Home ANTIHERO1) மோகங்கள் ❣️

1) மோகங்கள் ❣️

by sreejanovels
8 views

அத்தியாயம் 1

அதிகாலை ஐந்து மணி. சென்னை அடையாற்றின் ஓரம், பனிப்புகை படர்ந்த அந்தப் பிரம்மாண்டமான ‘வர்மன் பேலஸ்’ ஒரு தூங்கும் எரிமலையைப் போலக் காட்சியளித்தது. அந்த மாளிகையின் உச்சாணிக் கிளையில் இருந்த மாஸ்டர் பெட்ரூமில், ஏசியின் குளிர் பதினாறு டிகிரியில் உறைந்து போயிருந்தது.

அந்த இருண்ட அறைக்குள், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த வெல்வெட் மெத்தையில், ஆதித்ய வர்மன் மல்லாக்கப் படுத்துக் கிடந்தான். அவனது அகன்ற மார்பின் மீது ஒரு மெல்லிய போர்வையை மட்டும் இழுத்துப்போட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். அலாரம் அடித்த அடுத்த நொடி, அவனது கண்கள் படாரெனத் திறந்தன. அவனது பார்வையில் ஒரு சிங்கத்தின் வேட்டைக்குத் தயாராகும் தீவிரம். படுக்கையிலிருந்து அவன் எழுந்தபோது, அவனது கட்டுக்கோப்பான உடலின் தசைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகத் துடித்தன. ஜிம்முக்குச் செல்வதற்கு முன்னதாகவே அவனது உடல் ஒரு பாறை போலத் திரண்டிருந்தது. கையில் இருந்த விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்சை ஒரு முறை பார்த்துவிட்டு, தன் முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி பால்கனிக்கு வந்தான். அங்கிருந்து கீழே தெரிந்த அவனது சாம்ராஜ்யத்தைப் பார்த்து ஒரு கர்வமான புன்னகையைச் சிந்தினான். ஆதித்யாவுக்குப் பெண்கள் என்பது ஒரு பொழுதுபோக்கு; அழகு என்பது ஒரு தகுதி. அவனது ஒரு சொல்லுக்கு அந்த அரண்மனையே ஆடும்.

மாளிகையின் இன்னொரு பகுதியில் இளஞ்செழியன் தன் மெத்தையில் ஒரு குறும்புக்காரக் குழந்தையைப் போலச் சுருண்டு கிடந்தான். அவனது ஐபோன் விடாமல் சிணுங்கிக் கொண்டிருக்க, மெதுவாகப் போர்வையை விலக்கி எழுந்தான். அவன் தூக்கத்திலிருந்து எழுந்தாலே அந்த அறையில் ஒரு இளமைத் துடிப்பு தொற்றிக் கொள்ளும். கண்ணாடி முன் நின்று தன் தாடியைத் தடவிப் பார்த்தபடி, “இன்னைக்கு எந்தப் பொண்ணு நம்மகிட்ட விழப்போகுதோ?” என்று தனக்குள்ளே ஒரு நக்கலான சிரிப்பை உதிர்த்துக் கொண்டான். அவனது காதுகளில் மின்னும் வைரக் கடுக்கன் அவனது வசீகரத்தை இன்னும் அதிகப்படுத்தியது.

கீழே டைனிங் ஹாலில், அந்தப் பிரம்மாண்டமான தேக்கு மர மேசைக்கு உயிர் வந்துவிட்டது. விஸ்வநாத வர்மன் ஒரு சக்கரவர்த்தியைப் போலத் தன் இருக்கையில் அமர்ந்து, அன்றைய தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ராஜேஸ்வரி, ஒரு அதிகாரமிக்க மகாராணியைப் போலத் தன் காபி கோப்பையைப் பிடித்துக் கொண்டிருந்தார். ராஜசேகர் வர்மன் தன் மனைவி தர்ஷினியிடம், “தர்ஷினி, டிபன் ரெடியா? பசங்க வந்துடுவாங்க,” என்று சொல்ல, தர்ஷினி தன் அதிகாரத் தோரணையில் வேலைக்காரர்களை மிரட்டிக் கொண்டிருந்தார். அந்த வீட்டில் அழகுக்குத்தான் முதல் மரியாதை.

