Home ANTIHERO29) பார்வை 😍

29) பார்வை 😍

by sreejanovels
17 views

அத்தியாயம் 29

மாதங்கள் கடந்தது. தன்னுடைய முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுவதற்காக ஒரு சர்ப்ரைஸ் பார்ட்டி (Surprise Party) ஒன்றை விஜய் ஏற்பாடு செய்திருந்தான்; அது இன்னும் மூன்று நாட்களில் நடைபெற இருக்கிறது. அதே சமயம் கீதாஞ்சலி குளியல் அறையில் கண்களை மூடி வேண்டிக்கொண்டிருந்தாள். சரியாக அவள் வேண்டுதல் நிறைவேறும் பொருட்டு, கர்ப்பப் பரிசோதனையில் இரட்டைக் கோடு காண்பித்து அவள் உள்ளத்தைக் குளிரச் செய்தது. இரண்டு மாதங்களாக மாதவிடாய் வரவில்லை, நிச்சயம் அதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அவசரப்பட வேண்டாம் என்று பொறுமை காத்து, கணவரிடம் கூடப் பொழுது விடியட்டும் மெதுவாகச் சொல்லலாம் என்று எண்ணினாள். அவ்வப்போது அவனை நெருங்க விடாமல் பொத்திப் பொத்திப் பாதுகாத்தாள். விஜய் ஒரு பக்கம் பிசினஸ், திருமண ஆண்டு விழா கொண்டாட்டம் எனப் பிஸியாக இருந்தான். இது அவளுக்குச் சாதகமாக இருந்தது. முதலாம் ஆண்டு திருமண நாளன்று அவனிடம் இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று அவள் ஆசையாகக் காத்திருந்தாள்.

“இந்த முறை எந்த ஒரு அபசம்பாவிதமும் நடக்கக் கூடாது. என்னோட விஜய்க்கு நான் கொடுக்கிற கல்யாண நாள் பரிசு இதுதான். அவரோட குழந்தை என் வயித்துல இருக்கு, நிச்சயம் சந்தோஷப்படுவார்” என்று கர்ப்பப் பரிசோதனை அட்டையைப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள்.

வழக்கம்போல் நாட்கள் கடந்தது. இதோ மறுநாள் திருமண ஆண்டு விழா. அதற்கு முந்தைய இரவு, விஜய் கீதாஞ்சலியிடம் நாளை பார்ட்டியில் இதுதான் அணிய வேண்டும் என்று ஒரு தங்க நிறப் பட்டுப் புடவையும், அதற்கேற்ற நகைகளையும் கொடுத்திருந்தான். அவளும் கணவனுக்குப் பிடித்த பிராண்டட் (Branded) நிறுவனத்தைச் சார்ந்த கோட் சூட் ஒன்றை ஆர்டர் செய்து வரவழைத்திருந்தாள்.

“ஏய் இது கொஞ்சம் காஸ்ட்லி, எதுக்கு நீ இவ்வளவு செலவு பண்ணி இருக்க? காசு ஏது?” என்று விஜய் சந்தேகமாகக் கேட்க, “நான் பார்ட் டைம் ஜாப் (Part-time job) போயிட்டு இருந்தேன் இல்லையா, எனக்கான செலவுகளை எல்லாம் அவங்களே பார்த்துக்கிட்டாங்க. ஆனா கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருந்தேன். இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும். ஒரு நாள் முக்கியமான நாளில் இந்த பிராண்டட் கோட் சூட் போடுவேன் அப்படின்னு நீங்க சொன்னீங்க. அது நம்ம அனிவர்சரி பார்ட்டியா இருக்கணும்னு நான் நினைச்சேன். அதனாலதான் கண்ணை மூடி வாங்கிட்டேன். இது என்னோட கிப்ட், கண்டிப்பா நீங்க போடணும்” என்று அஞ்சலி சொன்னாள்.

