அத்தியாயம் 1
இருளின் நிழல்
இரவு, சென்னையின் பரபரப்பான வீதிகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருந்தது.
“அதிரூபன் பேலஸ்” என்று தங்க நிற எழுத்துக்களால் பிரம்மாண்டமாக அந்த மாளிகை தன்னைத் தானே பறைசாற்றிக் கொண்டிருந்தது. அந்த ராட்சச நுழைவு வாயிலுக்கு வெளியே இரண்டு காவலர்கள், உள்ளே மூன்று காவலர்கள் எனப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இது பிரதான வாயில் மட்டுமே. இதேபோல் இன்னும் இரண்டு வாயில்கள் இருந்தன. அங்கெல்லாம் தலா ஐந்து காவலர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி வலம் வந்து கொண்டிருந்தனர்.
வீட்டிற்கு வலப்புறம் மிகப்பெரிய ஹால் இருந்தது. மீட்டிங் அல்லது பார்ட்டி என்றால் அங்குதான் நடக்கும். ஆயிரம் மக்கள் கூடினால் கூட நெரிசல் இல்லாமல் தாராளமாக அமரும் வகையில் அந்த இடம் அமைக்கப்பட்டிருந்தது. இடப்புறம் மிகப்பெரிய தோட்டம். மரங்கள், செடிகள், காய்கறிகள், மலர்கள் என ஒவ்வொன்றும் வரிசையாக அழகாகப் பராமரிக்கப்பட்டு வந்தன. அதற்கு நடுவேதான் அந்தப் பேலஸ் நின்றது. வெளியே கலை நயம் மிக்கதாகவும், உள்ளே நுழைந்தால் ஏதோ ஒரு கலை உலகிற்குள் சென்றுவிட்டோமோ என்று ஆச்சரியப்படுத்தும் வகையிலும் அது இருந்தது.
அந்த அரண்மனைக்கு முடிசூடா மன்னன் நம் நாயகன் — அதிரூபன் எனப்படும் ராவணன்.

தனது ஆடம்பரமான மாளிகையில், தனிமையின் அமைதியில் மூழ்கியிருந்தான் அவன். அவனது வாழ்க்கை ஒரு கணக்கிடப்பட்ட சதுரங்க ஆட்டத்தைப் போன்றது. ஒவ்வொரு நகர்வும் துல்லியமானது; ஒவ்வொரு முடிவும் அவனது கட்டுப்பாட்டில் இருந்தது. அவனுக்கு உலகமே ஒரு விளையாட்டு மைதானம். அதில் அவன் மட்டுமே விதிகளை வகுப்பவன்.
ராவணன் வெறும் பணக்காரன் மட்டுமல்ல, அவனது சாம்ராஜ்யம் நிழல் உலகிலும் பரவியிருந்தது. கலைப்பொருட்கள் கடத்தல், சட்டவிரோத முதலீடுகள், அரசியல் பின்புலம் என அவனது கைகள் எங்கும் நீளக்கூடியவை. அவனது கண்ணசைவில் ஒரு சாம்ராஜ்யமே இயங்கும். அவனது பெயரைக் கேட்டாலே பலர் அஞ்சுவார்கள். அவன் யாருக்கும் கட்டுப்படாதவன், எந்த உணர்வுக்கும் அடிமையாகாதவன். அவனது வெற்றிக்கு ஒரே ஒரு காரணம், அவனது இலக்குகளில் இருக்கும் அசைக்க முடியாத பிடிவாதம்.
அவனது படுக்கையறையில் கண்கவர் கலைப்பொருட்களும், பழங்கால ஓவியங்களும் நிரம்பியிருந்தன. 33 வயதைக் கடந்துவிட்ட அவனுக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிட்டது. ஒரு காலத்தில் இதெல்லாம் அவன் கனவில் கூட எட்டாத விஷயங்கள். கடன் தொல்லையால் தாய் தந்தையை இழந்தபோது ராவணன் (அதிரூபன்) எட்டு வயது சிறுவன். தன் கண் முன்னாலேயே அவர்கள் தூக்கில் தொங்குவதைப் பார்த்ததிலிருந்து அவன் யாரிடமும் பேசுவதை நிறுத்திவிட்டான். அவனுக்குத் தெரிந்த தூரத்துச் சித்தப்பா ஒருவர் அவனை மும்பை சோர் பஜாருக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் சேர்த்தார்.
