அத்தியாயம் 21
மறுநாள் காலை, தாம்பத்தியத்தில் கணவனோடு உயிரோடு உறவாக இணைந்த பெண்ணின் முகத்தில் காணப்படும் கலைப்பொலிவு அஞ்சலியின் முகத்தில் இல்லை. ஏதோ கடமைக்கு எழுந்து தலைக்குக் குளித்துவிட்டு, ஒரு சாதாரணச் சுடிதார் அணிந்து பூஜை அறைக்கு வந்து கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள் தன்னுடைய வாழ்வுக்காக.
‘சின்ன வயதிலிருந்து அப்பன் பெயர் தெரியாதவள், உன் அம்மா ஒரு வேசி அப்படின்னு நாங்க இருந்த ஊரில் சொந்தக்காரர்களால் கேவலப்பட்டது ஏராளம். இருந்தாலும் அம்மா மனதளராமல் என்னைப் படிக்க வைச்சாங்க. அதுக்கப்புறம் அந்த ஊரில் இருக்க முடியாமல் இங்கே வந்தேன். யாரோ ரவுடிகள் அப்பாவோட பெயர் சொல்லி என்னைக் கடத்திட்டுப் போனாங்க. அப்புறம்தான் தெரியுது எங்க அப்பா ஒரு தப்பான வழியில் இருக்கிறவர், அதனால் அம்மா ரோஷம் கொண்டு பிரிந்திருக்காங்கன்னு. கண்ணியமாக இருக்கிற எங்க அம்மாவைத் தப்பாப் பேசினாங்க, ஆனா எங்க அப்பாவை ஊர் எதுவுமே பேசலை. அவரைச் சாக்கா வச்சு எனக்குத்தான் மோசமான சில சம்பவங்கள் நடந்தது. என்னைக் காப்பாற்றப் போய் ஒரு அக்கா தன்னுடைய குழந்தையையும் தனது உயிரையும் இழந்து நிக்கிறாங்க. “செத்தாலும் கொடுத்தான் சீதக்காதி” அப்படின்னு சொல்ற மாதிரி, அவங்க இறந்த உடனே அவங்களோட துடிக்கும் இதயம் ஏற்கனவே இருதய நோயாளியாக இருந்த எனக்குப் பொருத்தப்பட்டுப் பிழைக்க வைச்சது.
ஆனால் அதற்கு முன்னாடியே இந்த ஊருக்கு வந்த புதுசில், பிரண்ட்ஸ் எல்லாருமே சேர்ந்து போன ஹோட்டலில் நான் விஜய்யைப் பார்த்தேன். அவரோட கம்பீரம், நடை, உடை, பாவனை எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அவரை மாதிரி ஒரு புருஷன் நமக்கு வந்தா எப்படி இருக்கும்னு அந்தப் பருவ வயதுக் கோளாறில் எனக்கு நிறையத் தோணுச்சு. ஆனா என் உயிரைக் காப்பாற்ற அவர் வரும்போது ஏதோ ஹீரோ வந்த மாதிரி தோணுச்சு. இருந்தாலும் அது இன்னொருத்தருடைய புருஷன்னு அவரை நினைக்கும் பொழுது மனசு வேதனையா இருந்துச்சு. அப்படியே விட்டுட்டேன். என்னோட உயிர் போய் உயிர் வந்த பிறகு அந்த அக்கா உயிரோடு இல்லை என்கிற விஷயம் தெரிஞ்ச பிறகு என்னால இருப்புக் கொள்ளவே முடியலை. விஜய்யை நினைச்சு ரொம்ப வேதனைப்பட்டு எட்டு வருஷம் அவர் இந்த ஊரில் இல்லை, அவரைப் பார்க்க முடியாதுன்னு சொல்லும் பொழுது இன்னும் இன்னும் வருத்தமா இருந்துச்சு. இருந்தாலும் எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டுத் தவிச்சுக்கிட்டு இருக்கும் பொழுது கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் அவரை மறுபடியும் பார்த்தேன். அவர் பார்வையில எனக்குன்னு ஒரு தனி இடம் கிடைச்ச மாதிரி ஒரு உணர்வு. இப்பதான் புரியுது அவர் எனக்கு இடம் கொடுக்கலை, அவங்க மனைவி இதயத்துக்காக எனக்கு இடம் கொடுத்திருக்கிறார். போனாப் போகட்டும்னு பரிதாபப்பட்டு, நானும் அவரை விரும்புற விஷயம் தெரிஞ்சுக்கிட்டு எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார். இவ்வளவுதான் எனக்கு இருந்தது, மத்தபடி அப்படி ஒண்ணும் எனக்குச் சந்தோஷம் ஒண்ணும் கிடைக்கவே இல்லையே. இனிமே எதையும் எதிர்பார்க்காமல் எனக்குக் கல் மனசு கொடுத்துடு இறைவா! என் புருஷன் எது பண்ணாலும் தாங்கிக்கணும். அவர் நேத்து பேசினது உண்மை… அப்பாவைப்பழி வாங்குறதுக்காகவும் அவர் மனைவி இதயத்துக்காக மட்டும்தான் அவர் கூட இருக்கேன். எனக்கு அவர் மேல காதல் வர வேண்டாம், ஆசையும் வர வேண்டாம். இப்படி இருந்துட்டுப் போறேன்’ என்று மனம் உருக இறைவனை வேண்டிக் கொண்டிருந்தாள்.
