Home ANTIHEROஅத்தியாயம் 6

அத்தியாயம் 6

by sreejanovels
695 views

ஜீப் வெளியே காத்துக்கொண்டிருக்க, தென்னரசு தன்னைத் தயார்படுத்திக்கொண்டு தன் பெட்டி படுக்கைகளை எடுத்து வெளியே வந்து கொண்டிருந்தான்.

அதைப் பார்த்து அவன் தாய் ராக்காயி,”என் கண்ணு… நம்ம கிராமத்தை விட கீழே டவுன், அந்த டவுனை விட்டால் மேலே கிராமம். காலேஜ் படிப்பெல்லாம் படிச்சிருக்க, அதுவும் நம்ம டவுனுக்குள்ளயே முடிச்சுகிட்ட. இப்போ அம்மாவ விட்டுபுட்டு, நம்ம ஊரை விட்டுபுட்டு அந்த மெட்ராசுக்கு போகணுமா?”

என்று மகனை விட்டுப் பிரியும் ஏக்கத்தில் சொல்ல,”இங்க பாராத்தா… பல தலைமுறைக்கு முன்னாடி நம்ம தான் இந்த கிராமத்துக்குப் பெரிய தலைக்கட்டா இருந்தோம். இப்போ அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நம்மள பார்த்தா முன்னாள் தலைவர் குடும்பம்னு சொல்றாங்களே தவிர, நமக்கு வேற என்ன மரியாதை கிடைக்கும்? அதுவும் என் அப்பன்,

தாத்தா எல்லாம் சும்மா இல்லாம கிராமத்தோட அழிவுக்குத்தான் வழிவகுத்து இருக்காங்க. அப்படி இருக்கிறவங்களை யார் தலைவனா பார்க்கிறது? எனக்குப் போன மரியாதை திருப்பி வரணும். அதுக்காகத்தான் ஊர் தலைவரோட புள்ளை எங்க இருக்கோ, அந்தப் புள்ளைய எப்படியாவது பேசி என் பக்கம் கொண்டு வந்து, தென்னரசுவ தான் கட்டிக்குவேன் அப்படின்னு அந்தப் புள்ள சொல்லணும்.

அதுக்காக இந்தத் தென்னரசு என்ன வேணாலும் பண்ணுவான்.””அம்மா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத, அந்தப் புள்ள மேல நீ ஆசை வச்சிட்டியா? அதான் அந்தப் புள்ள போன உடனே நீ மெட்ராசுக்கு புறப்பட்டு போறியா ராசா?”

“அதெல்லாம் ஒரு கழுதையும் இல்லை. எனக்கு எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் எதுவும் தோணாது. இந்தப் பிள்ளையைப் பார்த்தா மட்டும் எனக்கு என்ன தோணும்? இந்தப் பிள்ளையைக் கட்டிக்கிட்டா எனக்கு வரப்போற தலைவர் பதவி தான் இப்ப என்னோட ஆசை. அதுதான் எனக்கு வேணும்.

அதை எப்படியாவது அடையனும். உன் மகன் போற காரியம் ஜெயிச்சுட்டு வரணும்னு வேண்டிக்க ஆத்தா.”என்று தன் தாயிடம் சொல்லி ஜீப்பில் தன்னுடைய பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைக்க,”ஐயா ஒரு நிமிஷம் இரு,”

என்று உள்ளே சென்று ஒரு சாமி கயிறை எடுத்து வந்து, அவன் கையில் கட்டி நெற்றியில் விபூதி வைத்து,”இங்க பாரு கண்ணு, உனக்குத் தலைவர் பதவி வேணும்.

அதை மீட்டெடுக்க நீ வேற விதத்துல கூட முயற்சிக்கலாம். ஆனா ஒரு பொம்பளப் புள்ள வாழ்க்கையில விளையாடாதப்பா. புள்ள மேல இஷ்டம் இல்ல, ஆனா அந்தப் பிள்ளையை கல்யாணம் கட்டிக்கிட்டு தலைவர் பதவி வாங்குறேன்னு வச்சுக்கோ, அதற்குப் பிறகு என்ன பண்ணுவ?”

என்று அவனைப் பார்த்துக் கேட்க,”என்ன பண்றது? அவ கூட குடும்பம் நடத்தி, புள்ள பெத்து, என் வம்சத்தைப் பெருக்கி அடுத்தடுத்து என்னோட சந்ததிகள் இந்த ஊருக்கு எல்லா நன்மையும் எங்க குடும்பத்து மூலியமா தான் பண்ணனும். அதான் என்னுடைய லட்சியம்.”

