அத்தியாயம் 4
மறுநாள் காலை அம்பை, இசை இருவரும் தங்கள் வேலைக்கு புறப்பட பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தனர். ஒரு வாரத்திற்கு செல்லம்மா பாட்டிக்கு விடுமுறை அளித்து ஜமுனா சமையல் வேலையில் இறங்கிவிட்டார். இரு மகள்களுக்கும் பிடித்த உணவு தயார் செய்து, மதியத்திற்கு அதையே லஞ்ச் பேக் செய்து வைத்தார்.
இருவரும் தயாராகி டைனிங் டேபிளுக்கு வர, அன்றைய காலை உணவான சூடான பொங்கல், தேங்காய் சட்னி, சிறுபருப்பு சாம்பார், மெதுவடை, மசால் வடை என்று அட்டகாசமாக இருந்தது.
“இந்த மாதிரி வெரைட்டியான சாப்பாடு நான் ஊர்ல இருக்கும் போது செஞ்சு கொடுத்திருக்கியா? உன்னோட பொண்ணுக்கு மட்டும் எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்சு வை.”
என்று இசை மீண்டும் அம்மாவிடம் வம்பு இழுக்க, அம்பை அவள் தலையில் கொட்டு வைத்து,
“நடிக்காதே! எது சமைச்சு கொடுத்தாலும் எனக்கு இது டேஸ்ட் பிடிக்கல, இது நல்லா இல்ல, அது நல்லா இல்லைன்னு அப்பா கிட்ட ஸ்விக்கியில் ஆர்டர் பண்ணி சாப்பிடுவ. இப்ப வந்து இங்க டிராமா பண்ணிட்டு இருக்க. ஒழுங்கா செஞ்சு வச்சதைச் சாப்பிடு!”
என்று அதட்டல் போட்டவுடன் வாயை மூடிக்கொண்டு சாப்பிடுவதில் முன்புரமாக இருந்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்து ஸ்கூட்டியில் வேலைக்கு புறப்பட தயாராக இருந்தனர். இசை வேலைக்குச் சேர இருப்பதால், முன்கூட்டியே சிறிய மகளுக்கும் ஒரு ஸ்கூட்டியை அம்பை மூலம் ஆர்டர் செய்து வீட்டிற்கு வர வைத்ததார், இரு பெண்களும் தனித்தனி ஸ்கூட்டியில் எந்த ஒரு தொல்லையும் இல்லாமல் அவரவர் வேலைக்கு புறப்பட சவுகரியமாக இருந்தது.
அம்பை தன் அலுவலகத்திற்கு வந்து அவளது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளது காதல் மன்னன் வழக்கம் போல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை அழைத்து காதல் சில்மிஷம் செய்துதான் அவளை அனுப்பி வைத்தான். எல்லை மீறாமல், கலங்காத நதி போல் சென்று கொண்டிருக்கிறது இவர்களது காதல்.
ஆனால் இங்கே ஒருவன், “பழநாள்பசி ஒரு நாள் ருசி” என்பது போல், இத்தனை நாள் கனவில் தன்னைச் சித்திரவதை செய்த பாவையை ஒரு வழி செய்து விட வேண்டும் என்று அவளுக்காகவே கண்கொத்திப் பாம்பாய் காத்துக் கொண்டிருந்தான். எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் தலைமை ஆசிரியர், இன்று முன்கூட்டி எதற்கு வந்திருக்கிறார் என்று அனைவரின் கேள்விப் பார்வைக்கும் சலனம் இல்லாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் இசை வந்து, புதிய ஆசிரியர்கள் இருக்கும் வெயிட்டிங் ஹாலிற்குச் சென்றாள். துணை தலைமை ஆசிரியரிடம் கலந்துரையாடி பிறகு, ஒருவர் பின் ஒருவராக தலைமை ஆசிரியரிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டு வர வேண்டும் என்பதே இன்றைய நாளுக்கான வேலை.