அவள் முன்பாக வந்து நின்றார் ராதா. அவளின் கலங்கிய முகம் மூத்தவராக ஏதோ ஒன்றை அவருக்கு உணர்த்தியது. அதை என்னவென்று கேட்பதற்குச் சற்றுச் சங்கடம், ஆனால் அஞ்சலி தன் முன்பாக நிழல் ஆடுவதைப் புரிந்து கொண்டு தன் துக்கத்தைத் தன்னோடு புதைத்துக் கொண்டு சிரித்த முகமாகக் கண் திறந்து பார்த்தாள். தன்னுடைய மாமியாரைப் பார்த்து “குட் மார்னிங் அத்தை” என்று சொன்னாள்.
“எனக்கு குட் மார்னிங் தான், ஆனா மார்னிங் உனக்கு குட்டா (Good) இல்ல பேடா (Bad)? ஒரு இடத்துல ஏதோ ஒன்னு நடந்திருக்கும். ரொம்பக் கஷ்டப்பட்டுக் கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்க. நான் உன்கிட்ட எச்சரிக்கை செய்துதானே இருந்தேன், நீ புரிஞ்சுக்கவே இல்லையே? பெத்த அம்மா எனக்குத் தெரியாதா என் புள்ளையைப் பத்தி? சரியான சுயநலவாதி, கிட்டத்தட்ட அவங்க அப்பா மாதிரிதான் அவனுக்கும் கோபம் வரும். ஆனா நீ எல்லாம் மாத்தி விடுவ அப்படின்னு சவால் விட்ட, ஆனா கல்யாணமான மறுநாள் கண்ணைக் கசக்கிட்டு இருக்க… சொல்லு என்ன ஆச்சு?” என்று ராதா அவளைப் பிடித்துக் கேட்க ஆரம்பித்தார்.
இப்பொழுது அல்ல, பல வருடங்களுக்கு முன்பாகவே ஒரு நாள் விஜய் புகைப்படத்திற்கு அவள் ரகசியமாக முத்தம் கொடுக்கும் போது அதை பார்த்த ராதா அவளைத் தனியாக விசாரித்தார். “எனக்கு அவரைப் பிடிக்கும்” என்று சொன்ன சிறு பெண்ணைப் பார்த்து அவருக்கு வேதனைதான். அவன் ஒரு சுயநலக்காரன், மனைவி இறந்தவுடன் எல்லாரையும் ஒதுக்கிவிட்டுச் சென்றவன், அவனைப் போய் நேசிக்கிறாயே என்று கேட்டால், “இது காதல்… ஒரு முறை என்னிடம் வந்தால் நிச்சயம் அவரை மாற்றி விடுவேன்” என்று அவள் சொன்னது இன்னும் அவருக்கு ஞாபகம் இருந்தது. மீண்டும் அவன் வரும்பொழுது ராதா எவ்வளவு எச்சரிக்கை செய்தும் காலம் போகும் போக்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் பேச்சைக் கேட்காமல் வயதுக் கோளாறு, ஆசை, காதல் அனைத்தும் அவள் கண்ணை மறைத்துவிட்டது. இப்பொழுது கல்யாணமான மறுநாள் கடவுள் முன்பாக வந்து அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருக்கிறாள். ‘இவளை வெட்டவா’ என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தார் ராதா.
“நீங்க என்னைப் பார்க்கும்போதே தெரியுது, கண்டிப்பா நான் மொக்கைதான் வாங்கிட்டேன். உங்ககிட்டப் பெருசா இவள் மாதிரி சபதம் போட்டேன் ஆனா ஒண்ணும் நடக்கல. அவர் இன்னும் எதையும் மறக்கல, இருந்தாலும் என்னைப் பிடிச்சிருக்கு போல… இப்படியே இருந்துட்டுப் போறேன்” என்று மிகவும் வருத்தமாகச் சொல்ல, ராதா அவள் தலை வருடி “எல்லாம் நன்மைக்கே” என்று அவள் நெற்றியில் குங்குமம் வைத்தார். பிரிட்ஜில் (Fridge) இருந்த மல்லிகைப் பூவை எடுத்து வைத்து, விஜய்க்கு மிகவும் பிடித்த பிளாக் காபி (Black Coffee) போட்டு “அறைக்குச் சென்று அவனை எழுப்பி விடு” என்று சொல்ல, அவளும் சரி என்று விரித்த தலைமுடியில் மல்லிகைச்சரம் மணக்க, கையில் காபி கப்போடு தன் அறைக்குள் சென்றாள். கணவனை மெதுவாகக் கண்ணாடி வளையல் குலுங்க எழுப்பினாள்.
