அத்தியாயம் 2
மெக்சிகோ சிட்டியின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் ‘மெர்காடோ டி சான் ஜுவான்’ . இது வெறும் சந்தை மட்டுமல்ல, மெக்சிகோவின் ஆன்மா அங்கேதான் குடியிருக்கிறது என்று சொல்லலாம். விதவிதமான உலர்ந்த மிளகாய்கள், நறுமணம் வீசும் காபி கொட்டைகள், கைவினைப் பொருட்கள் என அந்த இடமே ஒரு வண்ணமயமான ஓவியம் போலக் காட்சியளித்தது.
காயத்ரி இன்று தன்னை ஒரு சுற்றுலா பயணியாக தயாரித்துக் கொண்டாள். மெல்லிய சந்தன நிற டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ். அவளது தோளில் ஒரு துணிப் பை , அதற்குள் அவளது நவீன கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்தது.அவளுடைய இன்றைய மிஷன்: ஆண்டனியின் ஆட்கள் இந்தச் சந்தையில் இருக்கும் வியாபாரிகளை எப்படி மிரட்டி வசூல் செய்கிறார்கள் என்பதுதான்.
“அடேங்கப்பா பார்ப்பதற்கு இந்த மார்க்கெட் எவ்வளவு அழகாக இருக்கிறது, ஆனால் இங்கே தான் இவ்வளவு அநீதியா?” என்று மனதிற்குள் நினைத்தபடி, ஒரு கடையின் ஓரமாக நின்று ‘டாகோஸ்’ சாப்பிடுவது போல சுற்றி நோட்டமிட்டு கொண்டிருந்தாள். அந்த காரமான சாஸ் அவளது நாவில் ஒரு சிறு எரிச்சலைத் தந்தது.
“அப்பா… இந்தியாவை விட மெக்சிகோ காரம் அதிகமா இருக்கே!” என்று மெல்ல முணுமுணுத்தாள்.திடீரென்று சந்தையின் ஒரு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.—மூன்று முரட்டு ஆட்கள், கையில் இரும்புத் ராடுகளோடு ஒரு முதியவரின் கடையை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.
அவர் ஒரு ஏழை மெக்சிகன் வியாபாரி, பாரம்பரிய மரச் சிற்பங்களை விற்றுக்கொண்டிருந்தார்.”எங்க டான் அன்டோனி கேட்ட பணத்தை ஏன் இன்னும் கொடுக்கல? இங்க வியாபாரம் பண்ணனும்னா வரி கட்டணும்னு தெரியாதா?” என்று ஸ்பானிஷ் மொழியில் ஒருவன் கத்தினான்.அந்தப் பெரியவர் நடுங்கிக்கொண்டே கெஞ்சினார். காயத்ரிக்கு ரத்தம் கொதித்தது.
அவளது கிரிமினாலஜி மூளை ‘இப்போது தலையிடாதே, இது உனக்கு ஆபத்து’ என்று எச்சரித்தது. ஆனால், அவளது இந்தியப் பெண்ணின் வீரம் அவளைச் சும்மா இருக்க விடவில்லை.”ஏய்! நிறுத்துங்க!” – காயத்ரியின் குரல் அந்தச் சந்தையின் இரைச்சலையும் மீறி கணீரென்று ஒலித்தது.அந்த மூன்று ரவுடிகளும் திரும்பிப் பார்த்தார்கள்.
ஒரு மெல்லிய இளம்பெண் தங்களைத் தட்டிக் கேட்பதைக் கண்டு அவர்கள் ஏளனமாகச் சிரித்தார்கள். “என்னடி… புதுசா வந்திருக்க போல? உனக்கு என்ன வேணும்?” என்று ஒருவன் அவளை நெருங்கினான்.காயத்ரி பயப்படவில்லை. அவளது கண்கள் கோபத்தில் ஜொலித்தன.
“ஒரு பெரியவரைத் துன்புறுத்த உங்களுக்கு வெட்கமா இல்லையா? உடனே இங்கிருந்து கிளம்புங்க, இல்லனா போலீஸைக் கூப்பிடுவேன்!”அவன் காயத்ரியின் கையைப் பிடிக்க முயன்றான். காயத்ரி தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றவள். அவள் அவனது கையைத் திருப்பி ஒரு அழுத்தம் கொடுத்தாள்.
