அத்தியாயம் 7
“உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா? நீ சொடக்கு போட்டால் உனக்கு வேலை செய்ய வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். உன்னோட பேங்க் அக்கவுண்ட்டில் உங்க அப்பா எக்கச்சக்க லட்சங்கள் போட்டு வைத்திருக்கிறார். ஃபிரண்ட்ஸ் கூட பார்ட்டி, பப், ஷாப்பிங், சினிமா, டேட்டிங் அப்படின்னு போகாமல், இது என்னடி உனக்கு டீச்சர் வேலை? அதுவும் சின்னப் பசங்களுக்கு ஆயா வேலை பார்க்கவா உன்னை பெத்து வச்சிருக்கேன்? இங்க பாரு, நாம் இருப்பது வேணா உங்க மாமாவின் வீடா இருக்கலாம். ஆனா உங்க அப்பாவும் தனியாக பிரபலமான தொழிலதிபர் தான். அவருக்கு ஒரு கௌரவம் இருக்கு. அவர் பெயரைக் கெடுக்கிற மாதிரி இப்படி இன்னொருத்தன் கிட்ட கை ஏந்தி சம்பளத்துக்கு வேலை பார்க்கப் போறியா?
அதுவும், உன்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன என்னோட அண்ணன் பையன் கிட்டயா? உனக்கு என்ன தலைவிதியா யோகி?”
என்று பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்த யோகிதாவை கௌதமி அர்ச்சித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தன் பாட்டி தனக்காகத் தொடுத்த பூவை எடுத்துத் தலையில் வைத்து, நெற்றியில் சிறிய பொட்டுடன் காட்டன் புடவையில் அட்டகாசமாகத் தயாராகி, தன் தாயைப் பார்த்து முறைத்தவாறு,
“சொத்து, பணம், கௌரவம் இருக்குன்னு இஷ்டத்துக்கு என்னால் ஆட முடியாது. நான் உன்னை மாதிரி இல்லை. என்னோட பாட்டியோட வளர்ப்பு. எங்க அத்தை மாதிரி நான் இப்படித்தான் இருப்பேன். சம்பாதிக்கிற காசின் அருமை சம்பாதிப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். உன்னைப் போல் அப்பா காசு, அண்ணன் காசு, புருஷன் காசில் சொகுசாக வாழும் பெண்களுக்கு என்ன தெரியப் போகிறது? ஒரு நாள் கஷ்டப்பட்டு வேலை செஞ்சு பாரு. அந்தக் காசின் அருமை உனக்குத் தெரியும். சும்மா தொணதொணன்னு பேசிக்கிட்டு இருக்காதே. நான் கிளம்புறேன். பை!”
என்று அறையிலிருந்து வெளிவர, மொத்தக் குடும்பத்தாரும் டைனிங் டேபிளில்தான் காத்துக் கொண்டிருந்தனர். அவள் பேசுவது இங்கு வரைக்கும் கேட்டது. மனதிற்குள் அனைவரும் சபாஷ் போட்டுக் கொண்டனர்.
‘நல்ல வேலை கடவுளே! என்னோட பேத்தி, என்னோட ரத்தமா இருக்கிறதால, அவ அம்மா புத்தி அவளுக்கு இல்லாமல் நல்ல பொண்ணாக இருக்கா. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையணும்,’ என்று சிவகாமி மனதார இறைவனை வேண்டிக்கொண்டார். அவளும் டைனிங் டேபிள் வந்துவிட, தென்றல் அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தார்.
“யோகிமா, இப்ப நீ வெளி உலகத்தைச் சந்திக்கப் போற நேரம். விதவிதமான மனிதர்கள், பழக்கவழக்கங்கள் எல்லாமே மாறுபட்டு இருக்கும். நீ அவங்களோடு ஒத்துப் போவதும், தனித்திருப்பதுவும் உன்னோட தனிப்பட்ட விருப்பம். இருந்தாலும், எல்லா வீடுகளிலும் சொல்வது போலத்தான், ஜாக்கிரதையாக இரு.”