அதன் விலை 70 ஆயிரம் என்று போட்டிருந்தது. அவள் சேர்த்து வைத்திருந்த பணத்தில் முக்காவாசியைச் செலவழித்து இருக்கிறாள் என்பது விஜய்க்கு நன்றாகப் புரிந்தது. தனக்காக மெனக்கெட்டு, தனக்குப் பிடித்தமான ஒன்றைத் தேடித் தேடி வாங்கி இருப்பதால் மனைவி மீது அவனுக்கு அதிகக் காதல் ஏற்பட்டது. அவளை வாரி அணைத்துக் கொண்டவன், “ரொம்ப சந்தோஷமா இருக்கு. அது என்னன்னு தெரியல, ஆனா ஒன்னு… நம்ம அனிவர்சரி அன்னைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டான். அது என்னவாக இருக்கும் என்று அவளுக்குப் புரியவில்லை. அதே சமயம் தானும் அவனுக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சொல்லப் போகிறோம் என்று அவளும் ஒரு கனவுலகத்தில் கணவன் அணைப்பில் சுகமாக இருந்தாள்.

,,,,,

மறுநாள் மகிழ்ச்சி மற்றும் எதிர்பார்ப்புடன் தன் கணவனுக்காகப் பதுக்கி வைத்திருந்த பரிசைத் தருவதற்காக அஞ்சலி ஏதேதோ தயார் செய்து வைத்திருந்தாள். அதே சமயம் விஜய், சிம்லாவில் இருக்கும் ஒரு பழைய ரிசார்ட் ஒன்றை விலை கொடுத்து வாங்கி, அதை அஞ்சலி பெயரில் மாற்றி அமைத்திருந்தான். அங்கே இனி செட்டில் (Settle) ஆகி, இயற்கை வளம் சூழ்ந்த அந்த இடத்தில் நம் காலம் கழியட்டும் என்று அவளிடம் சொல்வதற்காக அந்தச் சர்ப்ரைஸைத் தயார் செய்திருந்தான். அஞ்சலியிடம் பிடித்த இடம் எதுவென்று கேட்டால், அவள் எப்போதும் ‘சிம்லா’ என்றே சொல்வாள். அந்த இடம் அவளுக்கு அவ்வளவு பிடிக்கும் என்று விஜய் அறிந்திருந்தான். அதனால் வாழ்நாளின் கடைசி வரை அஞ்சலியோடு சிம்லாவிலேயே வாழலாம் என்று அவன் முடிவெடுத்திருந்தான்.

இப்படி ஒருவருக்கொருவர் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை ஆரவாரம் இல்லாமல் அமைதியாகக் கணவன் மனைவி இருவரும் கட்டி அணைத்துத் திருமண வாழ்த்து தெரிவித்தனர். பிறகு இருவரும் காலையில் கோவிலுக்குச் சென்றனர். அதன்பின் ஒரு முக்கியமானவரைப் பார்க்க வேண்டி இருந்ததால், விஜய் தாம்பரம் தாண்டி இருக்கும் ஒரு ரிசார்ட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. “அனைவரும் மாலை ஆறு மணிக்குள் என்னுடைய ரிசார்ட்டிற்கு வந்துவிடுங்கள், அங்கே பார்ட்டி நடைபெறுகிறது” என்று அஞ்சலியிடம் சொல்லிவிட்டுச் சென்றான். விஜய் முற்றிலுமாக மாறிவிட்டான் என்று குடும்பத்தாரும் சந்தோஷப்பட்டார்கள்.

,,,,,,

இந்தச் சமயம் எதிர்பாராத ஒன்று நடந்தது. வினுஷாவின் தோழி ஒருத்தி தன் குடும்பத்தோடு சென்னைக்கு வந்திருந்தாள். வினுஷாவின் காதலன் (விஜய்), அவள் இறப்புக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து இப்போது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்ற தகவல் வர, அவள் தோழி காயத்ரிக்கு மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது. வினுஷா காதலிக்கும் சமயத்திலிருந்தே விஜய் ஒரு டாக்ஸிக்கான (Toxic) காதலன் தான் என்பது காயத்ரியின் கருத்து. “இப்படி ஒருத்தர் உனக்குத் தேவையா?” என்று அடிக்கடி வினுஷாவிடம் கேட்பதுண்டு.

