Home ANTIHERO26) பார்வை 😍

26) பார்வை 😍

by sreejanovels
32 views

அத்தியாயம் 26

அவ்வளவுதான், இருந்த நம்பிக்கை மொத்தமாகப் பறிபோனது. தன் குழந்தை இறந்துவிட்டது என்ற செய்தி விஜய்யை மேலும் மேலும் உலுக்கியது. இதைத்தானே எட்டு வருடங்களுக்கு முன்பும் அனுபவித்தான்? மீண்டும் அதே வலி! தன்னால் இரண்டு பெண்களின் வாழ்க்கை வீணானதே, இருவருமே குழந்தையை இழந்து நிற்கிறார்களே என்று வருந்தினான். முதல் குழந்தையாவது ஒரு விபத்தில் சென்றது, ஆனால் இது தன்னால் நேர்ந்த ஒரு மோசமான செயல். பெற்ற தந்தையே அந்த குழந்தையின் மறைவுக்குக் காரணம் என்றால், அது எவ்வளவு பெரிய துரோகம்! இப்போது அஞ்சலியிடம் என்ன பேசுவது என்று புரியாமல் திகைத்து நின்றான் விஜய்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல சுயநினைவு (Consciousness) வந்துடும். யாராவது போய் பேசணும்னா பேசுங்க. அவங்க ரொம்ப மன உளைச்சலில் இருக்காங்க, அதனால கூட இப்படி ஆகிருக்கலாம். கொஞ்சம் கவுன்சிலிங் (Counseling) கூட்டிட்டு வாங்க. சரி, இப்போ யார் போறீங்களோ போங்க,” என்று மருத்துவர் கூறிச் சென்றார். விஜய் முதல் ஆளாக உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டான். அனைவரும் என்ன நடக்கிறது என்று வெளியே பொறுமையாகக் காத்திருந்தனர். அங்கே ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து, கண்கள் சொருகிய நிலையில் அஞ்சலி இருக்க, அவளை நெருங்கவே அவன் பயந்தான்.

தன் வாழ்வில் தான் வராத சமயம் அவள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள்? அவளைத் தன் வாழ்க்கைக்குள் அழைத்து வந்தது மட்டுமல்லாமல், அவள் நிம்மதியையும் கெடுத்துவிட்டோமே என்று குற்ற உணர்வு மேலோங்கியது. ஆனால் ‘ஸ்ரீனிவாசன்’ என்கிற ஒற்றைப் பெயரால் அவள் மீதான காதல் எல்லாம் செத்து மடிந்துவிடுகிறது. தந்தை செய்த தவறுக்கு இந்தப் பெண் என்ன செய்வாள்? அப்போதெல்லாம் இவள் விவரம் தெரியாத சிறுமிதானே? சிறு வயதிலிருந்தே தன்னை நேசித்த பெண்ணை இப்படி வதைத்துச் சித்திரவதை செய்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி இன்னும் அதிகரித்தது. ஆனால் என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை.

கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மெல்லக் கண்கள் திறந்த அஞ்சலி, தன் கணவனை அடிபட்ட பார்வையால் பார்த்தாள். அவ்வளவுதான், பொங்கி வந்த அழுகையோடு தன் மனைவி கரங்களைப் பிடித்துக்கொண்டு விஜய் கதற ஆரம்பித்தான்.

