அத்தியாயம் 2
சென்னை மாநகரத்தில் ஒரு மிகப்பெரிய ஓவியக் கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் தன்னுடைய பத்து ஓவியங்களை மக்கள் பார்வையிட வைத்திருந்தாள் அமிர்தா சேஷாத்திரி.

இருபத்தி இரண்டு வயதுப் பருவ மங்கை. வளர்ந்து வரும் பிரபல ஓவியர் என்றாலும், சில மேல்தட்டு வர்க்கச் சூழ்ச்சிகளால் இன்னும் அவள் முகம் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. தன்னுடைய ஓவியங்களை விற்றுத்தான் அவளது அன்றாட வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. கேட்பாருக்கு யாரும் இல்லாத தனிமையில் வாழும் அல்லிக்கொடி அவள். பன்னிரண்டு வயதில் தாய் தந்தையை இழந்த பிறகு, ஏதோ கடவுள் புண்ணியத்தில் அவர்கள் விட்டுச் சென்ற அந்த வீடு அவளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. கீழ் வீட்டிலிருந்து வரும் வாடகை வருமானம், ஓவியங்கள் மூலம் கிடைக்கும் சிறு தொகை, இது போதாது என்று யூடியூபில் அவள் போடும் வீடியோக்களுக்கு வரும் சப்ஸ்கிரைப் பணம் — இதுவே அவள் வாழ்க்கை. “இதற்கப்புறம் என்ன செய்யப் போகிறாய்?” என்று யாராவது கேட்டால், ஒரு புன்னகையை மட்டுமே பதிலாகத் தருவாள். அதற்கான அர்த்தம் அவளுக்கே தெரியாமல் காலம் போகும் போக்கில் போய்க்கொண்டிருக்கிறாள்.
தன் ஓவியங்களுக்கு முன்பாக நின்று யாரெல்லாம் என்னென்ன பேசுகிறார்கள், எப்படி ரசிக்கிறார்கள் என்பதை ஒரு ஓரமாக நின்று கண்கூடாகப் பார்த்துச் சிலிர்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தா. அவளது படபடக்கும் கண்கள், துடிதுடிக்கும் சிவந்த இதழ்கள், அவளது நடையின் நளினம் என மொத்தத்தையும் கவர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், உச்சி முதல் பாதம் வரை அவளை மேய்ந்து கொண்டிருந்தது ஒரு கழுகின் பார்வை.
ஆம், இன்றைய ஓவியக் கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினரே அவன் தான்.
“ஹலோ மிஸ்டர் அதிரூபன்! நீங்க வருவீங்கன்னு நினைச்சு கூடப் பார்க்கல. எப்படியோ வந்துட்டீங்க!” என்று கண்காட்சி நடத்துபவர் தானாகவே முன்வந்து அதிரூபனை வரவேற்று அழைத்து வந்தார். அப்போதுதான் அந்தச் சிறப்பு விருந்தினர் யார் என்று அமிர்தா பார்த்தாள்.
‘அட, இவர் மிகப்பெரிய பிசினஸ் மேன் ஆச்சே! கேள்விப்பட்டிருக்கிறேன், இவருக்கு ஓவியங்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் மீது அதிக ஆர்வம் உண்டு என்று. ஒருவேளை அதற்காகக் கூட வந்திருக்கலாம். என்னுடைய ஓவியம் ஒன்றை இவர் வாங்கினால் கூட அடுத்த மூன்று மாதங்களுக்கு எனக்குப் பணப் பிரச்சனை இருக்காது. படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கிற வரை இப்படித்தான் வாழ்ந்து ஆக வேண்டும். நிறைய காசு சேர்த்து வைத்து எப்படியாவது இன்டர்நேஷனல் லெவல் நடக்கிற பெயிண்டிங் காம்பெடிஷனில் கலந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு பேர், புகழ், என்னுடைய ஓவியத்துக்கான தனி மரியாதை… சாதாரணக் கீழ்த்தட்டு மக்களால் கூட ஜெயிக்க முடியும் என்று நிரூபிக்க வேண்டும். அதுக்கப்புறம் என் லைஃப் செட்டில் ஆகிவிடும்.’ — அன்றாட சாதாரண வீட்டுப் பெண்களுக்கு இருக்கும் அதே ஆசைதான் அவளுக்கும் இருந்தது. ஆனால் இங்கே ஒருவன் அவளை எப்படித் தன் வசப்படுத்தலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த இடத்தை நோக்கி வந்த அமிர்தாவின் தோழி இனியா, “ஹே மச்சி! அங்கே மீட்டிங் நடக்குது பார். அட, சீப் கெஸ்ட் இங்கேதான் இருக்காரா? சீக்கிரம் வா! இவர்தான் வின்னர் யார் என்று அறிவிக்கப் போறாராம். அதுமட்டுமில்லாமல் சிறந்த ஓவியங்களை இவர்தான் பர்ச்சேஸ் பண்ணப் போறாரு. அதில் உன்னுடைய ஓவியங்கள் இருக்கணும் அப்படின்னு கடவுளை வேண்டிக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் வாடி!” என்று அவளை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றாள்.