அவன் அலறினான்.அப்போது, தூரத்தில் ஒரு கறுப்பு நிற எஸ்யூவி கார் வந்து நின்றது. அதன் கண்ணாடிகள் கறுப்பாக இருந்ததால் உள்ளே யார் இருப்பது என்று தெரியவில்லை. ஆனால், அந்த காரைப் பார்த்தவுடனேயே அந்த ரவுடிகளின் முகத்தில் ஒருவிதமான மரண பயம் தெரிந்தது.—காரின் கதவு திறந்தது. ஒரு கால் தரை இறங்கியது – அது பளபளக்கும் ஒரு பிராண்டட் ஷூ.
அதன்பிறகு அந்த ஆறடி உயரத்தில் ஒரு மனிதன் வெளியே வந்தான்.அவன் வேறு யாருமல்ல, டேவிட் மில்லர் தான்.இன்று அவன் ஒரு வெள்ளை நிற லேனின் சட்டையும், கறுப்பு நிறப் பேண்ட்டும் அணிந்திருந்தான். அவனது சட்டையின் முதல் இரண்டு பட்டன்கள் திறந்திருக்க, அவனது மார்புத் தசைகள் லேசாகத் தெரிந்தன. வெயிலில் அவனது கண்கள் இன்னும் கூர்மையாகத் தெரிந்தன.டேவிட் மெதுவாக நடந்து வந்தான். அவனது ஒவ்வொரு அடியும் ஒரு சிங்கத்தின் நடை போல இருந்தது.
சந்தையில் இருந்த மக்கள் அனைவரும் அப்படியே அமைதியாகி வழிவிட்டார்கள்.அவன் அந்த ரவுடிகளின் முன்னால் வந்து நின்றான். காயத்ரியை ஒரு நொடி ஏறிட்டுப் பார்த்தான். அவனது பார்வையில் ஒரு வியப்பு இருந்தது – ‘யார் இந்தப் பெண்? இந்த மரணக் களத்தில் இவ்வளவு தைரியமாக நிற்கிறாளே!’ என்று அவன் நினைத்திருக்கலாம்.”என்ன நடக்குது இங்க?” – டேவிட்டின் குரல் அமைதியாக இருந்தாலும், அதில் ஒரு கட்டளை இருந்தது.”அது… சார்… ஆண்டனி சார் சொன்னாருன்னு…” என்று அந்த ரவுடி திக்கித் திணறினான்.டேவிட் அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தான். அந்த ரவுடி நிலத்தில் போய் விழுந்தான். “இந்த ஏரியாவுல எவனாவது ஏழைகளை மிரட்டுனா, அவன் கை இனிமேல் வேலை செய்யாதுன்னு உங்க ஆன்டனி கிட்ட சொல்லு. போங்க!”
அவர்கள் சிதறி ஓடினார்கள். டேவிட் இப்போது காயத்ரியின் பக்கம் திரும்பினான்.—இருவரும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டார்கள். காயத்ரியின் இதயம் முதல் முறையாக வேகமாகத் துடித்தது. அது பயத்தினால் அல்ல, அவன் கண்களில் இருந்த அந்த ஆழமான காந்த சக்தியினால். அவனது முகத்தில் இருந்த அந்த கம்பீரம், அவனது தோள்களில் இருந்த அந்த அதிகாரம்…
காயத்ரியை ஒரு நிமிடம் பேசவிடாமல் செய்தது.”தைரியமான பொண்ணுதான் நீ… ஆனா மெக்சிகோ சிட்டி உன்ன மாதிரி அழகான பொண்ணுங்களுக்கு அவ்வளவு சேஃபான இடம் கிடையாது,” என்றான் டேவிட், ஒரு மெல்லிய ஆங்கில உச்சரிப்பில்.காயத்ரி தன்னைச் சமாளித்துக் கொண்டு, “தப்பு நடக்குற இடத்துல தைரியம் தானே வரணும்? நீங்க யாருன்னு எனக்குத் தெரியும்… நீங்களும் ஒரு மாஃபியா தானே? எதுக்கு எனக்கு அட்வைஸ் பண்றீங்க?” என்று படபடவெனக் கேட்டாள்.