ராக்காயி விரக்தியாகச் சிரித்தவர்,”ஆகமொத்தம் ஒரு பொண்ணோட சாபத்தில் நீ வாழப் போறேன்னு சொல்ற. உங்க தாத்தாவுக்கு முன்னாடி தலைமுறை வரைக்கும் இந்த ஊருக்கும், தன்னை நம்பி வந்த பெண்ணுக்கும், ஊரில் இருக்கும் பெண்ணுக்கும் நன்மை செய்ததால் தான் அவங்களால தலைவர் பதவியைத் தக்க வச்சுக்க முடிஞ்சுது.

உங்க தாத்தா பொண்டாட்டிய மதிக்க மாட்டாரு, கொடுமை படுத்துவார். பொம்பள புள்ளைக்கு எதுக்கு இவ்வளவு சுதந்திரம் அப்படின்னு ரொம்பவே கொடுமை படுத்துவாரு. ஊர்ல இருக்குற எல்லா பொம்பளைங்களையும் கேவலமா பேசுவாரு. அவங்க விருப்பம் இல்லாம அவங்களைத் துன்புறுத்தி இருக்காரு.

அதன் பிறகு உங்க அப்பா, இன்னும் குடும்பத்துல சொத்து சேர்க்கணும்னு என்னைக் கல்யாணம் பண்ணி, என் மூலமா வந்த சொத்துக்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வெறும் உன்னை மட்டும் கொடுத்தாரே தவிர, புருஷனா ஒரு நாள் கூட என்கிட்ட நல்ல முறையில் நடந்ததில்லை.

உங்க அப்பாவுக்கு ஊர் தலைவரா இருக்கத் தகுதியும் இழந்து போச்சு. அதனாலதான் மீனாட்சி பிள்ளையோட தாத்தா இந்தப் பதவியை எடுத்துக்கிட்டாரு. அதன் பிறகு அவர் மகன்… ரெண்டு தலைமுறையா நம்ம ஊரு எவ்வளவு நல்லா செழிப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்குன்னு நீ பார்த்துகிட்டு தானே இருக்க? அவர் பொண்டாட்டியை என்னைக்காவது மரியாதை குறைவாக நினைச்சு இருக்காரா?

அந்த அம்மாதான் நம்ம ஊருக்குன்னு இருக்குற கட்டுப்பாடும் சொல்லிட்டு தன்னைத்தானே ஒரு வட்டத்துக்குள்ள போட்டு வச்சிருக்காங்க.அவர் பிள்ளை இப்போ இதுவரைக்கும் டவுன் தாண்டாத இருக்கிற பிள்ளைகளுக்கு மத்தியில படிக்கிறதுக்காக மெட்ராஸ்க்கு போயிருக்கு. நீ நினைக்கலாம், இங்க இருந்து ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் இருக்கிற ஊருக்கு எதுக்கு இவ்வளவு அலப்பறைன்னு.

ஆனா ஒரு பொண்ணு அவ வீட்ட தாண்டி வந்து தன்னோட கனவை நோக்கி போனாலும் இப்ப பெரிய குதிரைக் கொம்பா இருக்கு தம்பி. அந்தப் பிள்ளை தனக்கான அடையாளத்திற்காகப் போயிருக்கு. நீ போய் அந்தப் புள்ள வாழ்க்கையில எந்த ஒரு தப்பும் பண்ணாத தம்பி. ஊர் தலைவராகணும்னா அதுக்கு நிறைய வழி இருக்கு.”

என்று இதுவரைக்கும் அதிகபட்சம் பேசாத தன்னுடைய தாய் தனக்காகத் தான் பட்ட கஷ்டத்தை எந்த ஒரு பெண்ணும் படக்கூடாது, உணர்வற்ற மனிதனை நம்பி ஒரு பெண்ணின் வாழ்க்கை தொலையாதேடா முண்டம் என்று சொல்லாமல் சொன்னது போல் இருந்தது தென்னரசுக்கு.

“ஆத்தா நீ சொல்றது எல்லாமே புரியுது. ஆனா நான் மெட்ராஸ்ல வேலைக்கு ஏற்பாடெல்லாம் பண்ணிட்டேனே. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, நாளையிலிருந்து வேலைக்கு சேரனும்னு சொல்லிட்டாங்க. நம்ம டவுன்ல இருக்குற மில்லு தான் அங்க பெரிய கம்பெனியா இருக்காம். ஏற்கனவே இதைச் சொன்னாங்க, நான் தான் நம்ம எல்லையை விட்டுப் போகக் கூடாதுன்னு நினைச்சேன். இப்ப அந்தப் பிள்ளைக்காகத் தான் போக ஆசைப்பட்டேன்.