சிறிது நேரத்தில் துணை தலைமை ஆசிரியர் சைலஜா என்கிற 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி வந்தார். பார்ப்பதற்குச் சாந்தம் பொருந்திய முகம். மாணவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். 20 ஆண்டுகாலமாக இதே பள்ளிக்கூடத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
அவரைப் பார்த்தவுடன் இசைக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. அவரது கனிவான கம்பீரமான பேச்சு அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு உற்சாகமூட்டுவதாக இருந்ததால், அனைவரும் தைரியமாக மாணவர்களை எதிர்கொள்ள வேண்டும், அவர்களை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொன்றாகப் புரிந்து கொண்டனர். பிறகு அனைவரும் தலைமை ஆசிரியரைச் சந்திக்கும்படி சொல்ல, அனைத்து ஆசிரியர்களும் பேசி முடித்துவிட்டு இறுதியாக இசை அனுமதி கேட்டு உள்ளே நுழைய, அவளுக்காகவே காத்துக் கொண்டிருந்தவன், இப்பொழுது அவள் வந்ததைக் கண்டு கொள்ளாதவன் போல் பந்தா காட்டிக் கொண்டிருந்தான்.
“எஸ்கியூஸ் மீ சார்”
என்று பணிவாக அனுமதி கேட்க, அவன் தன் லேப்டாப்பைப் பார்த்துக் கொண்டே,
“எஸ் கம் இன்”
என்று அதிகாரக் குரலில் ஆணையிட, சற்று பயந்துதான் போனாள் இசை. “அனைத்து தலைமை ஆசிரியர்களும் இப்படித்தான், இதற்கு வயது தடை இல்லை” என்று உள்ளே நுழைந்து, உட்காருவதற்காக அனுமதி கேட்க, அவன் தலை அசைத்தவுடன் உட்கார்ந்து நேருக்கு நேர் அவனைப் பார்த்தாள்.
தேவியின் தரிசனம் கிடைக்காதா என்று தவமிருந்தவனுக்கு, அருகிலேயே அவள் இருப்பது மூச்சு முட்டுவது போல் இருந்தது. அதுவும் கவிதை சொல்லும் கண்கள் பார்த்தவுடன் ஆசை தீர ருசிக்க வேண்டும் என்பது போல் இருந்தது. அவளது இளஞ்சிவப்பு நிற இதழ்கள், உப்பிய கன்னம் அப்படியே வர்ணித்துக் கொண்டே கழுத்தின் கீழ் அவன் கண்கள் போக, இது தவறு என்று மனம் சொன்னதால் அமைதியாக அவளை நிமிர்ந்து பார்த்து, அவளிடம் அவள் கோப்புகளைக் கேட்க, அவளும் கொடுத்து விட,
அனைத்தையும் பார்த்து முடித்தவன்,
“ஓகே. மேனேஜ்மென்ட் நல்ல டீச்சர் தான் செலக்ட் பண்ணி இருக்காங்க. இங்கே பாருங்க இசை, அந்தக் காலத்துல நம்ம படிக்கிற ஸ்கூல் காலங்களில் கண்ணை மட்டும் விட்டுடுங்க, பசங்களை எப்படி வேணா அடிங்கன்னு நம்ம அம்மா அப்பா நம்மைத் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க.
கொஞ்சம் இடைப்பட்ட காலத்தில் சும்மா டீச்சர் திட்டினாலே தற்கொலை பண்ணிக்கிற அளவுக்கு பசங்க இருக்காங்க. ஏன் இப்ப கூட அப்படி இருக்காங்க. ஆனா நம்ம தான் ஒவ்வொன்றையும் பார்த்து, புரிஞ்சு பசங்களை நல்வழிப்படுத்தணும்.
இப்ப இருக்குற பசங்க எப்போ என்ன முடிவு எடுக்குறாங்கன்னு ஒண்ணும் புரியல. நம்ம நினைச்சுகிட்டு இருப்போம், ‘இவங்களுக்கு என்ன வசதியான வாழ்க்கை, நல்ல அம்மா அப்பா, சந்தோஷமா இருக்காங்களே’ன்னு.