டேவிட் லேசாகச் சிரித்தான். அந்தப் புன்னகை காயத்ரியின் மனதை எங்கோ உலுக்கியது. “நான் யாருங்கிறத தெரிஞ்சுக்க உனக்கு இன்னும் காலம் இருக்கு சில்லி கேர்ள். ஆனா இப்போதைக்கு… உன் பாதுகாப்புல கொஞ்சம் கவனமா இரு,” என்று சொல்லிவிட்டு, அவன் மீண்டும் தனது காரில் ஏறிச் சென்றான்.காயத்ரி அங்கேயே சில நிமிடங்கள் சிலையாக நின்றிருந்தாள். அந்த இடமே அவனது வாசனை நிறைந்திருப்பது போல அவளுக்குத் தோன்றியது. “டேவிட் மில்லர்… இவனைப் பற்றி நான் ரெக்கார்ட்ஸ் படித்ததை விட நேரில் பார்க்கும்போது இன்னும் பயங்கரமாகவும்… இன்னும் அழகாகவும் இருக்கிறானே!” என்று வியந்தாள்.
இரவு – டேவிட்டின் மாளிகை.
டேவிட் ஒரு கிளாஸில் உயர்வகை ‘டெகிலா’வை ஊற்றி குடித்துக்கொண்டிருந்தான். அவன் கண்களில் இன்று சந்தையில் சந்தித்த பெண்ணின் முகம் வந்து போனது.”யார் அந்தப் பெண் ஆல்பர்ட்? இன்னைக்கு சந்தையில் பார்த்தேனே?” என்று கேட்டான்.”சார், அவங்கதான் நான் சொன்ன அந்த இந்திய டிடெக்டிவ் காயத்ரி மல்ஹோத்ரா. ஆண்டனி ஆளுங்களையே மிரட்டுறாங்கன்னா சாதாரண ஆளா இருக்க மாட்டாங்க,” என்றான் ஆல்பர்ட்.டேவிட் அந்த மதுவை ஒரே மூச்சில் குடித்தான்.
“காயத்ரி… அழகான பேரு. ஆனா அவளோட அறிவு அவளுக்கே எமனாகப் போகுது. ஆண்டனி அவளை சும்மா விடமாட்டான். அவளைக் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க… ஆனா அவளுக்குத் தெரியக்கூடாது.”டேவிட்டின் மனதில் ஒரு புதிய உணர்வு முளைக்கத் தொடங்கியது. இதுவரை எத்தனையோ பெண்களைப் பார்த்தவன், அந்த இந்தியப் பெண்ணின் கண்களில் கண்ட அந்தத் தீப்பிழம்பை மறக்க முடியாமல் தவித்தான்.——–மெக்சிகோ சிட்டியின் ‘சோக்கலோ’ சதுக்கம் இரவு நேரங்களில் ஒரு மாயாஜால உலகம் போலக் காட்சியளிக்கும். அந்தப் பிரம்மாண்டமான கதீட்ரல் தேவாலயத்தின் நிழலில், காயத்ரி இன்று ஒரு புதிய வேடத்தில் நின்றிருந்தாள்.அவள் அணிந்திருந்தது ஒரு அடர் சிவப்பு நிற அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கௌன்.
அவளது கழுத்தில் ஒரு மெல்லிய பிளாட்டினம் செயின் மின்னியது. இவ்வளவு அலங்காரத்திற்குப் பின்னால் ஒரு ஆபத்தான நோக்கம் இருந்தது. ஆண்டனியின் வலது கை ஆளான ஒருவன், இன்று ‘எல் ரோசா’ எனும் ரகசிய கிளப்பிற்கு ஒரு முக்கியத் தகவலோடு வரப்போகிறான் என்று அவளுக்குத் தகவல் கிடைத்திருந்தது.அங்கு செல்ல வேண்டுமென்றால் இந்த தேவாலயத்தை கடந்து தான் செல்ல வேண்டும். அதனால் அவனை பின் தொடர்வதற்கு காத்துக் கொண்டிருந்தாள்.
சரியாக தேவாலயத்தை கடந்து அந்த கார் செல்ல காயத்ரி தன் வாடகைக்கு எடுத்துக்கொண்ட வண்டியை எடுத்து அவனை பின் தொடர ஆரம்பித்தாள்.கிளப்பிற்குள் நுழைந்தபோது, காதுகளைத் துளைக்கும் இசை மற்றும் வண்ண விளக்குகளின் ஆட்டம் அவளைச் சற்றுத் தடுமாறச் செய்தது. “இந்த ஊர்ல பகலை விட இரவு தான் அதிகமா வாழுது போல!” என்று முணுமுணுத்தபடி, ஒரு ஓரமாக இருந்த பாரில் அமர்ந்தாள்.அவள் கையில் இருந்த சிறிய ரகசிய கேமரா, அவளது கையில் இருந்த மோதிரத்தில் மறைக்கப்பட்டிருந்தது.