அப்போது அமிர்தாவின் பார்வை அதிரூபனை ஒருமுறை வருடிச் சென்றது. அது உண்மைதான். இதுவரை எந்த ஆண்களையும் அவள் ஏறிட்டுப் பார்த்தது கிடையாது. ஆனால் ஏனோ, இவனைத் திரும்பிப் பார்க்க வேண்டும், அவன் கண்களை ஒருமுறை நோக்க வேண்டும் என்ற ஒரு ஆவல் அமிர்தாவின் அடிமனதில் எழுந்தது. பிறகு தன்னைச் சரி செய்து கொண்டாள்.
‘என்ன பண்ற அமிர்தா? இப்படியா பச்சையா சைட் அடிப்பாய்? அந்த மனுஷன் என்ன நினைப்பார்? இனிமேல் இந்த மாதிரி அசிங்கம் பண்ணாதே!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சென்றாள். ஆனால் இங்கே ஒருவனுக்கோ அவள் மீது பேராசை கூடியது. ‘இவள் ஒரு நாள் முடிந்துவிடும் உறவாக இருக்கக்கூடாது, பல நாள் தொடரும் உறவாக இருக்க வேண்டும். அதற்கு நான் போடும் நாடகம்… காதல்!’ என்று தன் காமத்தை அடக்கி, மிடுக்கான கம்பீர நடையுடன் அந்த அரங்கத்திற்குள் நுழைந்தான். அங்கிருந்த நடுத்தர வயது ஆண்கள் இவனைப் போன்ற உடல் அமைப்பு தங்களுக்கு இல்லையே என்று பொறாமை கொள்ள, இளம் பெண்கள் அனைவரும் கைதட்டி அபார வரவேற்பைக் கொடுத்தனர். கம்பீரமாக மேடையில் தனக்கான இருக்கையில் வந்து அமர்ந்தான் அதிரூபன்.

அதிரூபனைப் பார்த்துச் சலனப்பட்டுக் கொண்டிருந்த தன் மனதைக் கட்டுப்படுத்திய அமிர்தா, வரவேற்புரை வாசிக்க வேண்டும் என்பதால் தன்னைச் சரி செய்து கொண்டு மைக் முன் நின்றாள். ஏற்கனவே எழுதி வைத்திருந்த அதிரூபனின் அருமை பெருமைகளை வாசித்து முடித்து, ஒருமுறை அவனைப் பார்த்துச் சிரித்துத் தலை அசைக்க, அவன் அவளைப் பார்த்துச் சிரித்தான். அவ்வளவுதான், முதல் ‘க்ரஷ்’ இடத்தைப் பிடித்துவிட்டான் அதிரூபன் அமிர்தாவின் மனதில்.
அமிர்தாவின் அற்புதமான பேச்சைக் கேட்ட அனைவரும் கரகோஷம் எழுப்பினர். அவள் மரியாதை நிமித்தமாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டுப் போட்டியாளர்களில் ஒருவராக அமர்ந்தாள். பிறகு ஒவ்வொருவராக ஓவியங்களைப் பற்றிப் பேசி முடிக்க, இறுதியாக வெற்றி பெற்றவர்களை அழைக்க வேண்டிய நேரம் வந்தது. இதோ தனது கம்பீரக் குரலில் பேச ஆரம்பித்தான் அதிரூபன்.
“ஹலோ பிரண்ட்ஸ்! நிறைய பேருக்குச் சந்தேகம் வந்திருக்கும். என்னடா, ஒரு பிசினஸ் நடத்துறவன் எதுக்கு ஓவியக் கண்காட்சிக்கு வந்திருக்கான் அப்படின்னு எல்லாருக்கும் சந்தேகம் இருக்கு தானே?” என்று அவன் கேட்க, அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
“ஹா ஹா… நானே சொல்றேன். ஆக்சுவலி எனக்கு பெயிண்டிங் மேல பயங்கர இன்ட்ரஸ்ட் இருக்கு. டூ யூ நோ சம்திங்? ஐ அம் ஆல்சோ எ பெயிண்டர். ஆனால் அதை எக்ஸ்போஸ் பண்ண விரும்பல. எனக்குத் தோன்றிய காட்சிகள் எல்லாத்தையும் என்னுடைய பர்சனல் ரூமில் நிறைய பெயிண்ட் பண்ணி வச்சிருக்கேன். அது ஸ்பெஷல் பீப்பிளுக்காக மட்டும் தான், மத்தபடி நான் வெளியே காட்டிக்க மாட்டேன். அதனால்தான் இந்த காம்பெடிஷனுக்கு நானும் வந்தேன். அப்புறம் என்கிட்ட ஒரு ரேர் பெயிண்டிங் இருக்கு. அதை வெற்றி பெற்ற ஒரு போட்டியாளருக்கு நான் கொடுக்கப் போறேன். ஓகே, இப்ப வின்னர் அனௌன்ஸ் பண்ணிடலாம்.”
