Home ANTIHERO10) பார்வை 😍

10) பார்வை 😍

by sreejanovels
5 views

அத்தியாயம் 10

ஞாயிற்றுக்கிழமை எல்லோருக்கும் எப்படித்தான் மின்னலாய் மறைந்து போகிறதோ! அன்று இரவும் இரு பெண்களும் மனதில் ஒருவித குறுகுறுப்போடு உறக்கத்தைத் தழுவினர். சுவாதிக்கு ஒன்றும் புரியவில்லை.

அஞ்சலி, தன் கணவனின் அலுவலகத்திலேயே அவனுக்கு ‘பர்சனல் அசிஸ்டன்ட் செகரட்டரி’யாக, அவன் துறையிலேயே வேலை செய்யப் போகிறாள். ஆனால், தனக்கு மட்டும் ஏன் ஒரு மாதிரி இருக்கிறது என்று சுவாதிக்குத் தோன்றியது.

அதே சமயம், அவ்வப்போது மெசேஜ் செய்து “அது வேண்டுமா? இது வேண்டுமா?” என்று நலம் விசாரிக்கும் ரித்திக், இன்று எதுவும் பேசாமல் இருப்பது அவளுக்கு ஏதோ போல் இருந்தது. அவனுடன் பல நாட்கள் பழகியது போன்ற ஓர் உணர்வு…

ஆனால், இன்று ஒரு நாள் அவன் அழைக்காதது அவளுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

“என் மானங்கெட்ட மனதைச் செருப்பால் அடிக்கணும்! யாரோ ஒருத்தன் போன் பண்ணலைன்னு நாம ஏன் ஃபீல் பண்ணணும்? இந்த கல்யாணம், அது, இதுன்னு நமக்கு எதுவும் தேவையில்லை. முக்கியமா இந்த ஆம்பளைங்க…

முக்கியமான சமயத்துல கழட்டி விட்டுட்டுப் போயிட்டே இருப்பாங்க. அஞ்சலியோட நிலைமையைப் பார்த்த பிறகும் நமக்குக் கல்யாண ஆசை வருதா? சீச்சீ… இந்த ஆம்பளைங்க சகவாசம் நமக்கு வேண்டாம்!” என்று தன்னைத்தானே கடிந்துகொண்டாள்.

அங்கே அஞ்சலி, தன் மகன் உறங்கும் அழகைப் பார்த்துக்கொண்டே…

‘இனி ஒவ்வொரு நொடியும் உங்க அப்பாவை நான் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லை. விஜய் அவர் மனசுல இன்னும் வினோ அக்காவைத்தான் நினைச்சுக்கிட்டு இருக்காரு. அவங்களை நினைச்சுக்கிட்டு என்கூட…’

என்று அதற்கு மேல் அவளால் நினைக்க முடியவில்லை. தன் முன்னால் இருக்கும் குழந்தை, தன் கணவன் தன் காதலியை நினைத்துத் தன்னோடு உறவாடியதன் சாட்சி என்பது அவளுக்கு வேதனையைத் தந்தது.

விஜய் தனக்குச் செய்ததையெல்லாம் நினைத்துப் பார்க்கவே அவள் உடல் நடுங்கியது. அவன் மனம் மாறிவிடும், அவனுக்கு உற்ற துணையாக இருப்போம் என்று ஆசை ஆசையாகக் கனவுக்கோட்டை கட்டி அவன் கரங்களைப் பிடித்ததற்கு,
அவன் எப்படியெல்லாம் பழிவாங்கிவிட்டான்! தன் அப்பா செய்த தவற்றுக்காக அவ்வப்போது குத்திக்காட்டித் தன்னை வாழ்க்கையை வெறுக்கச் செய்தவன் அவன். அவனோடு மீண்டும் ஒரு வாழ்க்கை நிச்சயம் நடக்கக்கூடாது என்ற உறுதியான முடிவோடு உறக்கத்தைத் தழுவினாள்.

ஆர்ப்பாட்டம் இல்லாத ஓர் அற்புதமான விடியல் அனைவருக்காகவும் காத்திருந்தது.

காலை நேரம்… பெண்கள் இருவரும் தயாராகினர். குழந்தை முழித்தவுடன் அவனைத் தயார்ப்படுத்தி, ஒரு குட்டி பொம்மை பேக் மாட்டி அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்யும் பிற ஊழியர்களும் அங்கே காத்திருந்தனர். ஒரு மிகப்பெரிய பேருந்து வந்து நிற்க, அனைவரும் அதில் ஏறிக்கொண்டனர்.