‘எனக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு. அவரோட முரட்டுத்தனம் உனக்குத் தப்பா தெரியும், ஆனா அது எனக்கு அதிகபட்ச காதலா தெரியுது’ என்று வினுஷா அடிக்கடி சொல்வாள். காயத்ரிக்கு வினுஷாவின் பர்சனல் விவரங்கள் அனைத்தும் அத்துபடி. காயத்ரி வினுஷாவின் வீட்டிற்குப் பக்கத்தில் வசித்த மூர்த்தி அங்கிளின் மகள். தினமும் விஜய் வருவதும் போவதும் காயத்ரிக்குத் தெரியும். திருமணத்திற்கு முன்பாக இருவரும் எல்லை மீறியதை அறிந்த காயத்ரி சண்டை போட, ‘இது எங்களோட பர்சனல், நாங்க எப்படியோ ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்கத்தான் போறோம். அதுக்கு மேல நாங்க ரெண்டு பேரும் குளோஸாக (Close) இருக்கிறது உனக்கு என்ன வந்தது?’ என்று வினுஷா திட்டி அனுப்பிவிட்டாள்.

வினுஷா கர்ப்ப காலத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்பதை அருகில் இருந்து காயத்ரி பார்த்தாள். காயத்ரி திட்டி இருந்தாலும், தன் உயிர் தோழிக்குத் துணையாக இருந்தாள். பிறகு காயத்ரியின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவளும் அவள் அம்மாவும் டெல்லிக்குச் சென்றனர். மூர்த்தி மட்டுமே இங்கே இருந்து வினுஷாவைப் பார்த்துக் கொண்டார். வினுஷாவின் அபார்ஷன், விஜய்யின் அம்மா அவளை அழைத்துச் சென்றது, பின்னர் அவளது மரணம் என அனைத்தையும் தந்தை மூலம் கேள்விப்பட்ட காயத்ரிக்கு மிகுந்த ஆத்திரம் வந்தது. பாட்டியின் இறுதி ஆசையை நிறைவேற்றத் தன் மாமன் மகனைத் திருமணம் செய்து கொண்டு டெல்லியிலேயே காயத்ரி செட்டில் ஆகிவிட்டாள். அவளது தந்தை மூர்த்தியும் குடும்பத்தோடு டெல்லிக்குக் குடிபெயர்ந்தார்.

இப்போது கணவனின் பிசினஸ் மீட்டிங்கிற்காகச் சென்னை வந்த காயத்ரி, வினுஷாவின் மோசமான நிலைக்குக் காரணமான விஜய் இப்போது திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்வதைக் கண்டு கொதித்தாள். ‘வினுஷா அழுது கொண்டிருந்தது இவனுக்குத் தெரியவில்லையா?’ என்று ஆத்திரமடைந்தாள். காலையில் இருவரும் கோவிலுக்குச் சென்றதைப் பார்த்த காயத்ரிக்குக் கோபம் தலைக்கேறியது. ‘அந்தப் பெண்ணைக் காப்பாற்றப் போய்த்தானே வினுஷா தன் குழந்தையை இழந்தாள்? இப்போது அவளையே திருமணம் செய்திருக்கிறானா?’ என்று நினைத்த காயத்ரி, விஜயைப் பழிவாங்கத் துடித்தாள்.

அப்போது அவள் கணவன், “பிசினஸ் பார்ட்னர்ஸ் எல்லாரும் விஜய் அனிவர்சரி பார்ட்டிக்குப் போறாங்க. எனக்கும் இன்விடேஷன் வந்திருக்கு. நீ ஓகே சொன்னா நம்ம போயிட்டு வரலாம்” என்று சொல்ல, காயத்ரிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

மாலை நேரம் நெருங்கியது. காயத்ரி தன் கணவனுடன் பார்ட்டிக்கு வந்தாள். விஜய் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தான். காயத்ரி தன் கணவனுக்குத் தெரியாமல் விஜய் அருகே வந்து, “விஜய் அண்ணா” என்று அழைத்தாள்.

“ஏய் காயத்ரி! எப்படி இருக்க? பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு? நிறைய பர்சனல் பிராப்ளம், அதான் உன்னைக் காண்டாக்ட் பண்ண முடியல” என்று விஜய் அன்புடன் நலம் விசாரித்தான்.

காயத்ரி தன் குடும்பம், குழந்தைகள் பற்றிச் சொல்லிவிட்டு, “வினுதான் என் கூட இல்லை… சரி, உங்க லவ்வபில் வைஃப் (Lovable wife) எங்கே? அவங்களைப் பார்க்கணும்” என்று கேட்டாள். விஜய் அவளை நம்பி, “அவங்க ஃபர்ஸ்ட் புளோர்ல விஐபி ரூம்ல இருக்காங்க, போய் பாரு” என்று மேலே அனுப்பி வைத்தான்.

