்குச் சென்றாள். ரித்விக் அவளைப் பின்தொடர்ந்தான்.
அவள் காபி குடித்துக் கொண்டிருக்க, அவளுக்கு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் ரித்விக்.
“சுத்தி வளைக்காமல் விஷயத்துக்கு வரலாமா?” என்று சுவாதி அதிரடியாகக் கேட்டாள்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கோ சுவாதி!” என்று ரித்விக்கும் பதிலுக்கு அதிரடியாகச் சொன்னான். இருவரும் எதிர் எதிர் துருவமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.