வளர வளர ராவணன் மனதில் ஒன்று மட்டும் ஆழமாகப் பதிந்தது. “நம்மிடம் எதுவும் இல்லை என்றால் இந்த உலகம் மதிக்காது. அனைத்தையும் நாம் வாங்க வேண்டும்; அனைத்தும் நமக்கே வேண்டும்.” அந்தப் பகுதியிலேயே வளர்ந்ததால், அங்கிருந்த கலைப்பொருட்கள் மற்றும் ஓவியங்கள் மீது அவனுக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டது.
சட்டவிரோதமாக அரசியல் தலைவர்களுக்குக் கைமாற்றப்படும் ஓவியங்களை அவனது சித்தப்பா கையாளுவதை அவன் கவனித்தான். 14 வயதில் தானும் அவருடன் வருவதாகச் சொன்னான். “சிறுவன் தானே, போலீஸ் கூட சந்தேகப்பட மாட்டார்கள்” என்று நம்பி சித்தப்பா அவனை அழைத்துச் சென்றார். ஆனால் அவன் செய்த வேலையைப் பார்த்த சித்தப்பாவுக்கே பெரும் ஆச்சரியம் ஏற்பட்டது. தன்னைவிடப் பெரிய வித்தைக்காரனாக இவன் வருவான் என்று அவர் அப்போது நினைக்கவில்லை. ஒரு அரசியல்வாதியிடம் இருந்து ஒரு பொருளைப் பறிப்பது என்பது ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படுவது’ போன்றது. ஆனால் அதைத் துல்லியமாகச் செய்து முடித்துவிட்டு, எதுவுமே தெரியாதது போல் டோல்கேட்டைக் கடந்து வந்த ராவணனைப் பார்த்து இப்போதும் அவர் ஆச்சரியப்பட்டுத்தான் போகிறார்.
வருடங்கள் செல்லச் செல்ல ராவணனின் வேகம் முற்றிலுமாக மாறிவிட்டது. பெரிய அரசியல் தலைவர்களின் ரகசியங்களை வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் வாங்குவது, வட்டி வசூல் செய்வது, அசல் கலைப்பொருட்களைத் தன்னிடம் வைத்துக்கொண்டு போலித் தயாரிப்புகளை விஐபிக்களுக்கு விற்பது எனப் பத்தொன்பது வருடங்களாகத் தன் அதிகாரத்தைச் செலுத்தி வந்தவன், இப்போது நிழல் உலகின் மிகப்பெரிய தாதாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அவனது சித்தப்பா இப்போது கோடிக்கணக்கான பணத்தோடு, “இதற்கு மேல் ஏன் உழைக்க வேண்டும்?” என்று உலகைச் சுற்றும் வாலிபனாக 40 வயதில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். ராவணன் தனக்கு வரும் வேலைகளைத் தன் அடியார்களை வைத்துச் செய்து முடிப்பதோடு, முக்கியமான விஐபி சந்திப்புகளை மட்டும் நேரில் கவனித்துக் கொள்கிறான். இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது ராவணன் வாழ்க்கை.
அறிமுகம் போதும், இனி கதைக்குள் செல்லலாம்.
அன்று காலை மிகப்பெரிய பிசினஸ் டீலிங் ஒன்றை ஓர் எம்பியோடு (MP) செய்ய வேண்டியிருந்தது. ஒரு மிகப்பெரிய ஏழு நட்சத்திர ஹோட்டலில் அந்த எம்பி ஒரு மணி நேரமாக ராவணனுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். ராவணனின் படை இன்னும் வரவில்லை.