என்று தென்றல் மருமகளுக்கு அறிவுரை கூற, அவளும் சரி என்று தலையாட்டி, அனைவரிடமும் வாழ்த்து பெற்று இனியன் உடன் பள்ளிக்குச் செல்லத் தயாராக இருந்தாள்.
மதன் வழக்கம் போல் தன் மாமியாருடன் உரையாடிக் கொண்டிருக்க, தென்றல் மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றார். கௌதமி எதுவும் கண்டு கொள்ளாமல் தன் பையை மாட்டிக் கொண்டு வெளியே சென்றுவிட்டார். இங்கே செழியன் உண்டு முடித்து, ஒருத்தியை ஒரு வழி செய்ய வேண்டும் என்ற முடிவோடு அலுவலகத்திற்குப் புறப்பட்டார். இரண்டு நாட்கள் அவனுக்கு நரக வேதனையாக இருந்தது.
இன்று வார இறுதி விடுமுறை முடித்துவிட்டு, திங்கட்கிழமையைச் சோகமாக அவரவர் இடத்திற்குப் புறப்படத் தயாராக இருந்தனர்.
“ரெண்டு நாள் எப்படி போச்சுன்னே தெரியல. இந்த மாதிரி அப்பப்ப வந்தா நல்லா இருக்கும். நாங்க ரெண்டு பேரும் மட்டும் இருப்பது எவ்வளவு போர் தெரியுமா?”
என்று விமல் பரிதாபமாகச் சொல்ல,
“நடிக்காதே! சித்தி எல்லாமே சொல்லிட்டாங்க. நீ வீட்டிலேயே இருக்கிறது இல்லையா? அடிக்கடி ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்திக்கிட்டு இருக்க. இப்போ சென்டிமென்ட் டிராமா பண்ணிக்கிட்டு இருக்கியா?”
என்று அம்பை அவனை வாரிவிட, வாயை மூடிக் கொண்டான்.
விமல் கல்லூரிக்கும், இசை பள்ளிக்கும், அம்பை அலுவலகத்திற்கும் புறப்பட்டு வெளியே வந்தனர். பெரியவர்கள் இங்கே இருப்பதாகச் சொல்லிவிட, சிறியவர்கள் மட்டும் அவரவர் வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர்.
அம்பை அரக்கப் பறக்க அலுவலகத்திற்குள் நுழைந்து, தன் இருக்கையில் அமர்ந்து வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் செழியன் வந்துவிட, எப்பொழுதும் தன்னை அழைத்து ஏதாவது பேசுவான், காதல் சில்மிஷம் செய்வான் என்று காத்துக் கொண்டிருந்த அம்பைக்குப் பெருத்த ஏமாற்றம். மதிய இடைவெளி வரை அவன் அவளை அழைக்கவில்லை.
“என்ன இவர்? எப்பவுமே நான் நினைக்குறதுக்கு முன்னாடியே உள்ளே கூப்பிடுவார். இன்னிக்கு எதுவும் கண்டுக்கல. ஒருவேளை முக்கியமான வேலை இருக்குமோ? சரி, நம்ம போய்ப் பார்க்கலாம்.”
என்று சில கோப்புகளை எடுத்துக்கொண்டு திருத்தத்திற்காக (Correction) அவரிடம் வந்து நிற்க, அவன் அதைப் பார்த்து ஏற்கனவே இருக்கும் உச்சபட்ச கோபத்தில், அதைத் தூக்கி விசிறி அடித்தான். அதே சமயம்,
அவனைப் பார்க்க அனுமதி கேட்க, ஒரு பெண் ஊழியர் காத்துக் கொண்டிருக்க, இவன் செய்த செயலைப் பார்த்து ஸ்தம்பித்து, கதவோரம் நின்று ஓரமாக எட்டிப் பார்த்தாள் — என்ன நடக்கிறது என்று.