“எதுக்காக அழுறீங்க? நீங்க என்னைத் தப்பா நினைச்சுப் பேசிட்டீங்க. நான் அந்த ரெஸ்டாரண்ட்டுக்குப் போனது, நான் பிரக்னண்டா (Pregnant) இருக்குற விஷயத்தை உங்களுக்குச் சர்ப்ரைஸ் (Surprise) பண்ணத்தான். இன்னைக்கு நைட் கேண்டில் லைட் டின்னருக்கு அங்கே வேலை பார்க்குற என் பிரண்ட்கிட்ட சொல்லியிருந்தேன். அதுக்காகத்தான் அரேஞ்ச்மென்ட்ஸ் (Arrangements) பார்க்கப் போனேன். அவன் எனக்கு ரொம்ப குளோஸ் (Close), இனியன் அண்ணாவுக்கும் அவனைத் தெரியும். அவன் எப்பவுமே நட்பு ரீதியாத்தான் பழகுவான், தப்பான நோக்கத்தோடு இதுவரை என்னை தொட்டது கிடையாது. நீங்க என்னைத் தப்பாப் பார்த்துட்டுத் தப்பாப் பேசிட்டீங்க. இப்பவும் சொல்றேன், எப்பவும் சொல்வேன்… என் பெண்மையை முதலும் கடைசியுமாக இழந்தது உங்ககிட்ட மட்டும்தான். இனிமே என்னைப்பரிந்துக்கப் பாருங்க, இல்லைன்னா என்னை விட்டுடுங்க. இதைத்தான் உங்ககிட்ட கேட்க முடியும். இழக்கக் கூடாததை இழந்து நிக்கிறேன், இதுக்கு மேல எனக்குச் சக்தியில்லை,” என்று வேதனையில் துடிக்கத் துடிக்க அவள் சொல்ல, விஜய் மொத்தமாக உடைந்து போனான்.

அதன்பிறகு அஞ்சலிக்கு அவன் தென்படவே இல்லை. கடைசியாக மருத்துவமனையில் பார்த்ததுதான், அதன் பிறகு அவள் கண்களில் அவன் படவே இல்லை. அவளோ வெறுப்பு நிறைந்த பார்வையோடு இருந்தாள். இது சரிப்பட்டு வராது என்றுணர்ந்த அஞ்சலி, இரண்டு மாத விடுமுறைக்குப் பிறகு தன்னைச் சரிப்படுத்திக்கொண்டு, எம்பிஏ (MBA) இரண்டாம் ஆண்டு படிப்பில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தாள்.

படிப்பு, படிப்பு மட்டுமே அவளுக்கு முக்கியமாக இருந்தது. எம்பிஏ முடித்து என்ன செய்யலாம் என்று தன் நண்பர்களுடன் ஆலோசித்து வந்தாள். காலையில் விஜய் வேலைக்குச் சென்றுவிடுவான், இரவு வருவான். அவன் வரும்போது அஞ்சலி உறங்கிக்கொண்டிருப்பாள். அவன் காலையில் எழும்போது அஞ்சலி அங்கே இருக்க மாட்டாள். கல்லூரிப் பையை எடுத்துக்கொண்டு, “போய் வருகிறேன்” என்று சொல்வது போல் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்வாள். இருவருக்கும் எந்த ஒரு ஒட்டுதலும் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்தது. ஏற்கனவே அமைதியானவள், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு வீட்டில் இருப்பவர்களுடன் கூட அதிகம் பேசவில்லை. இனியன் அல்லது இசை யாராவது வந்து பேசினால்தான் உண்டு.

இப்படி இருக்கும்போதுதான், தங்களின் பிசினஸ் பார்ட்னர் (Business Partner) ஒருவருக்கு அறுபதாம் கல்யாண விழா வந்தது. அது ஒரு பார்ட்டி (Party) போல நடைபெற இருந்தது. அனைவரும் கணவன் மனைவியாக வரவேண்டும் என்று அழைப்பு வந்தது. இதை அஞ்சலியிடம் சொல்ல வேண்டுமென்று அவளுக்காகக் காத்திருந்தான் விஜய். அவள் கல்லூரி விட்டு வந்து அறைக்குள் நுழையும்போது விஜய் அங்கே இருந்தான். “இந்த நேரத்தில் இவன் இருக்க மாட்டானே, என்ன ஒரு ஆச்சரியம்” என்பது போல் அவனைப் பார்த்தாள்.