ஆனா அந்த மாதிரி வீட்டுப் பசங்க தான் மன அழுத்தம் என்று ஒரு பெயர் சூட்டப்பட்டு தற்கொலை பண்ணிக்கிறாங்க. இதை வந்து நான் என்ன சொல்ல வரேன்னா, வெறும் படிப்பு மட்டும் இல்லாம மாணவர்களோடு நீங்களும் அதிக இன்வால்வ்மென்ட் ஆகணும், நல்லாப் புரிஞ்சு வச்சுக்கணும். இதுவரைக்கும் நம்ம ஸ்கூல்ல எந்த ஒரு பிரச்சனையும் வந்தது இல்லை. இது நான் எப்பவுமே ஜென்ரலா புதுசா ஒரு டீச்சருக்குச் சொல்ற அட்வைஸ் தான். பசங்களோடு சேர்ந்து புது புது விஷயங்கள் நீங்களும் கத்துக்கலாம். சோ, என்ஜாய் யுவர் ஜாப். ஆல் தி பெஸ்ட்.”
என்று ஆங்கிலமும் தமிழும் சரளமாக அவன் நாவில் தாண்டவம் ஆடிய பேச்சில் சற்றுத் தடுமாறித்தான் போனாள் இசை. அவன் ஆளுமையைப் பார்த்து ரசிக்காமல் இருக்க முடியவில்லை அவளால். இருந்தாலும் தன் கெத்தைக் விட்டுக் கொடுக்காமல் சாதாரணமாக அனைத்திற்கும் சரி என்று பதில் சொல்லி, அவரிடம் இருந்து அனுமதி பெற்று, அதை விட்டு வெளியே செல்ல வேண்டிய சமயம்,
“ஒரு நிமிஷம். இது உங்க கிட்ட சொல்லியே ஆகணும்.”
என்று அவள் முதுகிற்குப் பின்னால் அவன் குரல் கேட்க, என்னவென்று பார்வையால் திரும்பி அவனைப் பார்க்க,
“உன்ன மாதிரி ஒரு டீச்சர் இருந்தா கண்டிப்பா பசங்களுக்கு டிப்ரஷன் எதுவும் இருக்காது. அவங்க ஸ்டடிஸ் என்ஜாய் பண்ணிப் படிப்பாங்க. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. பிகாஸ் அறிவா இருக்க டீச்சர யாருக்குத்தான் பிடிக்காது?“
என்று அவன் கண்கள் சிமிட்டிச் சொல்லும் தோரணையில் மொத்தமாக விழுந்து போனாள். ஆனால் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக “தேங்க் யூ” என்று சொல்லி அங்கிருந்து விடைபெற்றாள். அவளுக்கான வகுப்பு ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரைக்கும் என்று ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலில் வரும் ஆசிரியருக்கு எடுத்தவுடன் பெரிய பாடத்தைக் கொடுத்து விட மாட்டார்கள். இப்பொழுது இசைக்கு கொடுக்கப்பட்டுள்ளது சுற்றுச்சூழல் கல்வி. மற்றும் இசை தனியாக மியூசிக் கிளாஸ் சென்று சான்றிதழ் பெற்றிருப்பதால், இசை வகுப்பு பள்ளியில் இருப்பதால், அவளுக்கு மாணவர்களுக்காக ஓய்வு நேரத்தில் கொடுக்கப்படும் இசை நேரப் பயிற்சியில் அவளுக்கு ஆசிரியர் பணி போடப்பட்டுள்ளது. ஒரு ஆறு மாதத்திற்கு இதைத்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகுதான் அவள் படித்த மேஜர் படிப்புக்கான சப்ஜெக்ட் ஒதுக்கப்படும்.