அப்போது ராஜசேகர் வர்மனின் மகள்  கௌசல்யா தன் மகள்கள் ஸ்வேதா மற்றும் ஸ்ருதியோடு அங்கே ஆஜரானார். ஸ்வேதாவும் ஸ்ருதியும் காலையிலேயே முழு மேக்கப்போடு, அந்த வீட்டின் சொகுசில் மிதந்து கொண்டிருந்தனர். அவர்களின் ஒரே நோக்கம், ஆதித்யாவையோ அல்லது செழியனையோ எப்படியாவது வளைத்துப் போடுவதுதான். வீட்டோட மாப்பிள்ளையாக ஒப்புக்கொண்ட கௌசல்யாவின் கணவர் ஒரு விபத்தில் இருந்ததால் அவர்களுக்கு சேர வேண்டிய முழு சொத்தையும் பத்திரமாக இவர்களுக்கு ஒப்படைத்துவிட்டு இவர்கள் கம்பெனியையும் இந்த வீட்டை சார்ந்தவர்கள் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் ஊதாரித்தனமாக தான் இவர்கள் பணத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போது கௌசல்யா புது திட்டத்தோடு

“அண்ணே, நம்ம பசங்களுக்கு இவங்களைக் கட்டி வச்சுட்டா சொத்து நமக்காவே இருக்கும்,” என்று கௌசல்யா தன் நயவஞ்சகத் திட்டத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

“அதெல்லாம் பசங்களோட விருப்பம் இப்ப அத பத்தி எதற்கு பேச? வந்து சாப்பிடுங்க”.

என்று தர்ஷினி சொல்ல கௌசல்யா தன் அண்ணி மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.

கடைசியாக, ஒரு வெண்தாமரை மலர்வது போல அமைதியாக இறங்கினாள் நிலா. இந்த முரட்டுத்தனமான ஆதிக்கக் குடும்பத்தில் பிறந்த ஒரே ஒரு மென்மையான உயிர்மூச்சு அவள்தான். அவளது விழிகளில் ஒருவிதமான மிரட்சியும், அதே சமயம் யாரிடமும் சொல்ல முடியாத ஒரு ரகசிய ஏக்கமும் புதைந்திருந்தது.

அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ராஜசேகர் தன் பேரப்பிள்ளைகளை உற்று நோக்கினார்.

ஆதித்யா அழகும், கர்வமும், ஆணவமும் மிக்கவன்; மொத்தத்தில் தன்னைப்போலவே இருப்பவன் என்று அவர் பெருமை கொண்டார். மறுபக்கம் இளஞ்செழியன்; அவன் யார் என்று கணிக்க முடியாத ஒரு தீர்க்கதரிசி, அவனுக்குள் பல்லாயிரம் விஷயங்கள் புதைந்து கிடக்கின்றன. மற்றொரு புறம் நிலாவதி; அவள் முக ஜாடை ஒரு முக்கிய நபரை நினைவுபடுத்தியது, ஆனால் ராஜசேகர் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மூன்று பேரப்பிள்ளைகளும் தற்போது ராஜசேகருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, குடும்ப நிறுவனத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

“நிலா குட்டிக்கு 22 வயசாயிடுச்சு. இப்ப அவளும் குடும்பப் பொறுப்பை எடுத்துக்கிட்டு, நம்ம பிசினஸ் குரூப்ல ஜாயின் பண்ணி ஆறு மாசமா கலக்கிட்டு இருக்கா. இப்ப புது டெண்டர் அட்டென்ட் பண்ணப் போறீங்க. உங்க மூணு பேருக்கும் ஆல் தி பெஸ்ட்!” என்று தாத்தா மூவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது கவுசல்யா, “அப்பா, உங்க மகன் வழிப் பேரப் பசங்கள மட்டும் தான் எப்பவும் கொஞ்சிக்கிட்டே இருப்பீங்க போல! நானும் ரெண்டு பொண்ணுங்களைப் பெத்து வச்சிருக்கேன். இவங்களும் படிப்பு முடிச்சவங்க தான், ஏன் இவங்களும் நம்ம பிசினஸ் குரூப்ல ஜாயின் பண்ணக் கூடாது?” என்று கேட்டார்.

அதற்கு இளஞ்செழியன் நறுக்கென்று பதில் சொன்னான்: “அத்தை, நாங்க ஏற்கனவே உங்க பொண்ணுங்களைக் கூப்பிட்டுக்கிட்டு தான் இருக்கோம். ‘உங்க அப்பாவோட கம்பெனியும் இதுல ஜாயின் ஆகியிருக்கு, நீங்களும் கொஞ்சம் உழைக்கணும், உங்களுக்கும் சேர்த்து நாங்களும் உழைக்கிறோம்’ அப்படின்னு சொன்னோம். ஆனா உங்க பொண்ணுங்க தான் பார்ட்டி, பப், பார்லர்னு சுத்திக்கிட்டு இருக்காங்க. அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?”