“இப்படி நம்ம லைஃப் (Life) போனா நல்லா இருக்காது அஞ்சு. எனக்குக் கொஞ்சம் வாய்ப்பு கொடு, டைம் (Time) கொடு. என் மனசை மாத்திக்க நானும் முயற்சி பண்றேன். இன்னைக்கு ஈவினிங் ரெடியா இரு, ஒரு பார்ட்டிக்குப் போறோம். அங்கே உனக்கு ஒரு மாறுதல் கிடைக்கும்,” என்று சொன்னான். சரி என்று அஞ்சலி அவன் உடைக்கு ஏற்றவாறு சிகப்பு நிற லெஹங்கா அணிந்து தயாரானாள். அவனும் சிகப்பு நிற ஷெர்வானி அணிந்திருந்தான். இருவரும் புதுமணத் தம்பதிகளுக்கான பொலிவோடு காணப்பட்டனர். அவர்களுக்குத் திருமணமாகி ஏழு மாதங்கள் ஆகிவிட்டன.

பல மாதங்களுக்குப் பிறகு கணவன் மனைவி ஒன்றாகச் செல்கிறார்கள், எந்தப் பிரச்சினையும் இருக்கக் கூடாது என்று ராதா இறைவனை வேண்டிக்கொண்டார்.

அங்கே ஒரு மூத்த தம்பதிகளுக்கு அறுபதாம் திருமண விழா. கோவிலில் சிறப்பாகக் கல்யாணம் முடிந்து, பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அங்கே இருந்த அந்தத் தம்பதிகள்தான் விஜய்யின் திருமண வரவேற்பின் போது வாழ்த்திச் சென்றவர்கள். அவர்களுக்குத்தான் அறுபதாம் கல்யாணமா என்று மகிழ்ச்சியோடு அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பிறகு கணவன் மனைவி ஜோடியாகச் சாப்பிடச் சென்றனர். தன் மனைவியின் அழகைப் பார்த்துக்கொண்டே வந்த விஜய், “அழகா இருக்க அஞ்சலி” என்று அவளது அங்க லாவண்யங்களைப் புகழத் தொடங்கினான். சூழ்நிலை மறந்து அஞ்சலியும் அவனோடு சிரித்துப் பேசினாள்.

“ஏய் இங்க பாருங்கப்பா! ரொம்ப நாள் கழிச்சு இந்த கப்பிள் (Couple) இப்பதான் வெளியே வந்திருக்காங்க. மேடம் காலேஜ் எல்லாம் எப்படிப் போகுது? சார் ஆபீஸ் வேலை நல்லா பார்க்கிறாரா இல்ல வீட்டிலேயே இருக்காரா?” என்று நண்பர்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. இப்படி மகிழ்ச்சிக்குக் குறைவில்லாமல் அந்த விழா சென்றது.

சுற்றி நல்ல நண்பர்கள், திருமண வாழ்க்கை பற்றிய நல்ல அறிவுரைகள் என அனைத்தும் அவர்களுக்கு ஒரு மாற்றத்தைத் தந்தது. நான்கு மாத காலம் சரியாகப் பேசாமல் இருந்தவர்கள், இப்போது ஒருவரை ஒருவர் வெட்கத்தோடு பார்ப்பதும் பின் விலகுவதுமாக இருந்தனர். அவளிடம் நெருங்குவதற்கு அவனுக்குக் கூச்சம், அவனிடம் பேசுவதற்கு அவளுக்கு வெட்கம். இப்படி ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடந்தது.

இதற்கிடையில் அஞ்சலிக்குத் தேர்வுகள் வந்ததால் படிப்பில் கவனம் செலுத்தினாள். விஜய் அவளைத் தொந்தரவு செய்யாமல், அவளுக்குச் சந்தேகங்கள் வரும்போதெல்லாம் சொல்லிக் கொடுத்தான். முன்பு போல் இல்லாமல் நண்பர்களாக வெளியே செல்ல ஆரம்பித்தனர். குழந்தைகளோடு அதிக நேரம் செலவிட்ட அஞ்சலிக்கு, மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை வந்தது. மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டதில் எல்லாம் சரியாக இருக்கவே, அடுத்த குழந்தைக்குத் திட்டமிட இருவரும் தயாராக இருந்தனர். ஆனால், அந்தச் சந்தர்ப்பம் ஒரு நல்ல சூழ்நிலையில் உருவாக வேண்டும் என்று பொறுமை காத்தனர்.

அந்த நல்ல தருணமும் வந்தது…


You may also like

Leave a Comment

About Me

Featured