அவளுடன் இன்று புதிதாக வேலைக்குச் சேர்ந்த சந்தியா என்ற ஆசிரியருடன் நட்பு பாராட்டிக் கொண்டாள். இருவரும் ஒரே நாளில் நன்றாகப் பழகிக் கொண்டனர். ஒவ்வொரு வகுப்பிற்கும் இசை சென்று மாணவர்களுடன் ஐக்கியமாகி, அவர்களுடன் ஒன்று இணைய முயற்சி செய்தாள். மாணவர்களும் அது கேட்டது போல் நன்றாக ஒத்துழைத்தனர். வந்த முதல் நாளில் மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியர் பட்டியலில் இசையும் சேர்ந்து விட, அன்றைய நாள் அவளுக்கு மகிழ்ச்சியாகச் சென்றது.
பள்ளி வகுப்பு நேரம் முடிந்த பிறகு, மற்ற ஆசிரியர்களுடன் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, பள்ளியில் அவளுக்காக ஒதுக்கப்பட்ட பாட சிலபஸ் அனைத்தையும் மூத்த ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு வீடு வருவதற்கு அவளுக்கு ஐந்து மணி ஆகிவிட்டது.
மகள் களைப்பாக வருவதைப் பார்த்த ஜமுனா ஓடிச் சென்று பழச்சாறு தயார் செய்து அவளுக்குக் கொண்டு வந்து கொடுக்க,
“இன்னிக்கு ஒரு நாள் தான் லேட். சிலபஸ், மத்த டீச்சர் கூட மீட்டிங் அப்படி இப்படின்னு இன்னைக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு மணி நேரம் ஆயிடுச்சு. என்னோட வொர்க்கிங் டைம் மார்னிங் 8:30 டு 3 ஓ கிளாக் தான். இன்னிக்கு ஒரு நாள் கடந்து வருவதற்கு கஷ்டமா இருக்கு. நாளையிலிருந்து சீக்கிரம் எஸ்கேப் ஆகிடனும்.”
என்று அனைவரிடமும் சொல்லி, ஒரு நாள் வேலைக்கே அழுது போய் சொல்லிக் கூற,
“புதுசா ஜாயின் பண்ணா அப்படித்தான் இருக்கும். போகப் போக பழகிடும். ஏதாவது எக்ஸாம் அந்த மாதிரி வந்தா, நீ தானே பசங்களுக்குக் கிட்ட எக்ஸ்ட்ரா கேர் எடுத்துப் பண்ணனும். இதுக்கெல்லாம் பெரிய விஷயமா சலிச்சுக்கக் கூடாது. 7:30க்கு நம்ம ராதா வீட்டுக்குப் போகணும். இன்னிக்கு டின்னர் அங்கே தான் நம்மள வரச் சொல்லி இருக்கா. ‘ஊருக்கு வந்த உடனே என்ன பாக்காம இருக்கீங்களா?’ என்று விமல் பையன் ஒரு வழி பண்ணிட்டான். அதனால அம்பை வந்த உடனே எல்லாரும் அங்க கிளம்பணும்.”
என்று சொல்லிவிட, அம்பை வருவதற்கு இன்னும் நேரம் இருப்பதால், சற்று நேரம் ஓய்வெடுத்துப் பொறுமையாக எழுந்து தன்னைத் தயார் செய்து கொண்டு வர, அப்பொழுதுதான் அலுவலகத்தில் இருந்து வந்த அம்பை பிரஷ்ஷப்பாகி ராதா வீட்டிற்குப் புறப்படத் தயாராகி வர, குடும்பம் மொத்தமும் காரில் ராதா வீட்டுக்குச் சென்றனர்.
கார் ஹாரன் சத்தம் கேட்டவுடன் விமல் துள்ளிக் குதித்து ஓடி வெளியே வந்து,
“இப்பதான் நாங்க இருக்கிறதே உங்களுக்குத் தெரிஞ்சுதா? அடிக்கடி வந்து பாக்கணும்னு கொஞ்சம் கூட அக்கறை இல்ல. இதோ இருக்காளே, இங்கதான் இருக்கா. ரொம்ப நாளா இவளை எப்பயாவது ஒரு தடவை தான் எட்டிப் பார்த்துட்டுப் போறான். உங்களைக் குறை சொல்லி என்ன பிரயோஜனம்?”