ஆனா நீ இப்படிச் சொன்ன பிறகு பொம்பளப் புள்ள வாழ்க்கையில விளையாடக்கூடாதுனு தோணுச்சு ஆத்தா. அந்தப் பதவியை எப்படியாவது நான் தக்க வச்சிக்கிறேன். இப்ப நான் மெட்ராசுக்கு போய்தான் ஆகணும். ஏன்னா நீயும் வறியா? அங்க ஒரு வீடு பார்த்து நீயும் நானும் இருக்கலாம். எவ்வளவு காலத்திற்குத்தான் இந்த மலை மேலேயே இருப்ப?”என்று சட்டென்று தன் மனதை மாற்றிக் கொள்ள,’பொம்பளைங்க வாய் பேசக்கூடாது, பெண்களுக்கு இவ்வளவு அகம்பாவம் இருக்கக் கூடாது. பொம்பளைங்களா சிந்திக்க ஆரம்பிச்சா அப்புறம் ஆம்பளைங்க சோத்துக்கு வழி இல்லாம திரியனும்.

இந்தப் பொம்பளைங்கள ஒரு கட்டுக்குள்ள தான் வச்சுக்கணும்’ என்று தன் மாமனார், கணவர் பேச்சுக்கு மத்தியில், தான் சொன்ன ஒரு வார்த்தைக்காக சரி என்று தலையாட்டிய மகனை நினைக்கும்பொழுது நம் வளர்ப்பு வீணாகவில்லை என நினைத்துக் கொண்டாள் ராக்காயி.”நீ இம்புட்டு சொல்றதே எனக்குப் பெரும் சந்தோஷம். இங்க பாரு, நீ போறது உனக்காக வேலையை மட்டும் பார்க்கிற மாதிரி இருக்கணும்.

வேணும்னா மீனாட்சி பிள்ளைகிட்ட நாலு வார்த்தை பேசி, என்ன இருந்தாலும் நம்ம ஊருப் புள்ள வெளியூரில் இருக்கு, நம்ம ஊருக்காரன் நமக்குத் துணையா பக்கத்தில் தான் இருக்கிறார் என்று ஒரு நம்பிக்கை வரணும். அந்த அளவுக்குத்தான் இருக்கணும்.”என்று தாய் பல அறிவுரைகளைச் சொல்லி அனுப்ப, ஆனால் தென்னரசு மனதில்,’என்னை மன்னிச்சிடு ஆத்தா…

அந்த மீனாட்சி புள்ள மேலே எனக்கு ஆசை இருக்கோ இல்லையோ, ஆனா அந்தப் பிள்ளையை அடைந்து தான் நான் எல்லாத்தையும் அடையணும். வாழப் போற வாழ்க்கை… அந்தப் புள்ள கூட வாழ்ந்துடப் போறேன். நாலு குழந்தையைக் கொடுத்த பிறகு, அதுங்களைப் பாத்துக்கிடவே உங்களுக்கும் அந்தப் பொண்ணுக்கும் நேரம் பத்தாது. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவேன்.’

என்ற தலைவன் பதவி என்ற ஒரு வார்த்தைக்காக, ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்காமல் தன் பயணத்தை மேற்கொண்டான் தென்னரசு. ஆனால் அவனுக்காகக் காத்திருக்கும் விதியின் சதியை அவன் அறிந்திருக்கவில்லை பாவம்.அவனால் ஒரு பெண்ணின் மனம் உடைபடப் போவதும், அந்தப் பெண் அவனால் கஷ்டத்தை அனுபவிக்கப் போவதும் எழுதப்படாத விதி.

___________________________________________

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 10 மணி அளவில் விரைவாகச் சென்று தன் பல்கலைக்கழகத்திற்கு வந்து நின்றாள் மீனாட்சி. அங்கே தனக்கான டிபார்ட்மெண்ட் எங்கே என்று தெரிந்து கொண்டு, தனக்கான வகுப்பு நோட்ஸ், புத்தகங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு மாலை 4 மணி வரைக்கும் படிப்பில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள்.

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் அவளுக்கு காலேஜ். தொலைதூரக் கல்வி என்பதால் வார இறுதியில் நிச்சயம் ஒரு நாள் கல்லூரிக்கு வர வேண்டும் என்பது ரூல்ஸ்.இதற்கிடையில் நட்பு, ஃப்ரெண்ட்ஷிப் என்று எதையும் அவள் தெரிந்து கொள்ள முடியாது. மீனாட்சி தான் வந்த வேலையை மட்டும் பார்த்துக்கொண்டாள்.