“இதுதான் நீங்க மேனேஜ் பண்ற அக்கவுன்ட்ஸ் நிலவரமா? நீங்க ஒரு அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்ட்டிங்க்குத் தகுதியாக இருப்பீங்கன்னு தான் இவ்வளவு சீக்கிரம் உங்களை இந்த போஸ்ட்டிங்ல போட்டது. ஆனால் நீங்கள் ஏதோ ஒரு உலகில் இருக்கிறீர்கள்! கொஞ்சமாவது நம்ம வேலை செய்றோம், கொடுக்குற சம்பளத்துக்கு நல்லா இருக்கணும்னு யோசிங்க. முக்கியமான விஷயத்தைத் தவிர உங்களுக்கு மத்த வேலை மாதிரி தான் கண்ணா இருக்கும். இதுவே உங்களுக்கு லாஸ்ட் வார்னிங்!”
என்று கண்டபடி பேசிவிட, அம்பை கண்ணில் கண்ணீர் துளிர்க்கக் காத்துக் கொண்டிருந்தது.
கதவோரம் எட்டிப் பார்த்த காயத்ரிக்குக் கொள்ளை மகிழ்ச்சி. அம்பை என்றால் அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்காது. இன்று அவள் எம்.டி.யிடம் திட்டு வாங்குவதைப் பார்த்துத் துள்ளலோடு தன் தோழிகளுக்கு ட்ரீட் வைக்கலாம் என்று திட்டமிட்டாள்.
அதனால், தான் வந்த இடம் தெரியாமல் அமைதியாக அங்கிருந்து சென்றுவிட, இங்கே அம்பை பரிதாபமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இந்த மாதிரி கம்பெனிக்கு வேலைக்கு வந்தா திட்டறது எல்லாத்தையும் கேட்டு தான் ஆகணும். சும்மா கண்ணீர் விட்டு டிராமா பண்ணக் கூடாது. போய் மத்த வேலையைப் பாருங்க.”
என்று சொல்லி, தன் வேலையில் கவனத்தைச் செலுத்த, கீழே சிதறிக் கிடந்த கோப்பைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு, அமைதியாக வெளியே சென்றாள். காயத்ரியும் அவரது ஆதரவாளர்களும் அம்பையை நக்கலாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அடிக்கடி எம்.டி கூப்பிடுறார்னு ரொம்ப சீன் போட்டுப் போவா. இப்பதான் தெரியுது, உள்ளே திட்டு வாங்கிட்டு வெளிய ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறா அப்படின்னு. நல்ல வேளை, எங்க இவ எம்.டி.யை கைக்குள்ள போட்டுக்கிட்டான்னு பயந்து போயிட்டேன்.”
என்று தங்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டனர். அம்பை கண்ணீரை நன்றாக உள் இழுத்துக் கொண்டு, வேலைகளைத் தீவிரமாகக் கவனிக்க ஆரம்பித்தாள். மதிய வேலை ஆரம்பிக்க, கேன்டீன் சென்று உணவருந்தி மீண்டும் வேலையில் கவனம் செலுத்த, இன்னும் உணவு இடைவேளை முடியாததால் அங்கே யாரும் இல்லை. அப்பொழுது அவளுக்கு அழைப்பு வர, எடுத்து காதில் வைத்தவள்,
“அம்பை, இதுவரைக்கும் திருத்தம் செய்த ஃபைல்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு என்னோட கேபின் வாங்க.”
என்று கரகரக் குரலில் கட்டளையிட, நன்றாக மூச்சை இழுத்துக் கொண்டு, இருக்கும் கோப்பைகளைக் கையில் எடுத்துக்கொண்டு அவன் அறை நோக்கி அனுமதி கேட்டு உள்ளே நுழைய,
“இப்ப வரைக்கும் திருத்தம் பண்ண ஃபைல்ஸ் மட்டும் இப்ப என்கிட்ட கொடுங்க.”