எம்பிக்கு மிகவும் கடுப்பாக இருந்தது. தன் காரியம் ஆக வேண்டும் என்பதால் பற்களைக் கடித்துக் கொண்டு காத்திருந்தான். இவன் மட்டுமல்ல, இவனை விடப் பெரிய பதவியில் இருப்பவர்களே ராவணனின் தயவைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் நான்கு ஆப்பிள் ஜூஸ்களைக் குடித்து முடித்த எம்பி, கோபமாகத் தனது பிஏ-வைப் (PA) பார்த்துப் புலம்பினான்.
“மும்பையிலிருந்து வந்தவன் சென்னையை ஆண்டுகொண்டிருக்கிறான். என்னையே காக்க வைக்கிறான்! ஏதோ வேலையை முடிப்பான் என்பதால்தான் இங்கு வந்திருக்கிறேன். இல்லையென்றால் இவனிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் எனக்கு என்ன இருக்கிறது? இவனையெல்லாம் பிடித்து ஜெயிலில் போட வேண்டும். ஆனால் என்ன செய்வது? பதவியில் இருக்கும் எல்லாரையும் ஜெயிலில் போட்டால்தான் இவனைக் கடைசியாகப் போட முடியும். இங்கே யார்தான் சரியாக இருக்கிறார்கள்? நான் செய்வது சட்டவிரோதச் செயல்தான், ஆனால் அதில் ஒரு நன்மை இருக்கிறது. எப்போதுதான் இந்த ராவணன் வருவான்?”
எம்பி தன் பிஏ-விடம் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தபோது, வெளியே ஏழு கார்கள் அணிவகுத்து வந்தன. அதில் நடுவில் வந்த லம்போர்கினி காரிலிருந்து, சிவப்பு நிறச் சட்டை, கருப்பு நிற பேண்ட், கருப்பு ஜாக்கெட் அணிந்து, கரிய நிறக் கூலர்ஸை ஸ்டைலாக மாட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான் ராவணன்.
அவன் உள்ளே நுழைந்தவுடன் ஹோட்டலில் இருந்த மற்றவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் பிரமிப்போடு அவனைப் பார்த்தனர். எம்பிக்கு எரிச்சலாக இருந்தது. இவனைப் போன்ற கம்பீரம் தனக்கு இல்லையே என்ற பொறாமை அவனுக்குள் ஓடியது.
ராவணன் மெதுவாக எம்பி முன்பாக வந்து நின்றான். தாமதத்திற்கு மன்னிப்போ அல்லது காரணமோ எதுவும் சொல்லவில்லை. வாட்டசாட்டமாக எதிரில் இருந்த சோபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்தான். அவன் சொடுக்கு போட்ட அடுத்த நொடி, அவனுக்குப் பிடித்த ஆரஞ்சு ஜூஸ் அவன் கையில் இருந்தது.
“நான் ஆர்டர் பண்ணினால் பத்து நிமிடம் கழித்துக் கொடுக்கிறான், இவன் சொடுக்கு போட்டதும் ஓடி வருகிறானே! எல்லாமே இவன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது போல!” என்று எம்பி முணுமுணுத்தான்.
“என்ன எம்பி சார், இந்தப் பக்கம் காற்று வீசுகிறது? நீங்கள் நேர்மைக்குத் துணை போகிறவர் ஆயிற்றே, என்ன இந்த ராவணன் பக்கம்?” — ஒரு மிடறு ஜூஸ் குடித்துக்கொண்டே ராவணன் கேட்டான்.