“இன்னும் கொஞ்ச நேரம் பேப்ஸ் (Babs)… ரொம்பக் களைப்பா இருக்கு” என்று குப்புறப் படுத்துத் தூங்கினான் விஜய்.
“என்னங்க நேரமாச்சு, எழுந்திருங்கள்” என்று மெதுவாக அவனைப் பிடித்து எழுப்ப, எரிச்சலடைந்து கண்ணைத் திறந்தான். புதிதாகப் பூத்த ரோஜா போல், வைர முத்துக்களாக வேர்வை சிந்த, தலையில் மல்லிகைப் பூ வாசனை வீச நின்றிருந்த அஞ்சலி அவனை ஈர்த்தாள். புது மனைவி பிரகாசமாகத் தன்னை நோக்கிக் காபியுடன் நிற்பதைப் பார்த்ததும், எழுந்தவன் அந்தக் காபியை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு அவளை அப்படியே இழுத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
“காலையில என்னங்க இது? போய் குளிச்சு காபி குடிச்சுட்டு ரெடியாயிட்டு வாங்க” என்று அக்மார்க் புது மனைவியாகச் சற்று வெட்கப்பட்டாள்.
“நேத்து நைட் ஒண்ணுமே இல்லாமத்தானே என் கூடப் படுத்த? அப்போ வேகம் ஜாஸ்தியாதானே இருந்துச்சு? அப்போ நல்லாதானே இருந்த? இப்ப மட்டும் எதுக்கு வெட்கப்பட்டு காமெடி பண்ற? எனக்கு இந்த மாதிரி எல்லாம் பிடிக்காது. உன்னால காலையில மூட் ஸ்பாயில் (Mood Spoil) ஆயிடுச்சு… போய் தொலை!” என்று அப்படியே அவளைக் கீழே தள்ளிவிட்டுப் பாத்ரூம் சென்றுவிட்டான்.
என்ன கணவன் இவன் என்பது போல், அவன் கீழே தள்ளிவிட்ட அவமானம் ஒரு பக்கம், அதுவும் “என்னுடம் படுத்துச் செய்த…” என்று ஒரு வேசியைப் பார்த்துப் பேசுவது போல் அவன் பேசும் விதம் அனைத்தும் அவள் மனதைச் சுக்குச் சுக்காக உடைத்துக் கொண்டிருந்தது.
‘எத்தனையோ பேர் எவ்வளவோ எச்சரிக்கை கொடுத்தும் நீ இவர்தான் வேணும்னு கல்யாணம் பண்ணிக்கிட்ட… நீதான் அனுபவிக்கணும். அடுத்தவ புருஷனைக் கல்யாணம் பண்ணா இதுதான் கதி’ என்று அவள் மனசாட்சி காரித் துப்பிக் கொண்டிருந்தது. ‘யார் அடுத்தவர் கணவன்? இப்பொழுது அவன் என்னுடைய கணவன். அவன் மனைவி இறந்து போன பிறகு நான் திருமணம் செய்து கொண்டேன். உயிரோடு இருக்கும்போது படுக்கையில் பங்கு போடவில்லை’ என்று அவள் தன்மானம் கொண்ட மூளை ஒரு பக்கம் பட்டிமன்றம் நடத்த, அதையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தன் கண்களைத் துடைத்துவிட்டுப் படுக்கையைச் சரி செய்து நிமிர்ந்து பார்த்தாள். சரியாக அவன் குளித்து முடித்து வந்து அந்தக் காபியை எடுத்து வாயில் வைத்தான்.
“வேணாம்… குடிச்சுட்டுத் துப்பிச் சூடு ஆறிப்போச்சுன்னு என்னைத் திட்ட வேண்டாம். நானே சூடா காபி கொண்டு வர்றேன்” என்று ஏதாவது பேசி விடுவானோ என்ற பயத்தில் அவனைப் பார்த்துச் சொன்னாள்.