கவுசல்யா உடனே, “அப்ப ஏதோ சின்னப் பிள்ளைங்க, இப்ப அவங்களுக்கு மெச்சூரிட்டி வந்துடுச்சு. ஏய் ஸ்வேதா, ஸ்ருதி! ரெண்டு பேரும் உங்க அத்தான்கள் சொல்றதைக் கேளுங்க,” என்று கண் காட்டினார்.

இரு பெண்களும் “சரி, சரி” என்று ஒப்புக்கொண்டு, அவர்களோடு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

மறுபக்கம், ‘சக்ரவர்த்தி இல்லம்’. இங்கே மார்பிள் தரைகள் இல்லை, ஆனால் மல்லிகைப் பூக்களின் மணமும் அன்பும் அந்த வீட்டை ஒரு கோவிலைப் போல மாற்றியிருந்தது.

முப்பதாண்டு கால போராட்டத்திற்குப் பிறகு, வெண்ணிலா இன்று ஒரு மனநிறைவான தாயாகத் தன் சமையலறையில் காபி போட்டுக் கொண்டிருந்தார். அஜித் சக்ரவர்த்தி தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். “வெண்ணிலா, இன்னைக்கு நம்ம பசங்க ஒரு பெரிய டெண்டர் மீட்டிங் போறாங்க. அவங்க உழைப்புக்கு கண்டிப்பா பலன் கிடைக்கும்,” என்றார் அஜித். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலா யார், அவர் பின்னணி என்ன என்பது பற்றி அஜித்தைத் தவிர அவர் பிள்ளைகளுக்கோ அல்லது வெளி உலகத்திற்கோ எதுவும் தெரியாது. அவர் ஒரு சாதாரண நடுத்தர வர்க்கத்துப் பெண் என்பதே பிள்ளைகளின் எண்ணம்.

மேலே, ஆரியன் சக்ரவர்த்தி தன் அறையில் ஒரு போர்ப்படைத் தளபதியைப் போலத் தயாராகிக் கொண்டிருந்தான். வெள்ளை நிறச் சட்டையும், கறுப்பு நிறப் பேன்ட்டும் அணிந்து, தன் டை-யைச் சரிபார்த்துக் கொண்டான். அவனது மாநிற மேனிக்கு அந்த வெள்ளை நிறம் ஒரு தனி கம்பீரத்தைத் தந்தது. அவனது கண்கள் கடலைப் போல அமைதியாகத் தெரிந்தாலும், உள்ளே ஒரு பெரிய புயலை அடக்கி வைத்திருந்தான்.

மைவிழி தன் அறையில் லேப்டாப்பில் மூழ்கியிருந்தாள். மாநிறத்திற்கும் சற்றே குறைவான நிறம் என்றாலும், அவளது கூர்மையான நாசியும், வில் போன்ற புருவங்களும் அவளுக்கு ஒரு அதிகாரமிக்க அழகைத் தந்தன. அவள் உடுத்தியிருந்த மெரூன் நிற காட்டன் புடவை, அவளது இடை வளைவுகளை நேர்த்தியாகக் காட்டியதோடு, அவளை ஒரு பிசினஸ் வுமன் போல மிடுக்காகக் காட்டியது. மைவிழிக்கு ஒரு ரகசியம் இருந்தது. பல வருடங்களுக்கு முன்பு ஒரு காலேஜ் பங்ஷனில் சீஃப் கெஸ்டாக வந்த ஆதித்யாவை பார்த்த அன்றே மனதை அவனிடம் பறிகொடுத்திருந்தாள். அவனுக்காகவே பிசினஸ் துறையில் அவனுக்குச் சமமாக வளர வேண்டும் என்று வெறியோடு உழைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது யாழ்மொழியின் அறைக்குள் இருந்து ஒரு மெல்லிய சிரிப்பொலி கேட்டது. கதவைத் திறந்து பார்த்தால், யாழ்மொழி தன் போனை ஒரு ஸ்டாண்டில் வைத்துவிட்டு, ஏதோ ஒரு காமெடி வீடியோவிற்கு ரியாக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தாள். வெளியே பார்க்கும் போது அவள் ஒரு பூரித்த உடல்வாகு கொண்ட, பயந்த சுபாவம் உள்ள பெண். கூட்டத்தைக் கண்டால் அண்ணன் பின்னால் ஒளிந்து கொள்வாள். ஆனால் ஆன்லைனில் அவள் தான் ‘மொழிவரி’. லட்சக்கணக்கான ரசிகர்களைத் தன் நகைச்சுவையால் கட்டிப் போட்டிருக்கும் ஒரு சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்சர். அவளது ரொமான்டிக் ஸ்டேட்டஸ்களும், நக்கலான மீம்ஸ்களும் இணையத்தில் பிரபலம்.

