அத்தியாயம் 19
அதிரவனின் சொகுசு பங்களாவில் அமைதி நிலவினாலும், அவன் அறைக்குள் ஒரு பதற்றம் கனன்று கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக ஊடுருவிய நிலவொளி மீனாட்சியின் முகத்தில் விழுந்தது. அவள் கட்டிலின் ஓரத்தில் பிடிவாதமாக அமர்ந்திருந்தாள்.
அதிரவன் மெல்ல அவளருகில் வந்தான். அவனது சட்டையின் மேல் பொத்தான்கள் திறந்திருக்க, மதுவின் வாசம் அவனிடமிருந்து மெலிதாக வீசியது. “என்ன மீனாட்சி… இன்னும் அந்தப் பழைய கோபம் குறையலையா? உன்னைத் தூக்கிட்டு வந்தது தப்புன்னு நினைக்கிறியா?”
மீனாட்சி அவனை நிமிர்ந்து பார்த்தாள். “தூக்கிட்டு வந்தது தப்புன்னு சொல்லல… ஆனா என்னை ஒரு பொருளா நினைச்சு உரிமையோடு தூக்கிட்டு வந்தீங்களே, அந்த அதிகாரம் தான் எனக்குப் பிடிக்கல. நான் உங்கூட வருவேன், ஆனா அது என் இஷ்டப்படி இருக்கணும்.”
அதிரவன் சிரித்தான். அவள் அருகில் அமர்ந்து அவளது கன்னத்தைச் செல்லமாகத் தட்டினான். “உன் இஷ்டம்… என் இஷ்டம் எல்லாம் இங்க செல்லாது மீனாட்சி. நீ இப்போ என் கஸ்டடில இருக்க.” அவன் அவளது கழுத்தோரம் முகம் புதைக்க, மீனாட்சிக்கு உடல் சிலிர்த்தது. அவன் கைகள் அவளது இடையை வளைத்துத் தன்பக்கம் இழுக்க, அவள் அவன் மார்பில் சாய்ந்தாள்.
அவன் அவளது இதழ்களைத் தன் இதழ்களால் மென்மையாக வருடினான். ஒரு நீண்ட ‘லிப் லாக்’ முத்தம். மீனாட்சி முதலில் மறுத்தாலும், அவனது பிடிவாதமான அன்பிற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவனது சட்டையை இறுகப் பற்றிக்கொண்டாள். அந்த முத்தம் ஆழமாகவும், அதே சமயம் ஒருவித எச்சரிக்கையோடும் இருந்தது. அவன் இன்னும் நெருங்க முயல, மீனாட்சி அவனை மெல்லத் தள்ளிவிட்டாள்.
“வேணாம் அதிரவன்… என்னை நீங்க முழுசா ஏத்துக்கிற வரைக்கும், எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கிற வரைக்கும் இதுக்கு மேல எதுவும் வேணாம்,” என்று பிடிவாதமாகச் சொன்னாள். அதிரவன் அவளை ஒரு வினாடி உற்றுப் பார்த்துவிட்டு, “சரி… உன் பிடிவாதம் ஜெயிக்கட்டும். ஆனா சீக்கிரம் நீயே என்கிட்ட வருவ,” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அதே சமயம், கள்ளிக்காட்டு மலை கிராமத்தில் நிலைமை ரணகளமாக இருந்தது. தென்னரசு அன்று நன்றாகக் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன.
உள்ளே நுழைந்தவன், வைஷ்ணவி அடுப்பங்கரையில் வேலை செய்துகொண்டிருப்பதைப் பார்த்ததும் ஆவேசம் கொண்டான். “ஏய்! இங்க வாடி,” என்று கத்தினான்.
வைஷ்ணவி பயந்துகொண்டே வந்தாள். “என்னங்க… ஏன் இப்படி குடிச்சிட்டு வர்றீங்க?”
“குடிக்காம என்ன பண்ண சொல்ற? ஊர்ல எல்லாரும் என்னை மதிக்கிறாங்க. ஆனா என் பொண்டாட்டியே என் கௌரவத்தை மண்ணுல மிதிக்கிறா. அந்த அதிரவனுக்குப் போன் போட்டு மீனாட்சியைத் தூக்கிட்டுப் போகச் சொன்னது நீதானே?”
“மீனாட்சி ஆசைப்பட்ட வாழ்க்கை அவளுக்குக் கிடைக்கணும்னு தான் நான் அப்படிப் பண்ணினேன். இதுல உங்க கௌரவம் எங்க போச்சு?”
“எங்க போச்சா?” என்று கத்திய தென்னரசு, மேசையிலிருந்த பித்தளைச் செம்பை எடுத்துத் தரையில் ஓங்கி அடித்தான். “அந்த அதிரவன் என் முன்னாடியே துப்பாக்கியைக் காட்டிட்டுப் போறான். நீ அவனுக்குத் துணையாப் பேசுற? இனிமே இந்த வீட்ட விட்டு ஒரு அடி வெளிய போகக்கூடாது. அந்த ஸ்கூல், வேலைன்னு எதாவது சொன்னா கொன்னுடுவேன். நீ ஒரு பொம்பளை… ஆம்பளைச் சொல்றதக் கேட்டுட்டு அடங்கி இருக்கணும்.”
