மூன்று நாட்கள் கடந்து சென்றது. தென்னரசு தனது புது ஃபேக்டரி வேலையால் பிஸியாக இருந்தான். ஆனால், அவ்வப்போது மீனாட்சி இருக்கும் ஹாஸ்டல் பக்கம் அவளைக் கண்காணிக்காமல் விடமாட்டான். அவள் எத்தனை மணிக்கு வருகிறாள், எப்போது செல்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆக மொத்தம், அவள் வாரத்தில் ஏழு நாட்களும் பிஸியாக இருக்கிறாள்.ஆறு நாட்கள் வேலைக்குச் சென்று வருகிறாள். ஒருநாள் மட்டும் கல்லூரிப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போகிறாள். ஆனால், ஊரைப் பொறுத்தவரைக்கும் மீனாட்சி ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். ஞாயிற்றுக்கிழமை கூட கல்லூரிக்குச் சென்று படிக்கலாம் என்று சொன்னதால், அந்த நாள் கூட வீணாக்காமல் மீனாட்சி சென்று வருகிறாள் என்று அவளின் அம்மா தன்னுடைய அம்மாவிடம் பேசியதை தன் அம்மா மூலம் தெரிந்து கொண்ட தென்னரசு,
“இந்த பொண்ணு ரொம்ப அமைதி, சாதுன்னு நினைச்சேன். ஆனா ஏதோ இப்படி ஏமாத்திக்கிட்டு இருக்கு. இப்படி ஏமாத்தி வேலைக்குப் போயிட்டு, காலேஜுக்கும் போக இந்த பொண்ணுக்கு என்ன நிலைமை வேண்டி கிடக்கு? எல்லாம் வசதியும் இருக்கு. சரி, நமக்கு அந்தக் கழுதை எல்லாம் எதுக்கு? இந்தப் பிள்ளைகிட்ட எப்படியாவது நம்மளை அறிமுகப்படுத்தி, இந்தப் பிள்ளையோட நெருக்கமாகணும். அதுதான் நம்ம வேலை. மூணு நாள் ஒரே பிஸியா இருந்துட்டோம்.
இன்னைக்கு நமக்கு லேட்டாதான் ஃபேக்டரிக்கு போக வேண்டிய வேலை இருக்கு. அதனால இன்னைக்கு பேச்சு கொடுக்கப் பார்க்கலாம்,” என்று வழக்கம்போல் தனது ஜீப்பை எடுத்து வருவதற்குள், மீனாட்சி எப்பவோ சென்றுவிட, சரியாக அவன் ஜீப்பை நிறுத்தும் பொழுது, மேலே மோதாமல் சரியாக அவனுக்கு எதிரே வந்து கைகட்டி நின்று கொண்டிருந்தாள் வைஷ்ணவி.
“அட, இந்த ராக்காயி எதுக்கு இங்க நிக்குது?” என்று புரியாமல் கண்களைச் சுருக்க,”என்னப்பா இடி மன்னர்? இன்னைக்கு என்ன இடிக்காமல் வண்டிக்கு பிரேக் போட்டு இருக்கீங்க போல?”
“ஏம்மா, என்ன நீ! உனக்கு என்ன வம்பா போச்சு? இப்ப எதுக்கு குறுக்கே நின்னுக்கிட்டு இருக்க? ஓரமா போ!” என்று தென்னரசு சிடுசிடுவென்று பேச,”அப்படியா? ஓரமா போகணுமா? நாங்க ஓரமாதான் போயிட்டு இருக்கோம். ஆனா, நீதான் சரியான வரும்போது இடிக்க வர மாதிரி நிக்கிற. அதுவும் இல்லாம, நீ எதுக்கு எங்க ஹாஸ்டல் பக்கமே பார்த்துகிட்டு இருக்க?”
என்று சரியாகக் கேட்டுவிட, தென்னரசுக்கு ஒரு நிமிடம் ‘பக்’ என்று வந்தாலும், அமைதியாக எதுவும் தெரியாதது போல்,”ஏம்மா, யார் நீ? நீயா வந்து என்னென்னமோ பேசிகிட்டு இருக்க. என்ன ஹாஸ்டல்? தேவையில்லாம ரொம்ப பண்ற. வழிவிடு,”
என்று சத்தம் போட,”யோவ், யோவ்! நடிக்காத! மூணு நாளைக்கு முன்னாடி, நீ இருக்கிற இடத்திலிருந்து எங்க ஹாஸ்டல் பக்கம் பார்த்துட்டு இருந்ததை நான் பார்த்துட்டேன். அது நீதான்னு நல்லாவே தெரியுது. உனக்கு என்ன வேணும்? எதுக்கு லேடீஸ் ஹாஸ்டல் பக்கம் உன்னோட பார்வை போகுது?” என்று குறுக்கு விசாரணை நடத்த,”அதுவா? எங்க அம்மாவுக்கு மருமகள் வேண்டுமாம். அதனால்தான் லேடீஸ் ஹாஸ்டல் பக்கம் வந்தேன்.
