அத்தியாயம் 1
மிகப்பெரிய ஸ்டேடியம் ஒன்றில் தொழிலதிபர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அது ஒரு தனியார் நிறுவனம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சாதனை புரிந்து கொண்டிருக்க, அனைவரும் தங்களது விருதுகளைக் குடும்பத்தோடு வாங்கி மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
இறுதியாகச் சிறந்த இளம் தொழிலதிபருக்கான விருதை அறிவிக்கும் சமயம், ஒரு விஐபி மைக்கைப் பிடித்து,”ஓ மை காட்! இதோடு இவர் மூன்றாவது முறையாக இந்த அவார்டு வாங்குகிறார். பெஸ்ட் எங்கஸ்ட் பிசினஸ் மேன் ஆஃப் தி இயர் மிஸ்டர் விமல் விஜயன்! கமான் யங் மேன்!”என்று அழைத்தவுடன் சுற்றி இருந்த பார்வையாளர்கள் அனைவரும் கைத்தட்டி அவனை உற்சாகப்படுத்தினர்.
ஆனால் அவனுக்காக முழுமையாகக் கைதட்டி ஆரவாரப்படுத்த, குடும்பத்தினர் என்று ஒதுக்கப்பட்ட சீட்டில் யாருமே இல்லை. அமைதியாக வந்து அவார்டு வாங்கிக் கொண்ட அவனின் ஆறடி உயரமும், பால் போன்ற தேகமும், அடர்ந்து வளர்ந்த தாடியும், கழுத்து வரை நீண்ட கேசமும், கண்களைக் கட்டி இழுக்கும் அவனது காந்தப் பார்வையும் அனைவரையும் கவர்ந்தன.
இவற்றை கேமராக்கள் படம் பிடிக்க, நேரில் பார்த்தவர்கள் சொக்கிப்போக, டிவியில் பார்த்த கன்னிப்பெண்கள் அனைவரும் மயங்கியே விட்டார்கள்.நான்கு வார்த்தை கூட பேசாமல் அப்படியே மேடை விட்டு இறங்கிவிட்டான். அதே சமயம் அவனின் மொத்தக் குடும்பமும் டிவியின் முன்னால் அமர்ந்து கொண்டு அதைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“அம்மா, இந்த வாட்டி கூட அண்ணன் தான் அவார்டு வாங்கி இருக்கு. ஆனா ரெண்டு முறை அவார்டு வாங்கும் போதும் நம்மள ஏன் கூப்பிடல? அண்ணாவுக்கு நம்ம மேல என்ன கோபம்?” என்று அவன் தங்கை வினுஷா கேட்டதற்கு, ராதா எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அமைதி காத்தார்.
“சித்தி நீ ஏன் சோகமா இருக்க? அவன் பண்ண தப்புக்கு இந்தத் தண்டனை சரியானதுதான். நம்ம மட்டும் அங்க இல்லாம இருந்தா அவன் ஜெயில்ல இருப்பான். நம்மகிட்ட கோபப்பட்டு ரெண்டு வருஷம் பேசாம இருந்தாலும் பரவாயில்லை, ஒரு நாள் நம்ம செஞ்சது சரி அப்படின்னு நினைச்சு நம்மள தேடி வருவான். அப்போதாவது டெல்லியில் எட்டு வருஷம் வாழ்க்கையை கழிச்சான், இப்போ இதே ஊர்ல தனியா ஒரு பங்களா கட்டி வாழ்ந்துட்டு இருக்கான். துரைக்கு பெரிய கொம்பன் நினைப்பு! சரி சரி நேரமாச்சு எல்லாரும் தூங்க போங்க” என்று அம்பை அனைவரையும் விரட்டியடிக்க, அனைவரும் அவரவர் அறைக்குள் சென்றுவிட்டனர்.