“அது… நம் தமிழ்நாட்டின் பாரம்பரியமான ஒரு சிலை. உண்மையில் அது அரசாங்கக் கோவிலுக்குச் சொந்தமானது. அதில் இருக்கும் ஹயக்ரீவர் ஐம்பொன் சிலை கிட்டத்தட்ட 30 டன் எடை கொண்டது. நாற்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு அரசியல்வாதி அதைத் திட்டம் போட்டுக் கடத்தி ஆஸ்திரேலியாவிற்கு விற்றுவிட்டார். இப்போது அந்தச் சிலை ஏலத்திற்கு வருகிறது. மறுபடியும் நம் நாட்டுக்கே திரும்ப வரப்போகிறது. ஆனால் முதலமைச்சர் இதற்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்று பலத்த பாதுகாப்பை ஏற்பாடு செய்திருக்கிறார். அந்தச் சிலை பல லட்சம் கோடி மதிப்புடையது. அதை எப்படியாவது நீங்கள் கடத்தித் தர வேண்டும். நீங்கள் கேட்கும் தொகை உங்களுக்கு வந்து சேரும்” என்று எம்பி விபரத்தைச் சொன்னான்.
அவன் சொல்லி முடிக்கும் வரை எந்தப் பதிலும் சொல்லாமல், தன் ஜூஸை முழுவதுமாகக் குடித்து முடித்தான் ராவணன். பின் எழுந்து நின்று, “ஓகே ரோகித், 100 சி (100 Crores) ரெடி பண்ணச் சொல்லு” என்று சொல்லிவிட்டுத் தன் பாட்டிற்குச் சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் ரோகித் எம்பி முன்பாக வந்து நின்று, “சார், இன்னும் ஒரு வாரத்தில் நீங்கள் கேட்டது உங்கள் கையில் இருக்கும். ஆனால் 100 கோடிக்குச் சம்மதம் என்றால் மட்டும் டீலிங் பேசலாம்” என்றான்.
இவ்வளவு நேரம் பொறுமையாக இருந்த எம்பி இப்போது பொங்கிவிட்டான். “டேய், என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவன் என்ன அவ்வளவு பெரிய ஆளா? ஒரு ஜூஸைக் குடித்துவிட்டு என்னிடம் பேசாமல் போகிறான்! லேட்டாக வந்ததற்கு மன்னிப்பும் கேட்கவில்லை. நான் இந்த ஸ்டேட் எம்பி, என்னிடமே இந்த விளையாட்டா? உங்களுக்கு நூறு கோடி கொடுக்க வேண்டுமா? எங்களுக்கு வேறு ஆள் இல்லையா என்று பாருங்கள். உங்களுக்கு முன்னால் ஒரு சூப்பர் டீமை வைத்து இந்த வேலையை நான் முடிக்கிறேன்” என்று கத்தினான்.
தன் ஆட்களைக் கூப்பிட்டுச் சில மாஃபியா தலைவர்களின் எண்களை வாங்கி அழைத்தான். ஆனால் யாருமே போனை எடுக்கவில்லை. அது எப்படிச் சாத்தியம் என்று அவன் குழம்பிக் கொண்டிருந்தபோது, ரோகித் அவன் அருகே வந்தான்.
“சார், ராவணன் ஒரு டீலிங் பேச வந்தால், அந்தப் பக்கம் வேறு எந்த மாஃபியா கும்பலும் வரமாட்டார்கள். அதனால் நீங்கள் இந்த வேலையை எங்களிடம்தான் கொடுத்தாக வேண்டும். நீங்கள் நினைத்தது போல் சிலை உங்களுக்குக் கிடைக்கும், ஆனால் நாங்கள் கேட்ட 100 கோடி எங்களுக்கு வந்து சேர வேண்டும்” என்று சொல்லிவிட்டு ரோகித் சென்றான்.
வேறு வழி இல்லாமல் எம்பி முன்பணமாக 50 கோடியை அனுப்பி வைத்தான். ராவணனின் ஆட்கள் திட்டத்தைத் தொடங்கினர்.
சொன்னபடியே ஒரு வாரத்திற்குள் அந்த ஐம்பொன் சிலை எம்பி கையில் ஒப்படைக்கப்பட்டது. முதலமைச்சர் ஆத்திரமடைந்தார். தன் கௌரவமான அந்தச் சிலையைப் பயன்படுத்தி அடுத்த தேர்தலைச் சந்திக்கலாம் என்று நினைத்திருந்த அவருக்கு, சிலை கடத்தப்பட்டது பெரும் அவமானமாகப் போனது.
