அத்தியாயம் 3
அந்த கிளப்பின் அழகும், பிரமிப்பும் நிறைந்த மூலைகளில் துப்பாக்கி புல்லட் சத்தங்கள் இசையைத் துளைத்துக் கொண்டு பாய்ந்தது. கிளப்பில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட, காயத்ரி மட்டும் ஒரு கணம் திகைத்து நின்றாள். அவளது புலனாய்வுப் பணியில் இத்தகைய வன்முறையை அவள் சந்தித்ததில்லை.
ஆனால், அவள் கீழே விழும் முன்பே டேவிட்டின் வலுவான கரங்கள் அவளை ஒரு கேடயமாகத் தாங்கிக் கொண்டன.”குனி!” என்று அவன் உறுமினான். அவனது குரலில் இருந்த அதிகாரம் அவளை அறியாமலேயே அவளைக் கட்டுப்படுத்தியது. ஒரு கையில் காயத்ரியின் இடுப்பை அணைத்து அவளைத் தரைநோக்கி அழுத்தியபடி, மறு கையால் தனது கோட் உட்புறத்தில் இருந்த துப்பாக்கியை எடுத்தான் டேவிட்.
அவனது அசைவுகளில் ஒரு சிறு பதற்றம் கூட இல்லை; அது பலமுறை மரணத்தைச் சந்தித்து மீண்ட ஒருவனின் நிதானம்.கிளப்பின் விளக்குகள் மீண்டும் மீண்டும் விட்டு விட்டு எரிந்தன . அந்த ஒளியில் டேவிட்டின் முகம் ஒரு கோபமான கிரேக்கக் கடவுளைப் போலத் தெரிந்தது. காயத்ரிக்கு மூச்சு முட்டியது. அவனது உடலின் வெப்பமும், அவன் அணிந்திருந்த அந்த விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தின் மணமும் அவளது உணர்வுகளைச் சிதறடித்தன.
“டேவிட் மில்லர்! அங்கேயே நில்!” என்று இருட்டில் இருந்து ஒரு குரல் ஒலித்தது. அது ஆண்டனியின் முக்கிய ஆட்களில் ஒருவனான கார்லோஸ்.டேவிட் ஒரு மெல்லிய ஏளனச் சிரிப்பை உதிர்த்தான். “என் எல்லைக்குள்ள வந்து என்கிட்டயே நிக்கச் சொல்றியா? மெக்சிகோ இன்னும் உனக்கு எதையும் கத்துக்கொடுக்கல கார்லோஸ்,” என்று சொல்லிவிட்டு, மின்னல் வேகத்தில் மூன்று முறை சுட்டான். ஒவ்வொரு தோட்டாவும் துல்லியமாக இலக்கைத் தாக்கியது.அந்த இக்கட்டான சூழலிலும் காயத்ரியின் கண்கள் டேவிட் செய்த ஒரு விஷயத்தைக் கவனித்தன.
அவன் சுட்டது யாருடைய உயிரையும் பறிக்க அல்ல; அவர்களின் கைகளையும் கால்களையும் மட்டுமே தாக்கி அவர்களைச் செயலிழக்கச் செய்தான். ஒரு மாஃபியாவிடம் இவ்வளவு நிதானமா?மறுநொடி, அவன் அவளைத் தூக்கிக் கொண்டு கிளப்பின் பின்வாசல் வழியாக வெளியேறினான். வெளியே மெக்சிகோவின் இரவு காற்று சில்லிட்டிருந்தது. தனது கறுப்பு நிற ஸ்போர்ட்ஸ் காரின் கதவைத் திறந்து அவளை உள்ளே தள்ளினான்.