என்று கேட்டவுடன், மரியாதை நிமித்தமாகத் தலையசைத்து அவரிடம் காட்ட, பொறுமையாக அனைத்தையும் சரி பார்த்து, மீண்டும் அவளிடம் கொடுத்து,
“இதை ஒழுங்கா ஸ்டார்ட்டிங்ல பண்ணி இருந்தா என்கிட்ட திட்டு வாங்க வேண்டிய அவசியம் தேவையில்லை. ஆனா எங்க கேக்குறீங்க? வந்த இடத்துல வேலை செய்யணும். அதை விட்டு மத்ததெல்லாம் பண்றீங்க. முக்கியமான விஷயத்தை விட்டுட்டு, தேவையில்லாத விஷயத்தில இன்வால்வ்மெண்ட் ஜாஸ்தியா இருக்கு. ஒண்ணும் சொல்லி பிரயோஜனமில்லை.”
என்று அவன் வெறுப்புடன் பேச, ஏதோ மூன்றாம் நபரிடம் பேசுவது போல் அவர் பேச்சுக்கள் அம்பையின் மனதை அறுக்கச் செய்தது.
தயங்கித் தயங்கிக் காதலை வெளிப்படுத்தியவள், இப்பொழுது அவனே இவ்வாறு பேசும்பொழுது, சுயமரியாதை கொண்ட பெண் உள்ளம் குதித்து எழுந்து விட, நிதானமாக அவனிடம் அழுத்தமாக,
“நீங்க சொல்வது நூறு சதவீதம் சரிதான் சார். வந்த இடத்துல எங்களை வேலை செய்ய விட்டாதானே? சில பேர் ஏதேதோ பேசுறாங்க. என்னென்னமோ பண்றாங்க. கடைசில அவங்களே நிக்க வச்சு அவமானப்படுத்துறாங்க. முக்கியமா இந்த ஆம்பளைங்க இருக்காங்களே… எப்பதான் ஒரு பொண்ணை அவமானப்படுத்தலாம்னு வரிசை கட்டி வராங்க. என்ன பண்றது? ஓகே சார், இன்னும் பேலன்ஸ் ஃபைல்ஸ் எல்லாத்தையும் உங்ககிட்ட ஈவினிங் கொடுத்து விடுகிறேன். தேங்க்யூ.”
என்று அழுத்தி கூறி அங்கிருந்து விடை பெற்றுச் சென்றுவிட, செழியனுக்குப் பெருத்த ஏமாற்றம்.
அவள் தன்னிடம் கண்ணீரோடு கைகளைப் பிடித்துக் கெஞ்சுவாள், அழுவாள், ‘ஏன் இப்படிச் செய்கிறாய்?’ என்று சண்டையிடுவாள் என்று நினைத்துப் பார்த்தவனுக்கு, இவள் திடீரென்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவதைப் பார்க்கும்போது சுருக்கென்று ஆகிவிட்டது. இப்பொழுது அவள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது கூட அவனுக்குப் புரியவில்லை.
குழப்பத்துடனே வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்று அலுவல் வேலைகள் அழுத்தம் என்பதால், வேறு வழி இல்லாமல் வேலையைப் பார்க்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு.
இங்கே இனியன் பக்காவாக பிளான் செய்து, இசையை எப்படியாவது தன் வளைவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தான். அடிக்கடி பெண் பின்னால் சுற்றி, டாக்ஸிக் (Toxic) முறையில் காதலை வெளிப்படுத்த அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் பொறுமையாக அவளிடம் நன்றாகப் பழகி, பிறகு மனதில் இருப்பதை எதார்த்த முறையில் வெளிப்படுத்தினால் அவளும் புரிந்து கொள்வாள் என்று அமைதியாகக் காத்துக் கொண்டிருந்தான். ஆனால் அவளைக் கண்காணிப்பதை விடவில்லை.