எவளாவது சிக்குனா கட்டிக்கிட்டுத் தூக்கிட்டுப் போகத்தான்! நீ வேற எதிர்க்க வந்துட்டே இருக்க. என்ன, தூக்கிட்டுப் போயிடவா?” என்று மீசையை முறுக்கிக் கொண்டு அவளிடம் மல்லுக்கு வர,இவ்வளவு நேரம் தைரியமாகப் பேசிக் கொண்டிருந்த வைஷ்ணவி, சாலையில் யாரும் இல்லை; நாம் வேறு குறுக்கே வண்டியை நிறுத்தி இவனைக் குறுக்கு விசாரணை செய்துவிட்டோம்; இவன் வம்புக்கு வருகிறான் என்ற பயத்தில்,
“ஆமா , இந்த மாதிரி பேச நாங்க பயந்துருவோம் பாரு! இனிமே எங்க ஹாஸ்டல் பக்கம் கண்ணு போச்சு, கண்ணை நோண்டி விட்டுடுவேன்! இவங்களுக்கு வேற வேலை இல்லை. கஷ்டப்பட்டுப் பொண்ணுங்க வேலைக்குப் போவதற்காகப் படிக்கறதுக்காக வீட்டை விட்டு தனியா ஹாஸ்டல் வந்து கஷ்டப்பட்டு இருக்காங்க. இவனுங்க பார்வையிலே மயக்கிக் கூட்டிட்டுப் போயிடுவாங்களாம்,”
என்று புலம்பிக் கொண்டே அங்கிருந்து மெயின் ரோட்டுக்கு வைஷ்ணவி சென்றுவிட,”இந்தப் பொண்ணோட வம்பா போச்சு! அன்னிக்கும் இப்படித்தான் பண்ணுச்சு. இன்னிக்கும் இப்படிதான் பண்ணுது. மீனாட்சியை எப்படியாவது பார்க்கலாம். இந்தப் பொண்ணு சும்மா சும்மா நம்ம வழிக்குக் குறுக்க வருது. ஒருநாள் கழுத்துல ஒரு அடி போட்டு அனுப்பணும்,”
என்று இன்றும் மீனாட்சியைத் தவறவிட்டுவிட்டோம் என்ற வேதனையிலும், எரிச்சலிலும் தென்னரசு தனது ஃபேக்டரிக்கு புறப்பட்டுச் சென்றான்.அங்கே ஃபேக்டரி ஆட்கள் மிகவும் பரபரப்பாக இருந்தார்கள்.”என்ன அறிவு? என்ன? ஃபேக்டரியில என்னென்னமோ லைன்ல போறதுக்காக அரேஞ்ச்மென்ட்ல பண்ணி வச்சிருக்காங்க. யாராவது சுத்திப் பார்க்க வரப் போறாங்களா?” என்று தென்னரசு அங்கு இருக்கும் அறிவழகனைப் பார்த்துக் கேட்க,”ஆமாம் தென்னரசு.
ஸ்கூல் பசங்க ஃபேக்டரியைச் சுத்திப் பார்க்கப் போறாங்களாம். அவங்க பாடத்துல பஞ்சு ஆலை இருக்குல்ல? அதைப் பற்றி விவரமா தெரிஞ்சுக்க பக்கத்துல இருக்குற ஸ்கூல் பசங்க இங்க விசிட் வரப் போறாங்க. நீ உன்னோட டிபார்ட்மென்டில் இரு. பசங்களுக்குப் புரியுற மாதிரி சின்னதா, இந்த மிஷினை எப்படி ஆப்பரேட் பண்றீங்க? இதனால் என்ன அவுட்புட் வரும்? அதைத் தெளிவா சொல்லணும். அவ்வளவுதான்.
என்னோட டிபார்ட்மென்ட்ல ஒன்னும் கிடையாது. வெறும் பஞ்சு துணியை எடுத்து காட்ட வேண்டியதுதான்,” என்று தலைக்கு வேலை இல்லாததை அறிவழகன் மிகவும் நிம்மதியாகச் சொல்லிக் கொண்டிருக்க, தென்னரசுதான் பாவம். ஏனென்றால், அவன்தான் முக்கியமான மெஷினில் கை வைத்துக் கொண்டிருப்பது. அதை பிள்ளைகளுக்குப் புரியும்படி சொல்ல வேண்டும்.