“நீ… நீங்க எதுக்கு என்னைக் காப்பாத்துறீங்க?” என்று காயத்ரி சீற்றத்துடன் கேட்டாள். அவளது இதயம் இன்னும் ஒரு போர்க்களத்தைப் போலத் துடித்துக் கொண்டிருந்தது.டேவிட் ஸ்டியரிங்கைத் திருப்பினான். கார் மெக்சிகோ சிட்டியின் ‘அவெனிடா இன்சுர்ஜென்டெஸ்’ சாலையில் பறந்தது. “ஏன்னா, நீ ஒரு முட்டாள் காயத்ரி. டிடெக்டிவ் வேலைங்கிறது வெறும் கிரிமினாலஜி புத்தகத்தைப் படிச்சிட்டு பண்றது இல்லை. இங்க ஒருத்தன் சிரிச்சா அதுக்கு பின்னாடி ஒரு கத்தி இருக்கும். உனக்கு இன்னும் இந்த ஊரோட வேகம் புரியல.””எனக்கு எல்லாம் புரியும்! நான் வந்தது அந்த சிப்பைக் கைப்பற்ற. நீங்க அதை என்கிட்ட இருந்து பறிச்சிட்டீங்க,” என்றாள் காயத்ரி
அவன் கையில் இருந்த அந்தச் சிறிய கருவியைப் பார்த்து.டேவிட் காரைச் சாலையின் ஓரம் நிறுத்தினான். அவளை நோக்கித் திரும்பினான். அவனது கண்கள் அவளது கண்களை ஊடுருவின.
“இந்த சிப்ல இருக்கிறது ஆண்டனியோட அடுத்த போதை மருந்து கடத்தல் பிளான் இல்லை காயத்ரி. இதுல இருக்கிறது உன்னைப் பத்தின தகவல்கள். நீ டெல்லியில இருந்து வந்ததுல இருந்து, உன் குடும்பம் எங்க இருக்குது வரைக்கும் ஆண்டனி குறி வைச்சிட்டான். இப்போ சொல்லு… உன்னை யாரு காப்பாத்தணும்?”
காயத்ரி ஒரு நொடி உறைந்து போனாள். தனது குடும்பத்திற்கு ஆபத்து என்றவுடன் அவளது தைரியம் லேசாகக் குலைந்தது. அவளது கண்களில் தெரிந்த பயத்தை டேவிட் கவனித்தான். அவனது முகத்தில் இருந்த முரட்டுத்தனம் மறைந்து ஒரு மென்மை குடியேறியது.”பயப்படாத… இந்த டேவிட்டோட பார்வையில பட்ட எதையும் யாரும் தொட முடியாது. குறிப்பா… உன்னை,” என்று அவன் சொன்னபோது அவனது குரலில் இருந்த ஒருவிதமான உரிமை காயத்ரியின் மனதை ஊடுருவியது.
அவளை அவளது அபார்ட்மென்ட் வாசலில் இறக்கிவிட்டான். கார் கிளம்பும் முன் காயத்ரி ஜன்னல் வழியாக அவனிடம் கேட்டாள், “ஏன்? ஏன் எனக்கு இதையெல்லாம் செய்றீங்க? நீங்க ஒரு குற்றவாளி தானே?”டேவிட் அவளைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான். “இந்த உலகமே கூட ஒரு குற்றவாளி தான் காயத்ரி. நான் யாருன்னு உனக்குத் தீர்ப்பு எழுதத் தோணும்போது, ஒருமுறை உன் மனசைக் கேட்டுப் பார். அது பொய் சொல்லாது.
“என்று தனது காரில் அங்கிருந்து சென்றுவிட.கார் மறைந்தது. காயத்ரி மேலே சென்று தனது பால்கனியில் நின்றாள். மெக்சிகோவின் இரவு அவளுக்கு இன்று மிக நீண்டதாகத் தெரிந்தது.
அவளது டைரியில் ‘டேவிட் மில்லர் – மாஃபியா’ என்று எழுதியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு கேள்விக்குறியைப் போட்டாள். அவன் ஒரு யட்சன்… மர்மமானவன், ஆனால் மறுக்க முடியாத வசீகரம் கொண்டவன்.
இரவு அவள் உறக்கத்திற்கு தள்ளாடிக் கொண்டிருந்தாள். அவளது மனதில் டேவிட்டின் அந்தப் பாதுகாப்பான அணைப்பு மட்டுமே மிஞ்சியிருந்தது.