தனக்கான ப்ரொபசர் யார் என்று தெரிந்து கொண்டு, தனக்கான புத்தகங்கள், சிலபஸ் அனைத்தையும் பெற்றுக்கொண்டவள், வேலைக்குப் போய் வந்த பிறகு படிக்க வேண்டும்; வாரத்திற்கு ஒரு நாள் கல்லூரி அட்டென்ட் செய்ய வேண்டும். படிப்பில் அரியர் இல்லாமல் பாஸ் செய்ய வேண்டும். மாஸ்டர் டிகிரியோடு ஊருக்குச் செல்ல வேண்டும்.

இரண்டு வருடத்தில் வேலை செய்வதற்கான எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வளவுதான் மீனாட்சியின் லட்சியம்.மணி நான்கு ஆனவுடன் தன்னுடைய ஹாஸ்டல் ரூமுக்குச் செல்லலாம் என்று பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு பெரிய உயர்வகை கார் அங்கே டிராஃபி்க்கில் நின்றுகொண்டிருந்தது.

வரிசையாக வண்டி இருக்க, நடுவில் பளபளவென்று கருப்பு நிற அந்த உயர் தட்டு வகை கார் மீனாட்சியின் கண்களை உறுத்தியது.

“இந்த கார் நம்ம வேலை செய்ற இடத்துல பார்த்த மாதிரியே ஒரு ஃபீலிங்…”என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அந்த காரின் ஜன்னல் கதவு மெதுவாக இறங்கியது. அப்பொழுதுதான் பார்த்தால் அந்தக் காருக்குள் இருப்பது வேறு யார்… நம் அதிரவ சக்கரவர்த்தி தான்.

“அட… இந்தப் சைனீஸ் மண்டையன் காரா? இந்த ஏரியா பக்கம் இவனோட கார் எதுக்கு போகுது?” என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அவன் அருகில் ஒரு பெண் அவனை உரசிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு முகம் சுழித்துப் போனது.

“அதானே… பக்கத்துல பொம்பளை இல்லாமல் இருக்க மாட்டான் போல. என்ன பண்றது பணக்கார வாழ்க்கை… பணத்துல மிதந்துட்டு இருக்கான். இருக்கிற பணத்தை என்ன பண்றேன்னு தெரியாம இது போன்ற பொண்ணுங்களுக்கும் காசு கொடுத்து தனக்கான சுகத்தையும் வாங்கிக்கிறான் போல.

கால காலத்தில் கல்யாணம் பண்ணி இருந்தா என்ன, பிரச்சனை வந்திருக்குமா?”என்று அவள் பாட்டிற்குப் புலம்பிக் கொண்டிருக்க,தன் அருகில் இருக்கும் பெண் தன்னை உரசிக் கொண்டிருந்தாலும், எதிரே டிராஃபிக் சிக்னலின் கவுண்டவுன் போய்க்கொண்டிருந்தாலும், தன் வலப்பக்கத்தில் பேருந்து ஸ்டாப்பில் நின்று கொண்டு தன்னைப் பார்த்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்த மீனாட்சியை அதிரவன் கண்கள் பற்றிக் கொண்டது.

அவன் நேராகப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் ஓரக்கண் பார்வையை யாரும் அறிந்திருக்கவில்லை.”இவ இங்க என்ன பண்றா?” என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, அந்தப் பேருந்துக்கு அருகே இருக்கும் யூனிவர்சிட்டி, அவள் கையில் இருக்கும் அந்த யூனிவர்சிட்டி அட்டை… அதைப் பார்த்துப் புரிந்து கொண்டான்.

“எஸ் கரஸில் (Correspondence) படிச்சுக்கிட்டு இருக்கிறதா நமக்கு டீடெயில்ஸ் வந்தது. சண்டே காலேஜ் அட்டென்ட் பண்ணிட்டு வரா போல இருக்கு. இவள பத்தி எனக்கு என்ன கவலை? இது என் கண்ணில் மறுபடியும் சிக்கினால் மறுபடியும் ஏதாவது மோசமான வேலையைக் கொடுத்துடலாம்,”

என்று நக்கலாக நினைத்துக் கொண்டான்.அதே சமயம் அவனை நன்றாகத் திட்டி முடித்த பிறகு மீனாட்சி,”இவன பத்தி நம்ம எதுக்கு நினைக்கணும்? இவனும் அவன் மூஞ்சியும்… ஒரு நாள் பாரு எல்லாப் பொம்பளைங்க கிட்டயும் காசு புடுங்கிக்கிட்டு தெருவுல விடப் போறாங்க,”

என்று அவனுக்குச் சாபத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.அவன் நடுத்தெருவுக்கு வருவான், ஆனால் பணத்தால் அல்ல… இந்த மீனாட்சியால் நடுத்தெருவில் ஒருநாள் அலையப்போகிறது அதிரூபன் வாழ்க்கையில் நடக்கப் போகும் விஷயமாகும்.

__________________________________________

You may also like

Leave a Comment

About Me

Featured