அவள் யாருக்காகக் காத்திருந்தாளோ, அவன் அங்கே வந்தான். ஆனால், அவனுடன் சேர்ந்து அங்கே ஒரு நிழலும் நுழைந்தது.அந்த நிழல்… அந்த வாசனை… காயத்ரிக்கு அது பழகிய ஒன்றாகத் தெரிந்தது.அங்கே டேவிட் மில்லர் வந்திருந்தான். ஆனால் இன்று அவன் ஒரு மாஃபியா போல வரவில்லை. ஒரு மிக உயரிய தொழிலதிபர் போல, விலை உயர்ந்த சாம்பல் நிற சூட் அணிந்து கம்பீரமாக உள்ளே வந்தான். அவனைப் பார்த்ததும் அந்த கிளப்பின் மேலாளர் ஓடி வந்து குனிந்து வணக்கம் வைத்தார்.
காயத்ரி தன் முகத்தை அங்கிருந்த நடனத்திற்கு பயன்படுத்தப்படும் இறகு விசிறியை கொண்டு மறைத்துக் கொண்டாள். ‘இவன் ஏன் இங்க வந்தான்? என்னையும் நோட்டம் விடுறானா?’ என்று அவளது டிடெக்டிவ் மூளை யோசித்தது.டேவிட் மெதுவாகத் நடந்து வந்து, காயத்ரிக்குச் சில இருக்கைகள் தள்ளி அமர்ந்தான். அவன் அவளைப் பார்க்கவில்லை என்பது போலப் பாவனை செய்தாலும், அவனது கழுகுக் கண்கள் அவளைத்தான் கவனித்துக் கொண்டிருந்தன.
சரியாக அந்த நேரத்தில், ஆண்டனியின் ஆள் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றான். காயத்ரிக்குக் கோபம் தலைக்கேறியது. தன் வேலையை மறந்துவிட்டு, அவனிடம் செல்ல முயன்றபோது, ஒரு வலிமையான கை அவளது மணிக்கட்டைப் பற்றியது.காயத்ரி திடுக்கிட்டுத் திரும்பினாள். அது டேவிட்!அவனது கண்கள் அவளை எச்சரித்தன. “அவசரப்படாதே காயத்ரி… இங்க இருக்கிறவங்க எல்லாம் சாதாரணமானவங்க இல்லை. நீ வந்த வேலையை மட்டும் பாரு,” என்று மிக மெல்லிய குரலில், அவளது காதருகே குனிந்து சொன்னான்.
அவனது மூச்சுக்காற்று அவளது கன்னத்தில் பட்டபோது, காயத்ரிக்கு ஒரு நிமிடம் இதயம் துடிக்க மறந்தது.”என்னை எப்படித் தெரியும் உங்களுக்கு? என் பேரை யார் சொன்னது?” என்று காயத்ரி திகைப்புடன் கேட்டாள்.டேவிட் அவளை நோக்கி ஒரு மர்மமான புன்னகையை வீசினான்.
“நீ என்னை வேவு பார்க்கிறியா, இல்ல நான் உன்னை வேவு பார்க்கிறேனான்னு அப்புறம் யோசிப்போம். இப்போ… அந்த ஆள் பாக்கெட்ல இருக்கிற அந்த சிப்பைப் எடுக்கணுமா வேண்டாமா?”காயத்ரி ஆச்சரியப்பட்டாள். அவள் எதைத் தேடி வந்தாளோ, அது டேவிட்க்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. அந்த நேரத்தில் அந்த கிளப்பின் விளக்குகள் அணைந்து மீண்டும் எரிய, அங்கே ஒரு சிறிய கலவரம் வெடித்தது.
டேவிட் சட்டென்று காயத்ரியை இடுப்போடு சேர்த்து அணைத்து, ஒரு தூணின் மறைவிற்கு இழுத்துச் சென்றான். அவனது அணைப்பு ஒரு இரும்பு வளையம் போல வலிமையாகவும், அதே சமயம் ஒரு பாதுகாப்பு உணர்வையும் தந்தது.
“உன்னை விடமாட்டேன் காயத்ரி… ஏன்னா, நீ இப்போ என் உலகத்துக்குள்ள நுழைய ஆரம்பிச்சிட்ட!” என்று அவன் சொன்னபோது, காயத்ரிக்கு அவன் ஒரு ‘யட்சன்’ போலவே தெரிந்தான்.