அவன் அவளது தோளைப் பிடித்து உலுக்கினான். வைஷ்ணவி வலியால் துடித்தாள். “மாமா… இது அநியாயம். நான் படிச்ச படிப்புக்கு…”
“படிப்பு ஒரு கேடா? போ… போயி சோறப் போடு,” என்று அவளைத் தள்ளிவிட்டான்.
அன்று இரவு, தென்னரசு வைஷ்ணவியிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டான். அவளுக்கு அவனிடம் இருப்பது காதலா அல்லது ஒருவிதமான அடிமைத்தனமா என்று புரியவில்லை. அவன் தன்னைத் தொடும்போது ஒரு கணவன் என்கிற உரிமை தெரிந்தாலும், அவனது பேச்சில் இருக்கும் ஆணாதிக்கம் அவளைச் சிதைத்தது.
…..
மறுநாள் காலை, அதிரவனின் பங்களாவில் சூரியன் மெல்ல எட்டிப்பார்த்தது. மீனாட்சி இரவு சரியாக உறங்கவில்லை. அதிரவனின் அந்த பிடிவாதமான முத்தமும், அவன் காட்டிய அதிகாரமும் அவள் மனதிற்குள் ஏதோ ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தன. மெல்ல படுக்கையை விட்டு எழுந்தவள், ஜன்னல் திரையை விலக்கினாள். அங்கே தோட்டத்தில் அதிரவன் தனது கறுப்பு நிற டீ-ஷர்ட்டில் வியர்வை சிந்த உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். அவனது ஒவ்வொரு அசைவிலும் ஒரு வேகம் இருந்தது.
அவள் கீழே இறங்கி வந்தபோது, அதிரவன் பயிற்சியை முடித்துவிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். மீனாட்சியைப் பார்த்ததும் அவன் முகத்தில் ஒரு கேலியான புன்னகை அரும்பியது.
“என்ன மீனாட்சி, சீக்கிரம் எழுந்தாச்சா? நேத்து நைட் நான் சொன்னது ஞாபகம் இருக்கா? நீயே என்கிட்ட வருவேன்னு சொன்னேனே…” என்று அவன் நெருங்கி வர, மீனாட்சி பின்வாங்கவில்லை.
“நீங்க பிசினஸ்ல ஜெயிக்கலாம் அதிரவன், ஆனா மனுஷங்க மனசை ஜெயிக்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்ல. உங்ககிட்ட அன்பை விட அதிகாரம் தான் அதிகமா இருக்கு,” என்று அவள் முகத்திற்கு நேராகச் சொன்னாள்.
அதிரவன் அவளை ஆழமாகப் பார்த்துவிட்டு, “அன்பு காட்டத் தெரியாதவன் இல்லை நான்… ஆனா அதை யார்கிட்ட காட்டணும்னு எனக்குத் தெரியும். சரி, கிளம்பு… இன்னைக்கு ஒரு முக்கியமான பார்ட்டி இருக்கு. என்னோட பிசினஸ் பார்ட்னர்ஸ் வர்றாங்க. நீ தான் என் கூட இருக்கணும்,” என்று கட்டளையிட்டான்.
அதே சமயம், மலை கிராமத்தில் வைஷ்ணவிக்கு விடியல் அவ்வளவு அழகாக இல்லை. நேற்று தென்னரசு அடித்த அடியில் அவள் தோள்பட்டை வீங்கியிருந்தது. ஆனாலும், ஊர் தலைவன் பொண்டாட்டி என்பதால் வெளியே காட்டிக்கொள்ளாமல், தன் பாட்டியுடன் (தென்னரசுவின் அம்மா) வயல் வேலைக்குக் கிளம்பினாள். அந்த மலைப்பகுதியின் செங்குத்தான வயல்களில் வேலை செய்வது சுலபமல்ல.
“ஏன் புள்ள… உன் முகம் ஒரு மாதிரி இருக்கு? அந்தப் பய எதுனா பண்ணுனானா?” என்று தென்னரசுவின் அம்மா அக்கறையாகக் கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்னுமில்ல அத்த… கொஞ்சம் தலைவலி,” என்று மறைத்தாள் வைஷ்ணவி.
அவள் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தென்னரசு அங்கே வந்தான். அவன் கையில் ஒரு பெரிய டிபன் பாக்ஸ் இருந்தது. அவன் முகத்தில் நேற்று இருந்த கோபம் இப்போது இல்லை, ஒருவிதமான குற்ற உணர்வு தெரிந்தது. ஆனால் அதை வெளிக்காட்டத் தெரியாத முரட்டு ஆம்பளை அவன்.