________________
மறுநாள் காலை அஸ்டெக் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சியின் அலுவலகம் வழக்கத்திற்கு மாறான பரபரப்பில் இருந்தது. காயத்ரி உள்ளே நுழைந்தபோது ரிகார்டோ அவசர அவசரமாகத் தனது கோப்புகளை அடுக்கிக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் தென்பட்ட அந்தப் பதற்றம் காயத்ரியின் ஆழ்மனதில் ஒரு எச்சரிக்கை மணியை அடித்தது.
நேற்றைய இரவின் சம்பவங்கள் இன்னும் அவள் கண்களுக்குள் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தன. டேவிட்டின் கரம் அவளது மணிக்கட்டைப் பற்றிய அந்த அழுத்தம், அவளது சருமத்தில் இன்னும் ஒரு தழும்பைப் போல உணரப்பட்டது.”காயத்ரி, நீ நேத்து எல் ரோசா கிளப்புக்கு போயிருக்கக் கூடாது. அங்க நடந்த துப்பாக்கிச் சூடு பத்தி மெக்சிகன் பிரஸ்ல பெரிய அளவுல நியூஸ் வந்துட்டு இருக்கு. டேவிட் மில்லரோட ஆளுங்க அங்க இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கு.
உனக்கு ஏதாவது ஆச்சா?” என்று ரிகார்டோ அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு கேட்டார்.காயத்ரி தனது இருக்கையில் அமர்ந்தாள். அவளது கண்கள் லேப்டாப் திரையில் டேவிட்டின் முகத்தைப் பார்த்தன. “எனக்கு ஒன்னும் ஆகல சார். ஆனா அங்க ஆண்டனி ஆளுங்க தான் முதல்ல பிரச்சனையை ஆரம்பிச்சாங்க.
டேவிட்… அவர் அங்க இல்லைனா நிலைமை மோசமாகியிருக்கும்,” என்று உண்மையை மறைக்காமல் சொன்னாள்.”டேவிட்டா? நீ அவனைப் பேர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு அவன் உனக்கு பழக்கமாயிட்டானா?” என்று ரிகார்டோ கேட்ட கேள்வி அவளைத் திணறடித்தது.
“இல்ல சார்… ஒரு டிடெக்டிவா அவனைப் பத்தின ஃபைல்ஸ் படிச்சதுனால அப்படிச் சொன்னேன்,” என்று சமாளித்தாள். ஆனால் அவளது மனம் அந்தப் பதிலை ஏற்கவில்லை.அன்று மதியம், காயத்ரிக்கு ஒரு அனாமதேய பார்சல் வந்தது. அதைத் திறந்தபோது உள்ளே ஒரு அழகான மெக்சிகன் கறுப்பு ரோஜாவும், ஒரு சிறிய மெமரி கார்டும் இருந்தது. மெமரி கார்டைச் செருகிப் பார்த்தபோது, அதில் ஒரு வீடியோ ஓடியது. அதில் ஆண்டனியின் ரகசிய குடோன் ஒன்றில் டெல்லியில் இருக்கும் அவளது வீட்டின் புகைப்படங்கள் சுவரில் ஒட்டப்பட்டிருந்தன.
சாருகேஷும், அம்மாவும் காய்கறிச் சந்தையில் இருக்கும் புகைப்படங்கள் கூட அங்கிருந்தன.காயத்ரியின் கை நடுங்கியது.
“அம்மா… சாரு…” என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன.சரியாக அந்த நேரத்தில் அவளது போன் அடித்தது. அறிமுகம் இல்லாத எண்.”உன் குடும்பத்தோட ஆயுள் இப்போ என் கையில இருக்கு காயத்ரி. நீ அந்த ஏஜென்சியில இருந்து விலகி, நான் சொல்ற இடத்துக்கு வரணும்.