சரி, இதுபோல் இரண்டு முறை தான் வேலை செய்த பழைய கம்பெனியில் ஸ்கூல் பிள்ளைகள் வந்திருந்ததால், அவனுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ‘சரி’ என்பதுபோல் தயாராக இருந்தான். சரியாக 2 மணி நேரம் கழித்து மத்தியானம் அனைவரும் உணவு முடித்து தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஸ்கூல் பிள்ளைகள் வந்திருந்தார்கள்.
எல்லாரும் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு படிக்கும் பிள்ளைகள். கிட்டத்தட்ட முப்பது மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களைப் பாதுகாக்க நான்கு ஆசிரியர்களை அனுப்பி இருந்தார்கள்.”எல்.கே.ஜி பசங்களுக்குப் பாடம் எடுத்துட்டு நிம்மதியா பிரேக் டைம்ல தூங்கலாம்னு பார்த்தா, இப்படி ஃபேக்டரி விசிட். ‘நீங்க ஃப்ரீதானே?’ன்னு சொல்லிட்டு என்ன அனுப்பி வச்சிருக்காங்க,” என்று புலம்பிக் கொண்டே மாணவர்களின் கடைசி வரிசையில் ஒரு ஆசிரியருடன் வந்து கொண்டிருந்தாள் வைஷ்ணவி.
பிள்ளைகள் எல்லாரும் கையில் நோட்டுப் புத்தகத்தோடு இருந்தார்கள். அவர்கள் சொல்வதைக் குறித்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் புரிந்து கொண்டதை நாளை பள்ளியில் விவாதிக்க வேண்டும் என்பதால், அனைவரும் மும்முரமாக நோட்ஸ் எடுத்துக் கொண்டிருக்க, ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாதுகாப்பாக அங்கும் இங்கும் சுற்றி அரணாக இருந்தார்கள்.
பஞ்சு ஆலைக்குள் நுழைந்தவுடன், ஒவ்வொரு டிபார்ட்மென்டாக மாணவர்களுக்குச் சுட்டிக்காட்ட, ஆசிரியர்களும் ஆர்வமாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கும் பொழுது, சரியாக மிஷின் அதாவது பஞ்சு உள்ளே சென்று அதன் வெளிப்பொருள் என்னவாக வரும் என்பதை விவரிக்கும் மிஷின் இடம் மாணவர்கள் வர, அங்கே தனது ஆபீஸ் யூனிஃபார்மில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் தென்னரசு.
வரிசையில் கடைசியாக நின்று கொண்டிருந்த வைஷ்ணவி அவனைக் கண்டதும்,”அட, இது நம்ம இடி மன்னராச்சே! எங்கதான் வேலை பார்க்கிறாரா? நல்ல கம்பெனில வேலை பார்க்குறான். ஆனா, பொண்ணுங்க ஹாஸ்டலை எட்டிப் பார்க்கிறன்னு கேட்டா, ‘அம்மாவுக்கு மருமகள் வேண்டும்’னு திமிரா பதில் சொல்றான். நல்ல வேலையில இருக்குற திமிரு,”
என்று அவனைத் திட்டிக் கொண்டே இருக்க, தென்னரசு மிகவும் சிரத்தையாக மாணவர்களுக்குப் புரியும் விதமாக அழகாக மிஷின் ஆப்பரேட்டிங் பற்றி சொல்லி, பஞ்சு மூலம் கிடைக்கும் பொருட்கள் பற்றியும் விவரிக்க,அனைத்து மாணவர்களும் புரிந்துகொண்டு நோட்ஸ் எடுத்துக் கொண்டார்கள்.”பரவாயில்லை, இடி மன்னர் நல்லாதான் பாடம் எடுக்கிறான்,” என்று அவனை வைஷ்ணவி மெச்சிக்கொள்ளாமல் இல்லை. தன்னுடைய டிபார்ட்மென்டின் விளக்க உரை முடிந்தவுடன் தென்னரசு நன்றி சொல்ல, அனைத்து மாணவர்களும் அவனுக்கும் நன்றி சொல்லி அங்கிருந்து வரிசையாகச் செல்லும் பொழுது, கடைசி வரிசையில் வந்து கொண்டிருந்த வைஷ்ணவியைப் பார்த்தான்.
“அட, இந்த மகமாயி ஸ்கூல் டீச்சரா?” என்று அப்படியே சத்தமாகவே வாய்தவறி சொல்லிவிட,யாருக்குக் கேட்டதோ இல்லையோ, அவன் சொன்ன ‘மகமாயிக்கு’க் கேட்டுவிட்டது. எல்லோரும் சென்று விட்டார்கள். உடனிருந்த ஆசிரியரும் மாணவர்களுக்குப் பின்னாலே சென்று விட்டார். தன்னை மகமாயி என்று சொன்ன தென்னரசுவைப் பார்த்து,”ஹலோ இடி மன்னர், யாரைப் பார்த்து மகமாயி சொல்றீங்க?”