இசைக்கு ஏற்கனவே இனியன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதற்காகவே, அவன் எதிர்பாராத விதமாக அடிக்கடி அவன் இருக்கும் பக்கம் எல்லாம் நடந்து கொண்டிருந்தாள். ஒரு முறையாவது அவனைப் பார்த்து விட வேண்டும் என்பதற்காக. அது ஏன் என்று அவளுக்கே புரியவில்லை. அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது அவளுக்கு.
‘நான் எதுக்கு இவ்வளவு சில்லியாக (Silly) பிஹேவ் பண்ணிட்டு இருக்க? அவர் இந்த ஸ்கூல் பிரின்சிபல். அது மட்டும் இல்லாம இந்த ஸ்கூல் அவருடையது. நான் எதுக்கு இப்படி ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டேன்? இவர்கிட்ட அப்படி என்ன இருக்கு? ஆனா தினமும் இவரைப் பார்க்கணும் போல தோணுது. அதுவும் இன்னிக்கு கிட்டத்தட்ட 20 முறையாவது அடிக்கடி வந்து பார்த்துட்டுப் போயிருப்பேன். காதல் என் வாழ்க்கையில் வரக்கூடாதுன்னு சபதம் எல்லாம் எடுத்தேன். அதை எப்படியாவது காப்பாத்திடு கடவுளே!’
என்று கடவுளிடம் பல கோரிக்கைகள் விடுத்தாலும், அவனைப் பார்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை.
“இசை, நீ எதுக்காக பிரின்சிபல் இருக்கிற இடமா பார்த்து அடிக்கடி வலம் வந்துகிட்டு இருக்க?”
என்று சந்தியா சந்தேகமாகக் கேட்க,
“அதெல்லாம் அப்படித்தான். பார்க்க நல்லா இருக்காருல்ல? அதான் சும்மா ஒரு என்டர்டெயின்மென்ட். மத்தபடி உள்ளே அர்த்தம் எதுவும் இல்லை. நீ தப்பா எதுவும் நினைச்சுக்காத.”
என்று உள்ளதை உள்ளபடி கூறிச் சென்றுவிட, சந்தியா ஒரு குரூரப் புன்னகையோடு,
‘அதான் எனக்கு வேணும்! என்ன வச்சு அந்த இனியனை அசிங்கப்படுத்தனும்னு பிளான் பண்ணிதான் வந்தேன். ஆனா வாண்டடா நீயே வந்து மாட்டிக்கிட்டியே! என்னோட பேர் அடிபடுவதற்குப் பதிலா, மெயின் டார்கெட் அந்த இனியன், ஒரு பொண்ணு விஷயத்துல அசிங்கப்படணும். அதானே மோடி! பேசாம உன்னை அவனோட கோர்த்து விட்டு வதந்தியைப் பரப்பினால் கொஞ்சம் நல்லா இருக்கும். அப்புறம் ஏதாவது ஒரு நாள் வசமாக மாட்டும் போது, மொத்தமா உங்க ரெண்டு பேரையும் நிக்க வச்சு அவமானப்படுத்தினால் இன்னும் சூப்பரா இருக்கும்!
அதுக்காகத் தானே பத்து லட்ச ரூபாய் பணம் வாங்கிட்டு இங்க வந்திருக்கேன்.’
என்று மனதிற்குள் ஒரு திட்டத்தைப் போட்டு, எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்று நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் சந்தியா. சீனிவாசன் அனுப்பிய பெண் இவள் தான். இனியனை அவமானப்படுத்த வேண்டும் என்று ஆசிரியர் பணியில் சேர இங்கு வந்திருக்கிறாள்.
இன்று முதல் நாள் என்பதால் யோகிதாவுக்கு மிகவும் பரபரப்பாகச் சென்றது. சிறு சிறு குழந்தைகளின் சேட்டைகள் ஆயிரம். ஆனால் சொல் பேச்சு கேட்கும் பிள்ளைகளாக இருக்கின்றனர் அனைவரும். அழகாக குழந்தைகளோடு குழந்தைகளாக ஐக்கியமாகி, அன்றைய நாளைச் சிறப்பாகக் கழிக்க முடிந்தது அவளால்.