காயத்ரி ஒரு மிகப்பெரிய திட்டத்தோடு மேலே சென்றாள். அங்கே அஞ்சலி தேவதை போலத் தயாராகி வர, அவளுக்கு எதிரே காயத்ரி நின்றாள். “நீதான் விஜயோட ரெண்டாவது பொண்டாட்டியா? ஒரு கொலைகாரனோட பொண்ணு, இப்போ ஒரு பணக்காரனோட பொண்டாட்டி… வாழ்க்கை ஓசி மயமா இருக்கு போல” என்று எடுத்தவுடனேயே குத்திக் காட்டினாள் காயத்ரி.

“ஹலோ யார் நீங்க? ஏன் இப்படிப் பேசுறீங்க? வழி விடுங்க” என்று அஞ்சலி அவளை ஒதுக்கிச் செல்ல முயன்றாள்.

“உன் புருஷனோட முதல் தாரத்துக்கு உயிர் தோழி நான். உன்னாலதான் என் வினுஷா தன் குழந்தையை இழந்தாள். உங்க அப்பாவால் அவ உயிரே போச்சு. அவங்களோட காதல் தெரிஞ்சும், வெட்கமே இல்லாம இன்னொருத்தி புருஷன் கூடப் படுத்துகிட்டு இருக்கியே?” என்று காயத்ரி வன்மத்தைக் கக்கினாள். அஞ்சலி கண்களில் விழுந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, “ஹேய்… உனக்கு அவ்வளவுதான் லிமிட் (Limit). அவ இறந்து போனதுக்கு நான் என்ன பண்ண முடியும்? அவளுக்கு வாழக் கொடுப்பினை இல்லை. சிடுமூஞ்சி புருஷனைச் சகிச்சுக்கிட்டு அவளால இருக்க முடியல. என் புருஷன் இப்ப எனக்குத்தான் சொந்தம். எங்களைச் சண்டை மூட்டி விடப் பார்க்கிறியா?” என்று கோபமாகக் கேட்டாள்.

ஆனால் காயத்ரி விடவில்லை. “வினுஷாவை அவ்வளவு சீக்கிரம் விஜய் அண்ணா மறக்க மாட்டார். நீங்க ரெண்டு பேரும் நெருக்கமா இருக்கும்போது கூடக் கண்டிப்பா அவர் வினுஷா பெயரைத்தான் சொல்லி இருப்பார்” என்று வக்கிரமாகச் சொன்னாள். ஏற்கனவே அந்தப் பெயரால் பாதிக்கப்பட்டிருந்த அஞ்சலி, ஆத்திரத்தில் காயத்ரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

அதே சமயம் அங்கே வந்த விஜய், அஞ்சலி காயத்ரியை அடிப்பதைப் பார்த்தான். காயத்ரி இதைப் பயன்படுத்திக்கொண்டு, “வினுஷா பாவம்… அவளைப் பத்தி இப்படிலாம் பேசாதே” என்று ஒன்றுமே தெரியாதது போல் நடித்தாள். அஞ்சலி பின்னால் விஜய் இருப்பதை கவனிக்காமல், “எப்ப பார்த்தாலும் வினுஷா வினுஷா… அந்தப் பெயர் தொல்லை இல்லாம கொஞ்ச நாள் நானும் என் புருஷனும் நிம்மதியா இருக்கோம். அவதான் போய் சேர்ந்துட்டாளே, மறுபடியும் எதுக்கு அவ பேர் சொல்லி என் உயிரை எடுக்கிற? இப்போ இந்த உலகத்துல விஜய்க்குச் சொந்தம் நான் மட்டும்தான். அவளை மறந்துட்டு என் கூடச் சந்தோஷமா இருக்காரு. நீங்க அவளைப் பத்திப் பேசி மறுபடியும் எங்களுக்கிடையே விலகலை ஏற்படுத்தாதீங்க” என்று ஆத்திரத்தில் பேசிவிட்டாள்.

வினுஷாவின் தோழியிடம் அஞ்சலி இப்படிப் பேசுவதைக் கண்டு ஆத்திரமடைந்த விஜய், அஞ்சலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான். அஞ்சலி அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.


You may also like

Leave a Comment

About Me

Featured