“இல்ல, நீ கேள்வி மேல கேள்வி கேட்கிறதைப் பார்த்து வக்கீல் அப்படின்னு நினைச்சேன். நீ டீச்சர் என்று இப்பதான் பார்க்கிறேன். உன்கிட்ட பாடம் படிக்கிற பிள்ளைகளின் நிலைமையை நினைச்சா பாவமா இருக்கு,” என்று கிண்டல் அடித்து, தன்னுடைய மிஷின் ஆப்பரேட்டிங் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட,”இடி மன்னருக்குக் கொழுப்பு கூடிப்போச்சு. மறுபடியும் நம்மகிட்ட ஏதாவது ஆட்டம் காட்டட்டும், தோலை உரித்துக் கொடுத்துவிடலாம்,” என்று அவனைத் திட்டிக் கொண்டே சென்று விட்டாள்.
__________________________________________
இங்கு ரெஸ்டாரன்டில் பாரம்பரிய விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. இது தமிழ்நாடு என்பதால், அனைவரும் தமிழ் கலாச்சாரத்தின்படி உடைகளை அணிந்து கொண்டு அங்கு வேலை செய்பவர்கள் இருந்தார்கள். மீனாட்சி காலையிலேயே புடவை கட்டிக்கொண்டு அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்தாள்.
பாரம்பரிய உணவுகள் செய்வதால், தன்மலை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முயல் கறி, சோளத்தில் செய்யப்படும் சாதம் போன்றவற்றைத் தயாரித்து வைத்திருந்தால். மேலும், அது ஆர்டருக்கு வந்திருந்ததால் செய்யப்பட்டிருந்தது. ‘நாமாக ஒரு உணவு செய்து பிரச்சினையில் ஈடுபடக்கூடாது’ என்று மிகவும் கவனமாக இருந்தார்கள் சமையல் டிபார்ட்மென்டைச் சேர்ந்தவர்கள்.”ஓய் பியூட்டி! மலை கிராமத்து பொண்ணுங்க இந்த மாதிரி நார்மல் புடவை கூட கட்டுவீங்களா?” என்று அங்கே வேலை பார்க்கும் இன்னொரு அசிஸ்டன்ட் செஃப் ஸ்ருதி மீனாட்சியைப் பார்த்துக் நக்கலாகக் கூற,
“நாங்க போட்டிருக்க உள்ளாடையை வெளியே தெரிஞ்சு எல்லாரும் பாக்குற மாதிரி டிரஸ் போட மாட்டோம்.மத்தபடி நாங்களும் நவநாகரிக உலகத்திற்கு ஏற்ற மாதிரிதான் எங்களை மாற்றிக்கொண்டு இருக்கோம்,” என்று அந்த அசிஸ்டன்ட் செஃப் அணிந்திருக்கும் டிரான்ஸ்பரன்ட் புடவையைச் சுட்டிக்காட்டி, மீனாட்சி முகத்தில் அடித்தது போல் சொல்லிச் சென்று விட,
அந்தப் பெண் மிகவும் கோபமாக, “மலையூர்க் காட்டுவாசிக்குக் கொழுப்பு பாத்தியா! இவளெல்லாம் நமக்கு ஈக்குவலா இங்க வேலைக்கு வந்து இருக்கா. அதுவும், இதுவரைக்கும் அதிரவன் சார் ரூமுக்கு யாரும் போனது கிடையாது. இப்ப வந்த இவ, ரூமுக்கு காபி கொடுத்துட்டு வர்ற அளவுக்குப் போயிட்டா. இவளை வளரவே விடக்கூடாது. இந்த ஒரு வாரம் டைம் முடியறதுக்குள்ள, இவளுக்கு மொத்தமா வேலைக்குச் சமாதி கட்டணும்.
முதல்ல இவ பேர் கெடுக்கிற மாதிரி இங்க ஒரு வேலை நடக்கணுமே,” என்று யோசித்த அந்த மற்றொரு அசிஸ்டன்ட் செஃப் ஸ்ருதி, அந்த ரெஸ்டாரன்டுக்கு வழக்கமாக ஏதாவது ஒரு பெண்ணோடு உல்லாசமாக இருக்கும் ஒரு பிரபல பணக்காரரை வைத்து மீனாட்சி ஒரு ‘வேசி’ என்று அசிங்கப்படுத்தக் கூடாது என்று திட்டமிட்டு அதற்கான செயலைச் செய்யத் தொடங்கினாள்.—