“நீங்கதான் புதுசா ஜாயின் பண்ணவங்களா? நான் அஞ்சு வருஷமா இந்த கம்பெனில வேலை பார்க்கிறேன். இவர்தான் என் ஹஸ்பண்ட். இந்த ஆபீஸ்க்கு வந்துதான் நான் இவரை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஆகுது,” என்று ஒரு பெண் அறிமுகப்படுத்தினாள். தான் ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருப்பதை மெல்லத் தன் வயிற்றைத் தடவிக் காட்டியபடி அவள் சொல்ல, சுவாதியும் அஞ்சலியும் புன்னகையோடு அதைப் புரிந்துகொண்டனர்.

இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு மறுபக்கம் திரும்ப, அங்குப் பல வருடங்களாக வேலை செய்யும் ஊழியர்களும், இவர்களைப் போலப் புதிதாகச் சேர்ந்தவர்களும் அறிமுகம் செய்துகொண்டனர். எல்லாரும் வந்து நட்புப் பாராட்டினாலும், அஞ்சலியும் சுவாதியும் ஒரு புன்னகையோடு நிறுத்திக்கொண்டனர். வெளி ஆட்கள் நட்பு இப்போதைக்குத் தேவையில்லை என்று அவர்களுக்குத் தோன்றியது.

சிறிது நேரத்தில், ஏழு நட்சத்திர அந்தஸ்து கொண்ட அந்தப் பிரம்மாண்டமான உணவகம் (Restaurant) வந்து சேர்ந்தது. அனைவரும் இறங்கி, ஊழியர்களுக்கான வழியில் சென்றனர். அங்கே நுழைவதற்குப் பல வழிகள் இருந்தன. ‘ஸ்பெஷல் எம்.டி’ வருவதற்குத் தனி வழி (அது யாருக்கும் தெரியாது), விருந்தினர்களுக்கு ஒரு வழி, வி.ஐ.பி விருந்தினர்களுக்கு ஒரு வழி என மொத்தம் ஏழு நுழைவாயில்கள் அந்தப் பிரம்மாண்டக் கட்டிடத்தில் இருந்தன.

“ஊட்டியில நாம பார்த்ததை விட இது ரொம்பப் பெரிய ரெஸ்டாரண்ட்டா இருக்கு. உன் புருஷன் பெரிய பணக்காரன் போல!” என்று சுவாதி சொல்ல,

“இது ஒன்னும் அவரா கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கல. எங்க மாமியார் கஷ்டப்பட்டு ஆரம்பிச்ச சின்ன ஹோட்டல் இது. போகப்போக நிறைய ஐடியாக்களைக் கொண்டு வந்து, பார்ட்னர்ஷிப் போட்டு இப்போ இவ்வளவு பெருசா வளர்ந்திருக்கு. இதுல எங்க மாமியாரோட பங்குதான் அதிகம்,” என்று சொல்லியவாறே இருவரும் உள்ளே நுழைந்தனர்.

அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே, தன் சிறப்பு வழியில் வந்துகொண்டிருந்த விஜய், அஞ்சலி வேலை செய்யும் துறைக்குள் நுழைய, இருவரும் நேருக்கு நேர் சந்தித்தனர். அவள் சொன்னது அவன் காதில் விழுந்துவிட்டது. ஆனால், எதையும் காட்டிக்கொள்ளாமல் அவளைக் கடந்து சென்றான். “என்ன பாஸ் இந்த பக்கம் வருகிறார்?” என்று அனைவரும் குழம்பினர். பிறகு ஊழியர்கள் தங்கள் அடையாள அட்டையை (ID Card) ஸ்கேன் செய்துவிட்டு இருக்கையில் அமர்ந்தனர்.

விஜய்யைப் பார்த்தவுடன் அனைவரும் மரியாதையுடன் எழுந்து நிற்க,

“நோ ஃபார்மாலிட்டிஸ்! புதுசா வந்தவங்க எல்லா விவரங்களையும் சீனியர்களிடம் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல, அதாவது 10 மணிக்கு மீட்டிங் இருக்கு. எல்லா டிபார்ட்மென்ட்டும் மீட்டிங் ஹாலுக்கு வந்துடுங்க. ஒரு அர்ஜென்ட் மீட்டிங் இருக்கு,” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

“இந்த மாதிரி மீட்டிங் இருந்தா கண்டிப்பா யாராவது ஒருத்தர் சம்பவத்துல மாட்டிருக்கணும். யாருக்கு இன்னைக்குப் பஞ்சாயத்தோ தெரியலையே!” என்று ஆளாளுக்குப் பேசிக்கொண்டனர்.