“என்ன யோகிதா, பசங்க ரொம்ப வாட்டி வதைக்கிறாங்க போல?”
என்று மூத்த ஆசிரியர் ஒருவர் கனிவாகக் கேட்க,
“அதெல்லாம் இல்லை. சேட்டை பண்ணாதன்னு சொன்னா, அவங்க குழந்தைகள் எல்லாம் நல்ல பசங்க தான். சொல் பேச்சும் கேட்கிறாங்க. பாசம் தான் ஜாஸ்தி. மத்தபடி ஒண்ணும் இல்லை. நல்லா ஜாலியா தான் போகுது.”
என்று சொல்லித் தன் இருக்கையில் வந்து அமர,
“சரி யோகிதா, ரெண்டு பீரியட் உனக்குப் ஃப்ரீ. நீ இங்கே ரெஸ்ட் எடுக்கிறதா இருந்தாலும் எடுக்கலாம், ரவுண்ட்ஸ் போகிறதா இருந்தாலும் போகலாம். எனக்கு கிளாஸ் இருக்கு. நான் வரேன்.”
என்று அந்த ஆசிரியரும் சென்றுவிட, அவள் இருக்கும் இருப்பிடத்தில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை. அதனால் லேப்டாப்பில் குழந்தைகளுக்கான பாடல்கள், குழந்தைகளை எப்படி எல்லாம் கையாள்வது என்று சில நோட்ஸ் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதே சமயம், இன்றைய முதல் நாள் பள்ளிக்கு வந்த ராம், அன்றைய வகுப்புகளை முடித்துவிட்டு, கடைசி இரண்டு வகுப்புகள் ஃப்ரீ என்பதால் நிம்மதிப் பெருமூச்சு விட்டு, தனக்கென ஒதுக்கப்பட்ட இருப்பிடத்திற்கு உள்ளே நுழைந்தான். ஆசிரியர்கள் பேச்சு சத்தம் எதுவும் இல்லை. அமைதியாக இருந்தது அந்த இடம். அவனுடைய இருக்கை பக்கத்தில் யாருமில்லை. அமைதியாக அமர்ந்து, சட்டைப் பட்டன்களை இரண்டு மூன்று கழட்டி விட்டு, விசிறிக் காற்றில் நிம்மதியாகக் கை நீட்டி அமர்ந்து கொண்டிருக்க, அவனுக்கு இடப்புறம் ஓரமாக லேப்டாப் பார்த்துக் கொண்டிருந்த யோகிதா, ஏதோ அரவம் கேட்கிறது என்று நிமிர்ந்து பார்க்க,
‘அட யார் இது? டீச்சர்ஸ் இடத்துல இப்படி வந்து உட்கார்ந்துகிட்டு இருக்கான்!’
எழுந்து அவன் அருகில் சென்று,
“ஹலோ சார், யார் நீங்க? சட்டைப் பட்டன் எல்லாம் ரிமூவ் பண்ணிக்கிட்டு ஒரு மாதிரி உட்கார்ந்துகிட்டு இருக்கீங்க. கொஞ்சம் கூட ஒழுக்கம் இல்லையா? இது ஸ்கூல், பசங்க படிக்கிற இடம்!”
என்று கத்திக் கொண்டிருக்க, ‘யாருடா அது?’ என்பது போல் வெறுப்பாகக் கண்களைத் திறந்து பார்க்க, தேவி தரிசனம் போல் பிரகாசமாக, அவன் முன்னால் காளி அவதாரம் எடுத்தது போல் நின்றிருந்த யோகிதாவைப் பார்த்து,
“சும்மா சொல்லக் கூடாது, நீயும் செம பிகரு!“
என்று அவன் இதழ்கள் தானாக முணுமுணுக்க,இவ்வளவு பேசியதற்குப் பதில் அளிக்காமல், ஏதோ வாய்க்குள் முனகிக் கொண்டிருக்கும் அவன் வாய் மீது ஒரு அடி வைத்தாள் யோகிதா.