“யாழ்! கிளம்பு நேரமாச்சு. அங்க போனா மிரண்டு போய் நிக்காத,” என்று மைவிழி அவளைக் கிண்டல் செய்தாள்.

யாழ்மொழி சட்டெனத் தன் முகத்தை மாற்றிக் கொண்டு, “பயப்படாதீங்க அக்கா. நான் சும்மா முள்ளுக்குள்ள பேசிக்க மாட்டேன். ஆனா அவங்க ஏடாகூடமா ஏதாவது பேசினா, நான் பேசுற ஒரு வார்த்தை திருவாசகம் மாதிரி நறுக்குன்னு இருக்கும். அப்புறம் அவங்க ஆயுசுக்கும் அதை மறக்க மாட்டாங்க!” என்று நறுக்கென்று சொன்னாள்.

இரண்டு குடும்பங்களும், ஒரு பக்கம் ஆணவத்தின் உச்சத்திலும், மறுபக்கம் திறமையின் நம்பிக்கையிலும் அந்தப் பெரிய டெண்டர் மீட்டிங்கை நோக்கி நகரத் தொடங்கினர். ஒருவருக்கு ஒருவர் யார் என்பது தெரியாமலேயே அந்தப் போர்க்களத்தில் சந்திக்கப் போகிறார்கள்.


சென்னை நுங்கம்பாக்கத்தின் அதிஉச்ச சொகுசு அடையாளமான ‘ராயல் கிராண்ட்’ ஹோட்டலின் முகப்பு, அன்று காலையிலேயே அதிகாரத்தின் வாசனையைச் சுமந்து நின்றது. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த மெகா டெண்டருக்காகப் பெரும் புள்ளிகள் எல்லாம் அங்கே குவிந்திருந்தனர்.

நிமிடத்திற்கு ஒரு விலை உயர்ந்த கார் வந்து நிற்க, சரியாக பத்து மணிக்கு ஒரு பிரம்மாண்டமான கறுப்பு நிற பென்ஸ் கார் ஹோட்டல் வாசலில் வந்து நின்றது. அதன் கதவை டிரைவர் விரைந்து வந்து திறக்க, உள்ளிருந்து முதலில் வெளியே வந்தான் ஆதித்ய வர்மன். அவனது காலடியில் இருந்த விலை உயர்ந்த லெதர் ஷூக்கள் தரையைத் தொட்டபோது, அங்கே ஒரு அதிர்வு உண்டானது போலிருந்தது.

ஆதித்யா அணிந்திருந்த அந்த சாம்பல் நிற சூட், அவனது ஆறடி உயரத்தையும், ஜிம்மில் செதுக்கப்பட்ட இரும்பு போன்ற தோள்களையும் கம்பீரமாகப் பறைசாற்றியது. அவன் அணிந்திருந்த கருப்பு கண்ணாடிக்குள்ளிருந்து அவனது கண்கள் அந்த இடத்தையே ஒரு முறை மேய்ந்தன. அவனுக்குப் பின்னால் இளஞ்செழியன், ஒரு மாடல் போல ஸ்டைலாக இறங்கினான். அவனது சட்டையின் மேலிருந்த இரண்டு பொத்தான்கள் திறந்திருக்க, அவனது வைரக் கடுக்கன் சூரிய ஒளியில் மின்னியது. அவனது இதழோரம் ஒரு ஏளனமான புன்னகை எப்போதும் ஒட்டியிருந்தது.