“இந்தா… இதத் தின்னுட்டு வேலையைப் பாரு. வெயில்ல ரொம்ப நேரம் நிக்காத,” என்று கரகரப்பான குரலில் சொல்லிவிட்டு, அவளுக்குப் பிடித்தமான பதார்த்தத்தை அவளிடம் நீட்டினான்.
வைஷ்ணவி அவனை நிமிர்ந்து பார்த்தாள். “வேலைக்கு போகக்கூடாதுன்னு சொல்லிட்டு, இப்போ வந்து இப்படி அன்பா பேசுனா எல்லாம் சரியாயிடுமா மாமா?”
தென்னரசுவின் முகம் சட்டெனக் கடுகடுத்தது. “அன்பா குடுத்தா தின்னுட்டுப் போக வேண்டியதுதானே? எதுக்கு மறுபடியும் பழைய கதைய ஆரம்பிக்கிற? நீ அந்த ஊர் ஸ்கூலுக்குப் போகப் போறது இல்ல, அதுல நான் தெளிவா இருக்கேன். என் பொண்டாட்டி ஒருத்தன் கிட்ட கையேந்தி சம்பளம் வாங்கக் கூடாது, அவ்வளவுதான்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான். அவன் காட்டும் இந்த முரட்டுத்தனமான அன்பை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியாமல் வைஷ்ணவி திகைத்தாள்.
மாலையில் அதிரவனின் வீட்டில் பார்ட்டி தொடங்கியது. மீனாட்சி ஒரு அழகான பட்டுப்புடவையில் தேவதை போலத் தெரிந்தாள். அதிரவனின் நண்பர்கள் மற்றும் பிசினஸ் எதிரிகள் அனைவரும் வந்திருந்தனர். அப்போது அதிரவனுடன் பிசினஸ் டீலிங்கில் தோற்றுப்போன அந்த எதிரி தொழிலதிபர், மீனாட்சியை ஒருவிதமான நக்கலான பார்வையோடு பார்த்தான்.
“என்ன அதிரவன்… கல்யாணம் பண்ணிக்காமலே ஒரு பொண்ணை உன் கூட வச்சிருக்க? இதுதான் உன் பிசினஸ் ஸ்டைலா?” என்று அவன் கேட்க, அதிரவனின் கண்கள் சிவந்தன.
மீனாட்சிக்கு அந்த இடம் நரகமாகத் தெரிந்தது. அதிரவன் அந்த நபரின் சட்டையைப் பிடிக்கப் போக, மீனாட்சி அவன் கையைத் தடுத்து, “அதிரவன்… வேணாம். இங்க வேணாம்,” என்று தடுத்து, தனது அறைக்குள் சென்று விட்டாள்.
அதிரவன் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு , பார்ட்டியின் மீது கவனத்தை செலுத்தினான்.
பாட்டி முடிந்தவுடன் அனைவரும் சென்ற பிறகு,
மீனாட்சி தேடி அவள் இருக்கும் அறைக்கு சென்றான்.
அறைக்குள் வந்ததும், “ஏன் என்னைத் தடுத்த? அவனை அங்கேயே முடிச்சிருப்பேன்!” என்று கத்தினான் அதிரவன்.
“அடிதடி தான் தீர்வா? உங்களுக்கு என்னைப் பத்தி கவலை இல்லையா? எல்லாரும் முன்னாடியும் என்னை எப்படி பேசுறாங்கன்னு கவனிச்சீங்களா?” என்று மீனாட்சி அழத் தொடங்கினாள்.
அவள் அழுவதைப் பார்த்ததும் அதிரவனின் இதயம் ஏனோ கணத்தது. அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான். “சாரி மீனாட்சி… என்னை விட உன்னை யாரும் அதிகமா காயப்படுத்த முடியாது, வேற யாரும் உன்னை தப்பா பேசவும் நான் விட மாட்டேன்,” என்று சொல்லி அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
மீனாட்சிக்கு அவன் மீது இருக்கும் காதல் இப்போது ஒரு புதுப் பரிமாணத்தை எட்டியது. அவனது முரட்டுத்தனத்திற்குப் பின்னால் ஒரு பெரும் காயம் இருப்பதை அவள் உணர்ந்தாள். அந்தப் பெரிய பங்களாவிற்குப் பின்னால் இருந்த அந்தச் சீன கட்டிடக்கலை கொண்ட வீட்டைப் பற்றி விசாரிக்க இதுதான் சரியான நேரம் என்று அவளுக்குத் தோன்றியது.
“அதிரவன்… அந்தப் பின்னாடி இருக்குற வீடு… அது யாருடையது? எதுக்காக அதை அவ்வளவு பத்திரமா பூட்டி வச்சிருக்கீங்க?” என்று அவள் கேட்டபோது, அதிரவனின் உடல் ஒரு நிமிடம் விறைத்தது.
அவன் அவளை விட்டு விலகி ஜன்னல் ஓரம் நின்றான். “அது… அது என் அம்மாவோட நினைவுகள் மீனாட்சி. நான் இப்போ இப்படி இருக்கக் காரணமான இடம் அது,” என்று அவன் குரல் கம்மியது.
…….