“அஞ்சலி, நீ இதைப் பத்தித் டென்ஷன் ஆகாதே. எம்.டி மீட்டிங் வைக்கிறார்னா வேற ஏதாவது டிபார்ட்மென்ட்ல யாராவது தப்புப் பண்ணியிருப்பாங்க. அவங்களைச் சுட்டிக்காட்டத்தான் இந்த மீட்டிங். ஆமா, உங்ககூட வந்த சுவாதியை வேற டிபார்ட்மென்ட் மாத்திட்டாங்களா? உங்களுக்கு என்ன போஸ்டிங்னு இன்னும் யாருக்கும் தெரியலையே,” என்று சக ஊழியர் கேட்க,

“பாஸ்க்கு ‘அசிஸ்டன்ட் பர்சனல் அக்கவுண்ட்’னு சொன்னாங்க. எனக்கும் சரியாத் தெரியல,” என்று அஞ்சலி குழப்பத்துடன் இருந்தாள்.

அப்போது, “கீதாஞ்சலி மேடம், உங்களை பாஸ் கூப்பிடுகிறார், வாருங்கள்,” என்று ஒரு முதியவர் வந்து சொல்ல, அவரைப் பின்தொடர்ந்து அஞ்சலி சென்றாள். நிர்வாக இயக்குநரின் (MD) அறைக்குள் நுழைய, ஏசி காற்று சில்லென்று வீசியது. அங்கே அவளுக்காகக் காத்திருந்தான் விஜய். அவளுக்குப் பிடித்தமான, கச்சிதமாகத் திருத்தப்பட்ட (Trimmed) தாடியுடன் அவன் இருந்தான்.

‘லவ் ஃபெயிலியர் தேவதாஸ் மாதிரி ஏன் இவ்வளவு தாடி வச்சிருக்கீங்க? கொஞ்சம் ட்ரிம் பண்ணா நல்லா இருக்கும்னு எத்தனையோ முறை நான் கெஞ்சிக் கேட்டப்ப எல்லாம் அவன் கேட்கவே இல்லை. ஆனா இன்னைக்குக் கச்சிதமா இருக்கானே! நான் இருக்கும்போது என் பேச்சைத் மதிக்காதவன், இப்போ என்னைத் தன் பக்கம் இழுக்க இப்படிச் செய்கிறானா?’ என்று அவள் பார்வை அவனைத் துளைத்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க, அந்த முதியவர் வெளியே சென்றவுடன் கதவு தானாகப் பூட்டிக்கொண்டது. விஜய் மெதுவாக அவள் அருகில் நெருங்கி வந்தான். அவன் மூச்சுக்காற்று அவள் கழுத்தில் படர, அவளோ பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள்.

“குட் மார்னிங் சார்,” என்று மெல்லிய குரலில் காலை வணக்கம் சொன்னாள். அந்த மயக்கத்திலிருந்து தன்னை மீட்டெடுத்தவன், இருக்கையில் அமர்ந்து பேசத் தொடங்கினான்.

“குட் மார்னிங் மிஸஸ் கீதாஞ்சலி விமல் விஜயன்! உன் ஹஸ்பண்டோட புதுக் கம்பெனியை இப்பதான் பார்க்கிறியா? எப்படி இருக்கு? எந்தத் தகுதியும் இல்லாத உன்னை என்னோட ‘பர்சனல் அசிஸ்டன்ட் அக்கவுண்டிங்’ வேலைக்கு அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன். காரணம், நீ என் பொண்டாட்டிங்கிறதாலதான். இந்தச் சொகுசு உனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குல்ல?” என்று விஷ அம்புகளைப் பாய்ச்சினான்.

“காசுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன் சார். எனக்குப் பணம்தான் முக்கியம். அதுக்காகத்தான் வேற ஒருத்தியை நினைச்சுக்கிட்டு என்கூடப் படுக்க வந்த புருஷனுக்கு முந்தானை விரிச்சு ஒரு குழந்தையைப் பெத்து…” என்று அவள் பேசி முடிப்பதற்குள், அவள் இதழ்களுக்குத் தண்டனை கொடுக்கும் விதமாகத் தன் இதழ்களை அவளோடு அழுத்தமாகச் சேர்த்தான் விஜய்.


You may also like

Leave a Comment

About Me

Featured