அவர்களுக்குப் பின்னால் நிலா இறங்கினாள். வானத்தில் இருந்து இறங்கிய மேகம் போல, மெல்லிய வெண்நிற சுடிதாரில், மிகவும் அடக்கமாகவும் மிரட்சியுடனும் தன் அண்ணன்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு வந்தாள். அவர்களுக்குத் துணையாக ஸ்வேதாவும், ஸ்ருதியும் அதிகப்படியான ஒப்பனையோடு, ஆதித்யாவையும் செழியனையும் எப்படித் தங்கள் வசப்படுத்துவது என்ற திட்டத்தோடு உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் உள்ளே சென்று அமர்ந்த ஐந்தாவது நிமிடம், ஒரு வெள்ளை நிற எஸ்.யு.வி கார் வந்து நின்றது. அதிலிருந்து ஆரியன் சக்ரவர்த்தி இறங்கினான். ஆதித்யாவின் கர்வத்திற்குச் சற்றும் குறையாத கம்பீரம் அவனிடம் இருந்தது. அவன் அணிந்திருந்த அடர் நீல நிறச் சட்டை அவனது மாநிற மேனிக்கு ஒரு மிரட்டலான அழகைத் தந்தது. அவனது ஒவ்வொரு அடியிலும் ஒரு நிதானமும் உறுதியும் இருந்தது.

அவனுக்குப் பின்னால் மைவிழி இறங்கினாள். அவளது கண்கள் மின்னும் வைரம் போலப் பிரகாசித்தன. அவள் அணிந்திருந்த மெரூன் நிற காட்டன் புடவை, அவளது எடுப்பான உடல்வாகையும், இடை வளைவுகளையும் நேர்த்தியாகக் காட்டியது. மைவிழியின் இதயம் இப்போது நூறு கிலோமீட்டர் வேகத்தில் துடித்தது. எதிரே அமர்ந்திருக்கும் ஆதித்ய வர்மன்! அவளது கல்லூரி நாட்களின் கனவு நாயகன். அன்று மேடையில் அவனைப் பார்த்தபோது விழுந்த காதல், இன்றுவரை அவளுக்குள் ஒரு ரகசியக் கனலாக எரிந்து கொண்டிருந்தது. ஆனால், அவன் முன் ஒரு பலவீனமான பெண்ணாக நிற்க அவள் விரும்பவில்லை.

கடைசியாக யாழ்மொழி மெதுவாகக் காரிலிருந்து இறங்கினாள். பூரித்த கன்னங்களும், சற்றே பருமனான உடல்வாகுடனும் இருந்த அவளைக் கண்டதும், அங்கிருந்த சிலர் மெல்லிய குரலில் கேலி செய்தனர். யாழ்மொழி அதை உணர்ந்து தலையைக் குனிந்து கொண்டு ஆரியன் பின்னால் ஒளிந்து கொண்டாள். ஆனால் அவளது கைகள் தன் கைப்பையை இறுக்கிப் பிடித்திருந்தன. அவளுக்குள் இருக்கும் அந்த ‘மொழிவரி’ இப்போது அந்தக் கூட்டத்தை நையாண்டி செய்யத் துடித்துக் கொண்டிருந்தான்.

மீட்டிங் ஹால். ஒரு பக்கம் வர்மன் குடும்பம், மறுபக்கம் சக்ரவர்த்தி குடும்பம். ஒருவருக்கு ஒருவர் யார் என்பது தெரியாது, ஆனால் ஒருவிதமான இனம்புரியாத மின்சாரம் அங்கே பாய்ந்தது.

ஆதித்யா தன் கையில் இருந்த கோல்டன் பேனாவை மேசையில் ‘டக் டக்’ என்று தட்டிக் கொண்டே, எதிரே அமர்ந்திருந்த மைவிழியைப் பார்த்தான். அவனது பார்வை அவளது முகத்தில் சில நொடிகள் நிலைத்தது. அவளது அந்த நிறமும், அவளது முகத்தில் இருந்த அந்தத் துணிச்சலும் அவனுக்குள் ஒரு விசித்திரமான ஈர்ப்பை உண்டாக்கியது. ஆனால், அவன் அதை ஒரு ஏளனச் சிரிப்பால் மறைத்துக் கொண்டான்.

“யார் இந்த புதுக் கம்பெனி? இதுவரை கேட்டதே இல்லையே? சின்னக் கடை நடத்துறவங்க எல்லாம் இன்னைக்குப் பெரிய டெண்டர் எடுக்க வந்துட்டாங்களா? இதெல்லாம் வர்மன் குரூப்ஸ்க்குப் போட்டி இல்ல, வெறும் காமெடி!” என்று ஆதித்யா உரத்த குரலில் சொல்லிச் சிரித்தான்.