இசையின் மனதில் மட்டும் ஏதோ ஒரு விஷயம் ஓடிக்கொண்டே இருந்தது.”இனியன், நாம எதுக்கு அவளை இங்க வர வைக்கக் கூடாது? அதனாலதானே அண்ணன் நம்மகிட்ட பேசாம இருக்காரு. ஒருவேளை அவ வந்தா…””எதுக்கு? மறுபடியும் அந்தப் பொண்ணு நிம்மதியா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? ஒரு அப்பாவிப் பொண்ணைப் போட்டு மொத்தக் குடும்பமும் வச்சு செய்றீங்க. எனக்கு இது சரியா படல. அந்தப் புள்ள எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்” என்று இசை கேட்டதற்கு அவளது கணவன் பதிலளித்துவிட்டுச் செல்ல, அவள் குழந்தைகளோடு உறங்க ஆரம்பித்தாள்.
—
ஊட்டிவிமல் விருது வாங்கும் காட்சியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி. அவன் விவரங்களை ஏதோ ஒரு வழியில் தெரிந்து கொண்டுவிடுவாள். கேட்டால் அவனைப் பிடிக்கவில்லை என்பாள்.
வழக்கம்போல் அவன் விருது வாங்குவதைப் பார்த்துவிட்டுத் திருப்தியாகத் திரும்ப, அவளை முறைத்துக் கொண்டிருந்தாள் அவளது தோழி சுவாதி.”என்னாச்சுடி ஏன் இப்படி முறைக்கிற?””ஏன் முறைக்க மாட்டேன்? அவன் வேண்டாம்னு ஒதுக்கிட்டு இங்க வந்த… ஆனா எப்ப பார்த்தாலும் அவங்கள பத்தித் தகவல்கள் தெரிஞ்சுக்கிற. இவ்வளவு லவ் இருக்கிறவ எதுக்குடி தலைமறைவா வாழணும்? இந்த விஷயம் மட்டும் அவருக்கு தெரிஞ்சது உன்னோட சேர்த்து எனக்கும் சமாதி கட்டிடுவார்” என்று பயத்தோடு சொன்னாள் சுவாதி.அஞ்சலி சிரித்துக்கொண்டே, “அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லடி. நான் அவர் கண்ணில் பட மாட்டேன், படவும் கூடாது. அப்படியே பார்த்தாலும் என்ன ஆகப்போகுது? அவருக்கு என்னைப் பிடிக்காது. அதனால்தான் நான் இங்க வந்தேன். ஒரு காலத்துல அவர் பார்வை, பேச்சு, தொடுதல் எல்லாத்தையும் எனக்குன்னு நம்பி ஏமாந்து போயிட்டேன். மறுபடியும் அவரோட ஒரு வாழ்க்கையை நினைச்சு கூட பார்க்க முடியாது. ஆனா என்னால அவரை மறக்கவும் முடியல, மன்னிக்கவும் முடியல. சாரி கேட்கிற அளவுக்கு அவர் பிட்டா மேல் கிடையாது, ஆல்பா மேல். சோ எப்பவுமே தனித்துவமா தான் இருப்பார். அதை விடு, டின்னருக்கு என்ன பண்ற? பசிக்குது” என்று வயிற்றைத் தடவிப் பேச்சை மாற்றினாள்.
“முதல்ல என் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்ட பிறகுதான் உனக்கு. சோட்டுக்கு ஊட்டிட்டு வரேன், அப்புறம் நாம சாப்பிடலாம்” என்று சொல்லி சுவாதி ஒரு வயது பாலகனான சோட்டுவைத் தூக்கிக் கொண்டு நிலாக் காட்டிச் சோறு ஊட்டினாள். அவர்களின் அன்பைப் பார்க்க அஞ்சலிக்கு ஆசையாக இருந்தாலும், தாழ்வு மனப்பான்மையால் விலகி நின்றாள்.சுவாதி அஞ்சலி அருகே சென்று குழந்தையைக் கொடுக்க, அஞ்சலி அவனைத் தூக்கி மடியில் வைத்துத் தட்டிக் கொடுக்க குழந்தை உறங்கியது. இதைப் பார்த்த சுவாதிக்குக் கோபம் வந்தது.