“அந்த அளவுக்கு ஓவரா எல்லாம் பேச மாட்டேன். காபி பரவால்ல நல்லாதான் இருக்கு. சரி டிரஸ் மாத்திட்டு வர்றேன். இனிமே என்கிட்ட ஓபனா (Open) தான் இருக்கணும். இந்த வெட்கப்படுவது, சிணுங்குறது எல்லாம் வேண்டாம். நீ என்னோட வைஃப் (Wife), நான் உன்னோட ஹஸ்பன்ட் (Husband). உன்கிட்ட எப்பவுமே நான் ஓபனா இருப்பேன், அதே மாதிரி நீயும் இருக்கணும்” என்று சொல்லிக் கொண்டே அவள் இதழுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டுச் சென்றான்.
கொஞ்ச நேரத்திற்கு முன்பாகத் தன் வாழ்க்கையை நினைத்துப் பயந்தவள், ‘கணவனிடம் வெளிப்படையாக இருக்க வேண்டும் அவ்வளவுதானே… இருந்து விடுவோம்’ என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு கீழே சென்றாள். சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்மணிக்கு ஒத்தாசையாக அவளும் காலை உணவைச் செய்து முடித்து டைனிங் டேபிளில் அடுக்கி வைத்தாள். அனைவரும் தங்கள் வேலைக்குக் கிளம்புவதற்காக வந்தனர். குழந்தைகளும் அவளைச் சுற்றிக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
“நீங்கதான் எங்க விஜய் அண்ணாவைக் கல்யாணம் பண்ணிக்குவீங்கன்னு எக்ஸ்பெக்ட் (Expect) பண்ணவே இல்லை. நான் மட்டும் உங்களை அண்ணி அப்படிக் கூப்பிடணுமா? மத்தவங்க எல்லாரும் உங்களை அத்தைன்னு கூப்பிடுவாங்களாம்” என்று குட்டி வினுஷா அவளைப் பார்த்துச் சொன்னாள்.
“ஆமாம், விஜய் உனக்கு அண்ணா, அதனால நீ என்னை அண்ணின்னு கூப்பிடணும். மத்தவங்களுக்கு விஜய் மாமா, அதனால என்னை அத்தை இல்ல மாமின்னு கூப்பிடலாம். சரி, உங்க எல்லாருக்கும் ஸ்கூல் டைம் ஆயிடுச்சு இல்ல? சீக்கிரம் சாப்பிடுங்க. உங்க எல்லாருக்கும் லஞ்ச் பேக் (Lunch bag) ரெடியா இருக்கு. உங்க நேம் ஸ்டிக்கர் போட்டு இருக்கிற பேக் எடுத்துக்கிட்டுச் சமத்தா எல்லாரும் வெயிட் பண்ணுங்க. நானே உங்களை வேனில் ஏத்தி விட்டுட்டு வர்றேன்” என்று அஞ்சலி அனைவருக்கும் பரிமாற, அனைவரும் அவள் சமையலை ஆகா ஓகோ என்று புகழ்ந்து கொண்டிருந்தனர்.
அப்போது விஜய் வர, அனைவரும் அவனைப் பார்த்துச் சிரிக்க, அவன் எந்த ஒரு அலட்டலும் இல்லாமல், தான் எப்போதும் போலத்தான் இருக்கிறேன் என்பது போல் காட்டிக் கொண்டு பந்தாவாகத் தனக்கென இருக்கும் நாற்காலியில் அமர்ந்தான். “டிபன் போடு” என்பது போல் மனைவியைக் கண்காட்ட, அவளும் பயந்து பரிமாறினாள். ‘மனைவியைக் கையில் வைத்து ஆடுகிறான், நாங்கள் எல்லாம் ஏமாந்து விட்டோம்’ என்பது போல் மற்ற கணவன்மார்கள் அனைவரும் பெருமூச்சு விட்டனர்.
அனைவருக்கும் பிடித்திருக்கிறது என்றால் நிச்சயம் கணவன் சாப்பிட்டு அமைதியாக இருப்பான், இல்லை தன்னைத் புகழ்வான்… இரண்டில் ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலிக்கு மிகவும் ஏமாற்றமான ஒரு விஷயம் நடந்தது. இட்லியை ஒரு வாய் வைத்த பிறகு அப்படியே அதைத் துப்பி, தட்டைக் காற்றில் விசிறியடித்துவிட்டு, சாப்பிட்டுக் கொண்டிருந்த எச்சில் கையோடு அவள் கன்னத்தில் பலமாக ஒரு அறை போட்டான்.
அவன் அடித்த வேதனையில் அப்படியே அவன் அருகில் இருக்கும் இருக்கையில் பொத்தென்று அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் அஞ்சலி. விஜய் ஒரு நொடியில் தான் என்ன செய்தோம் என்று புரியாமல் அதிர்ச்சியாக அமர்ந்திருந்தான். அனைவரும் அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.