தன் தொண்டையைச் சரி செய்து கொண்டவன், “மூன்றாம் பரிசு: மிஸ்டர் மூர்த்தி. வாழ்த்துக்கள்!” என்று வெற்றியாளரை அழைத்தான். அவருக்கு ரூபாய் இரண்டு லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருளும், அதிரூபன் கலெக்ஷனில் இருந்த ஒரு அழகிய ஓவியமும் வழங்கப்பட்டது. அது அவ்வளவு சீக்கிரம் இந்தியாவில் கிடைக்கக்கூடிய ஓவியம் அல்ல. ஒரு ஏலத்தில் அதையெல்லாம் அவன் வாங்கியிருந்தான். வெற்றி பெற்றவர்களுக்குக் கொடுப்பதற்காக மூன்று ஓவியங்களைத் தேர்ந்தெடுத்திருந்தான்.
“இரண்டாம் பரிசு: தேவதர்ஷினி” என்று அடுத்த பெயரைச் சொன்னான். அந்தப் பெண்ணுக்கு மூன்று லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் ஒரு அழகிய ஓவியமும் வழங்கப்பட்டது. அந்தப் பெண்ணும் நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றாள்.
இன்னும் நான்கு ஐந்து நபர்கள் இருந்தனர். அதில் ஒருவருக்கு முதல் பரிசு, மீதம் இருப்பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ஆறுதல் பரிசு கொடுக்கப்படும். அதன் பிறகு மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க முடியும். அதற்காக அமிர்தாவுக்குப் பதட்டம் கூடிக்கொண்டே இருந்தது.
“அமிர்தா, கஷ்டப்படாதே! டென்ஷன் ஆகாதே. நிச்சயம் உனக்குத்தான் பிரைஸ் கிடைக்கும். இதற்காக நீ எவ்வளவு எஃபோர்ட் போட்டிருக்காய்? உனக்குத்தான் பிரைஸ் கிடைக்கும். முதல் பரிசு அஞ்சு லட்ச ரூபாய் உன் கஷ்டத்தைத் தீர்க்க உதவும்” என்று இனியா ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
இதோ, முதல் பரிசுக்கான பெயர் வாசிக்கப்பட்டது. அனைவரும் அமிர்தாதான் என்று பேசிக்கொண்டிருக்க, அதிரூபன் பேசினான்: “ஓகே, ஃபர்ஸ்ட் பிளேஸ் யாருக்கு வந்திருக்குன்னு பார்க்கலாம். ஓவியத்துக்குக் கொடுக்கிற மரியாதை என்ன தெரியுமா? அதோட புற அழகு மட்டும் இல்லாமல், அதற்குள் என்ன அர்த்தம் இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அப்படி உன்னிப்பாகக் கவனித்ததில், என் கூட இருந்த கோ-ஜட்ஜஸ் சொன்ன முடிவின்படி இந்த வெற்றியாளரை அறிவிக்கிறோம். முதல் பரிசை வென்றவர்… மிஸ். லாவண்யா அறிவழகன்!”
அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அமிர்தாவுக்கு மனமே உடைந்து போனது. எப்போதும் தான் தோற்றுக்கொண்டே இருக்கிறோமே என்று தோன்றியது. இரண்டாம், மூன்றாம் பரிசாவது பெற்று வந்த அவளுக்கு, இந்த முறை ஆறுதல் பரிசு என்பது ஆறாத வடுவாக மாறியது.
இனியா கோபத்துடன் வந்தாள். “அமிர்தா, இது நான் எதிர்பார்க்கவே இல்லை! எங்க அப்பா ஏன் இப்படிப் பண்ணாரு? இதுவரை நடந்த போட்டியில் நீ ஏதாவது ஒரு பரிசு ஜெயிப்பாய். ஆனால் இந்த ஜட்ஜ் வந்த பிறகு உன்னோட தகுதியைத் தரம் தாழ்த்திப் பேசுற மாதிரி இருக்கு. இவனுக்கெல்லாம் எங்கே கலைநயம் இருக்கப் போகுது? சும்மா நாலு பெயிண்டிங்கை காசு கொடுத்து வாங்கிட்டு நானும் பெரிய ஓவியர்னு பேசிக்கிட்டு இருக்கான். எங்க அப்பாவும் இது பெரிய இடத்து சமாச்சாரம்னு சொல்வாரு, ஆனா இதுதான் உண்மை போல இருக்கு. சாரிடி!” என்று மன்னிப்புக் கேட்டாள்.
அமிர்தா தளர்ந்த நடையோடு சென்று, ஆறுதல் பரிசையும் ஒரு சிறிய ஓவியப் புகைப்படத்தையும் வாங்கிக் கொண்டு ஆட்டோ பிடித்துத் தன் வீட்டிற்குச் சென்றாள். அங்கே அமிர்தாவை ஒருவன் குதர்க்கமான பார்வையில் பார்க்க, மற்றொருத்தி அவளைத் தோற்கடித்துவிட்டோம் என்ற ஆணவப் பார்வையில் பார்த்தாள். மறுபக்கம் அந்தப் பார்வை அதிரூபனைக் காமத்தால் வருடியது.