“நீ எல்லாம் பெத்தவளா? குழந்தைகிட்ட கொஞ்சமாவது பாசத்தைக் காட்டலாம் இல்லையா? ஏன் இப்படி விலகி இருக்க?”அஞ்சலி விரக்தியாகச் சிரித்துக்கொண்டே, “உனக்கு என் நிலைமை சொன்னால் புரியாது. சின்ன வயசுல இருந்து அப்பா பேரு தெரியாதவன்னு ஊர் எங்க அம்மாவை அசிங்கப்படுத்தினாங்க. ஆனா எங்க அம்மா தப்பான வழியில் என்னைப் பெத்துக்கல. அப்பா பண்ற தப்பு பிடிக்காம தனியா வந்தாங்க. நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது அப்பா பார்க்க வர்றதா சொன்னாங்க. ஆவலா இருந்தப்போ என்னைக் கடத்திட்டுப் போயிட்டாங்க.
அங்க போன பிறகுதான் தெரிந்தது எங்க அப்பா இன்னொரு லேடியோட தப்பான உறவில் இருந்தது. அந்தச் சமயத்தில் வினுஷா அக்கா பிரக்னண்டா இருந்தாங்க. என்னைத் தாக்க வந்தப்போ காப்பாத்தப் போய் அக்கா கீழே விழுந்துட்டாங்க. அதனால அக்காவோட பாப்பா அழிஞ்சு போச்சு. என்னைக் காப்பாத்தி ஹாஸ்டல்ல சேர்த்தாங்க. ஆனா மறுபடியும் பிரச்சனை ஆகி, நான் உயிருக்குப் போராடினேன். கண் முழிச்ச பிறகுதான் தெரிந்தது, வினு அக்கா இறந்துட்டாங்க. அவங்களோட இதயத்தைத்தான் எனக்குப் பொருத்தி இருக்காங்க.எட்டு வருஷம் கழிச்சு வினு அக்காவோட ஹஸ்பண்ட் விஜய் (விமல்) டெல்லியில் இருந்து சென்னை வந்தாரு. அப்போ நான் எம்பிஏ பைனல் இயர்.
நானே விலகிப் போக நினைச்சாலும் என் இதயத் துடிப்பு அவரை விட்டு விலகல. அப்புறம் ஒரு கான்ட்ராக்ட் படி வாழ்க்கை நடந்தது. ஆனா எவ்வளவு நாள் தான் தாங்க முடியும்? அதான் வந்துட்டேன். விஜய் என்னைத் தேடி இருக்க மாட்டாரு. இப்ப கூட பாரு அவார்டு வாங்கிட்டு ஜாலியா இருக்காரு. நான் தான் குழந்தையை வச்சு கஷ்டப்படுறேன்” என்று வருத்தமாகச் சொன்னாள்.இருவரும் உண்டு முடித்துவிட்டு உறங்கச் சென்றனர்.
அஞ்சலி மகனை அணைத்துக் கொண்டு உறங்கினாள்.
ஆனால் ஒருவனோ அவளால் தொலைந்த நிம்மதிக்காகக் கதறிக் கொண்டிருந்தான்.தனி பங்களாவில், ஜிம் அறையில் மேல் சட்டை இல்லாமல் பாக்சிங் பேக்கை வெறிக்கொண்டு குத்திக் கொண்டிருந்தான் விமல் விஜயன்.
அந்த ஞாபகம் வந்தாலே அவன் மிருகமாகிவிடுவான்.”ஆஆஆஆ! என்னை முட்டாளாக்கி ஏமாத்திட்ட இல்ல? நான் தான் உன்னை அழ வைக்கணும், ஆனா நீ என்னைத் துடிக்க வச்சுட்டுப் போயிட்ட. மறுபடியும் என் கண்ணில் சிக்கு… அன்னைக்கு இருக்கு உனக்குச் சிவராத்திரி! எங்கடி போன அஞ்சலி?” என்று ஆக்ரோஷமாக அவள் புகைப்படத்தைப் பார்த்துத் தன் கோபத்தை பாக்சிங் பேக் மீது காட்டிக் கொண்டிருந்தான் விமல் விஜயன்.