அரங்கமே அமைதியானது. மைவிழி மெதுவாக எழுந்தாள். அவளது புடவையின் முந்தானையைச் சரி செய்து கொண்டு, ஆதித்யாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள். “மிஸ்டர் வர்மன், கம்பெனியோட பழமையை விட, அந்த கம்பெனியோட புதுமையான சிந்தனை தான் முக்கியம். நாங்க காமெடி பண்ண வரல, உங்க கம்பெனி இதுவரை செஞ்ச தப்புகளைத் திருத்தி, ஒரு நேர்மையான பிசினஸ் பண்ண வந்திருக்கோம். இந்த டெண்டர் முடிவை அறிவிக்கிறப்போ தெரியும், யாரு காமெடி யாரு கில்லாடின்னு!” என்று அவள் மிக அழுத்தமாகச் சொன்னாள்.

ஆதித்யாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. ஒரு பெண், அதுவும் தன்னை விட வசதியில் குறைந்தவள் என்று அவன் நினைப்பவள், தன்னை எதிர்த்துப் பேசுவதா? அவனது ஈகோ சுண்டியடிக்கப்பட்டது.

அதே சமயம், இளஞ்செழியன் தன் பார்வையை யாழ்மொழி மீது திருப்பினான். “ஏய் குண்டுப் பொண்ணு! இங்க என்ன பண்ற? இது பிசினஸ் மீட்டிங், ஏதாவது கல்யாண வீட்டுப் பந்தி இல்ல… தப்பா வந்துட்டியோ?” என்று நக்கலாகக் கேட்டான்.

யாழ்மொழி மெதுவாகத் தலை நிமிர்ந்தாள். அவளது முகம் சிவந்திருந்தது. ஆனால் அவள் பேசத் தொடங்கியபோது அங்கே அனல் பறந்தது. “மிஸ்டர் செழியன், சாப்பாட்டுப் பந்தியில மட்டும் இல்ல, பிசினஸ்லயும் ‘வெயிட்’ முக்கியம். அந்த வெயிட் எங்க கிட்ட இருக்குன்னு இந்த டெண்டர் முடிவுல புரியும். அதுவரைக்கும் உங்க வாய்க்கு கொஞ்சம் லீவு கொடுங்க, இல்லன்னா உங்க மேல ஒரு நல்ல மீம் போட வேண்டியிருக்கும்!” என்று நறுக்கென்று சொல்லிவிட்டு அமர்ந்தாள்.

செழியன் அதிர்ந்து போனான். இவள் எப்படித் தன்னை எதிர்த்துப் பேசலாம்?

சரியாகப் பத்து நிமிடம் கழித்து டெண்டர் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வர்மன் குரூப்ஸிற்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இதுவரை அந்தத் துறையில் தோல்வியே கண்டிராத அவர்களுக்குச் சமமாக, 50% பங்குகளை ஆரியன் குரூப்ஸ் தட்டிச் சென்றது. அந்தப் பிரம்மாண்டமான ப்ராஜெக்ட்டை இரண்டு நிறுவனங்களும் இணைந்து (Joint Venture) செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்தது.

அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. ஆதித்யா ஆத்திரத்தில் மேசையை ஓங்கித் தட்டினான். அவன் கண்கள் மைவிழியை ஆக்ரோஷமாகப் பார்த்தன. ஆரியன் மெதுவாக எழுந்து வந்து ஆதித்யாவிற்கு கையை நீட்டினான். “வெல்கம் பார்ட்னர்! இனி நாம ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு வேலை செய்யணும்.”

ஆதித்யா அவனது கையைப் பிடிக்காமல், “வர்மன் யாருக்கும் பார்ட்னர் இல்ல, மாஸ்டர் தான்! இதை நீ சீக்கிரம் புரிஞ்சுப்ப” என்று கரகரப்பான குரலில் சொல்லிவிட்டு விறுவிறுவென்று வெளியேறினான்.

ஆரியன் திரும்பும் போது, நிலாவின் மிரண்ட விழிகள் அவன் மீது விழுந்தன. அந்தப் பார்வையில் ஒரு மெல்லிய காதல் கவிதை இருந்தது. நிலாவுக்கும் ஆரியனுக்கும் இடையே அந்த நொடி ஒரு ரகசிய உறவு மலரத் தொடங்கியது.


You may also like

Leave a Comment

About Me

Featured