தன் கையில் இருந்த அசலான சிலையை ஒரு வெளிநாட்டு நபருக்குப் பல கோடிகளுக்கு விற்றுவிட்ட எம்பி, எதுவுமே தெரியாதது போல முதலமைச்சரிடம் சென்று ஆறுதல் கூறினான். “நாம் ஏன் இதேபோல் ஒரு சிலையைச் செய்யக்கூடாது? என்னிடம் அதற்கான ஆட்கள் இருக்கிறார்கள், கொஞ்சம் பணம் செலவாகும்” என்று அவன் ஐடியா கொடுக்க, தன் மானத்தைக் காப்பாற்ற முதலமைச்சர் 20 கோடியைத் தூக்கிக் கொடுத்தார்.
அதில் 5 கோடியைத் தன் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு, மீதி 15 கோடியைச் சிலை செய்யும் சிற்பிகளிடம் கொடுத்தான் எம்பி. அவர்கள் செய்த போலியான சிலை ஒரு வழியாகக் கோவிலைச் சென்றடைந்தது. பல வருடங்களுக்குப் பிறகு ஹயக்ரீவர் சிலை கிடைத்த மகிழ்ச்சியில் ஊர் மக்கள் கும்பாபிஷேகம் நடத்திக் கோலாகலமாகக் கொண்டாடினர். அப்போது மழை கொட்டித் தீர்த்தது. அனைவரும் அதைத் தெய்வத்தின் அருள் என்றனர். எம்பி தன் சாமர்த்தியத்தை நினைத்துச் சிரித்துக் கொண்டான். முதலமைச்சர் தன் கௌரவம் காப்பாற்றப்பட்டதாக நிம்மதி அடைந்தார்.
இந்தச் செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்த ராவணனுக்குச் சிரிப்புதான் வந்தது. காரணம், இப்போது கோவிலில் இருப்பதுதான் உண்மையான சிலை! பேராசைப்பட்ட எம்பியிடம் ராவணன் கொடுத்தது போலியான சிலையை. இது எதுவுமே தெரியாமல் எம்பி ஏமாந்து போனான். இவையனைத்தும் ராவணனின் சதுரங்க ஆட்டம் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.
என்னதான் ஆணவம் பிடித்தவனாக இருந்தாலும் ராவணன் சரியான ஆள்தான் என்று எம்பி தன் மனைவி மற்றும் மகளிடம் கூறினான். அவனது மகள் லாவண்யா, ராவணனை ஏற்கனவே ஒரு விழாவில் பார்த்த நினைவில் இருந்தாள். அவன் இப்போது தங்கள் குடும்பத்திற்கு நெருக்கமாகி இருப்பதால், அவனையே திருமணம் செய்து கொண்டால் தன் தந்தையின் அரசியல் வாழ்க்கைக்குப் பலமாக இருக்கும் என்று அவள் ஒரு கணக்குப் போட்டாள். தன் மகளின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட எம்பியும், ராவணனைத் தன் மகள் மூலம் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் திட்டம் தீட்டினான்.
ஆனால் அவர்கள் திட்டங்களையெல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக, ஒரு சிறு பட்டாம்பூச்சி ராவணனின் மனதிற்குள் குடியேறிவிட்டது.
தன்னுடைய இருள் சூழ்ந்த அறையில், மேசையில் இருந்த ஒரு மேகசினின் அட்டைப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் ராவணன். அதில் ஒரு அழகான ரோஜா பூவின் புகைப்படம் இருந்தது. அந்தப் புகைப்படத்திற்கு கீழே “வளர்ந்து வரும் ஓவியர்: அமிர்தா சேஷாத்திரி” என்று அச்சிடப்பட்டிருந்தது.