இல்லனா டெல்லியில இருக்கிற உன் வீட்டுக்கு முன்னாடி ஒரு வெடிச்சத்தம் கேட்கும்,” என்று ஆண்டனியின் குரல் கரகரப்பாக ஒலித்தது.காயத்ரிக்கு உலகமே சுழல்வது போல இருந்தது. அவளது அறிவு, படிப்பு, டிடெக்டிவ் திறமை எல்லாம் ஒரு நிமிடம் அவளைக் கைவிட்டன. அவள் ஒரு சாதாரணப் பெண்ணாக, தன் குடும்பத்தை எண்ணி நடுங்கினாள்.
அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்தாள். மெக்சிகோவின் அந்த மதிய வெயில் அவளை வாட்டியது.சாலையோரம் நின்றிருந்த ஒரு கறுப்பு நிற எஸ்யூவி கார் அவளுக்கு முன்னால் வந்து நின்றது. அதன் கதவு தானாகத் திறந்தது. உள்ளே டேவிட் மில்லர் அமர்ந்திருந்தான். இப்போதும் அதே கூர்மையான பார்வை, அதே கம்பீரம்.”ஏறு,” என்றான் அவன்.”நீங்களா? உங்களுக்கு எப்படித் தெரியும் நான் இப்போ இங்க வருவேன்னு?” என்று காயத்ரி கேட்டாள்.
அவளது கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது.”இந்த நகரத்துல பறக்குற காக்கா கூட என் அனுமதி இல்லாம சிறகடிக்காது காயத்ரி. ஆண்டனி உன்னை மிரட்டுறான்னு எனக்குத் தெரியும். உன் குடும்பத்துக்கு எதுவும் ஆகாது. ஏறுன்னு சொன்னேன்ல!” என்று அதட்டினான்.காயத்ரி தயக்கத்துடன் காரில் ஏறினாள்.
கார் நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகி, கான்கூன் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் சீறியது.”நீங்க எதுக்கு எனக்கு உதவி பண்றீங்க? நீங்களும் ஒரு மாஃபியா தானே? ஆண்டனி பண்றதுக்கும் நீங்க பண்றதுக்கும் என்ன வித்தியாசம்?” என்று காயத்ரி ஆவேசமாகக் கேட்டாள்.டேவிட் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்த கைகளை லேசாகத் தளர்வாக்கிவிட்டு அவளைப் பார்த்தான்.
“ஆண்டனி பயத்தை விக்கிறான், நான் பாதுகாப்பை விக்கிறேன். அவனுக்கும் எனக்கும் இருக்கிற வித்தியாசம் அதுதான். உன் குடும்பத்தை என் ஆளுங்க டெல்லியில பாதுகாப்பா ஒரு இடத்துக்கு மாத்திட்டாங்க. இப்போதைக்கு நீ மெக்சிகோ சிட்டியில இருக்கிறது பாதுகாப்பானது இல்லை. அதான் உன்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போறேன்.””எங்க கூட்டிட்டுப் போறீங்க?””ஒரு தீவுக்கு. அங்க என்னைத் தவிர உன்னை யாரும் தொட முடியாது. அங்க ஒரு வாரம் அமைதியா இரு. ஆண்டனியோட கதை முடியுற வரைக்கும் நீ என் கஸ்டடியில தான் இருக்கணும்,” என்றான் டேவிட்.
காயத்ரிக்கு அவன் சொல்வதில் உண்மை இருப்பதாகத் தோன்றினாலும், ஒரு மாஃபியாவுடன் தனிமையில் ஒரு தீவிற்குச் செல்வது சரியா என்ற கேள்வி அவளுள் எழுந்தது. ஆனால், அந்த யட்சனின் கண்களில் தெரிந்த அந்த உறுதி அவளுக்கு ஒரு விசித்திரமான தைரியத்தைக் கொடுத்தது.நெடுஞ்சாலையின் இருபுறமும் மெக்சிகோவின் அழகிய நிலப்பரப்புகள் மின்னல் வேகத்தில் கடந்து சென்றன. காயத்ரியின் பயணம் ஒரு புதிய திசையை நோக்கித் திரும்பியது.
அந்தத் தீவு அவளது வாழ்க்கையில் ஒரு பெரிய புயலையும், அதே சமயம் ஒரு புதிய உணர்வையும் கொண்டு வரப்போகிறது என்பது அவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.
________