என்று விமல் சலித்துக் கொள்ள, அவனைச் சமாதானம் செய்து எல்லாரும் வீட்டுக்குள் வர, ராதா அனைவரையும் புன்னகை முகத்தோடு வரவேற்று அவர்களுக்கு ஜூஸ் கொடுக்க, அனைவரும் அதை அருந்தி முடித்து,
“அப்புறம் ராதா, உன்னோட ஹோட்டல் பிசினஸ் எப்படி போயிட்டு இருக்கு? இந்த பையன் MBA பாஸ் பண்ணுவானா மாட்டானா?”
என்று மார்த்தாண்டம் தன் தம்பி பேரன் காதைத் பிடித்துத் திருக,
“அதெல்லாம் நல்லா படிக்கிறான். ஹோட்டல் நல்லா போயிட்டு இருக்கு. வெறும் ஃபுட் மட்டும் இல்லாம, இப்ப இருக்குற பசங்களுக்கு இந்த பீட்சா, பர்கர், சாட் ஐட்டம்ஸ் எல்லாம் ரொம்ப பிடிக்குது. அதனால பக்கத்துலேயே ஒரு ஸ்நாக்ஸ் சென்டர் போடலாம்னு இருக்கேன். அங்க இப்ப இருக்குற பசங்க விரும்பி சாப்பிடும் எல்லாமே சேல் பண்ற மாதிரி. சாப்பாடு இந்த இடத்திலும், இந்த மாதிரி ஸ்நாக்ஸ் இடம் ஒரு இடத்திலேயும் இருந்தா, அலைச்சல் இல்லாமல் தனித்தனியா அவங்க விருப்பப்பட்டதைச் சாப்பிடலாம் இல்லையா? அதனாலதான் பக்கத்துல சும்மா இருக்கிற அந்த இடத்துல இதை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.”
என்று சொல்ல,
“சூப்பர் ஐடியா சித்தி! இதை நானே உங்ககிட்ட சொல்லலாம்னு ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். அதான் நான் வந்துட்டேன்ல. அந்த இடத்துல ஸ்நாக்ஸ் சென்டர் மட்டும் நீங்க ஆரம்பிச்சிருந்தா கூட, உங்களுக்கு நானும் ஹெல்ப் பண்ணுகிறேன்.”
என்று அம்பை சொல்ல, கூடவே விமல் கூட மேற்கொண்டு பல ஐடியாக்களை வழங்க, இசையும் அதை ஆமோதித்து, ஒரு நல்ல நாள் பார்த்து அந்த இடத்தில் ஒரு ஸ்நாக்ஸ் சென்டரை ஓபன் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டனர்.
“உன்ன நெனச்சா எனக்குப் பெருமையா இருக்குமா! சின்ன வயசுல ஒரு குழந்தையை மட்டும் வச்சுக்கிட்டு நீ எவ்வளவு கஷ்டப்பட்டுகிட்டு இருக்க. ‘எங்களோடு வா’ன்னு சொன்னாலும் வர மாட்டேங்குற.”
என்று ஜமுனா தங்கையின் நிலைமையைப் பார்த்துப் பரிதாபமாகக் கூற,
“அக்கா, இப்ப நம்மளுக்குப் பணம், புகழ், பெயர், அந்தஸ்து எல்லாம் இருக்கலாம். ஆனா கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி விவசாய நிலம் மட்டும் தான் நமக்குச் சொந்தமாக இருந்தது. அதை வச்சுக்கிட்டு நம்ம வாழ்க்கையைச் சந்தோஷமாகத்தான் வாழ்ந்துகிட்டு இருந்தோம்.
அதுக்கப்புறம் அப்பா தனியா சென்னைக்கு வந்து சின்னதா ஹோட்டல் ஆரம்பிச்சாரு. எல்லாம் நல்லா போயிட்டு இருக்குது. நானும் நல்லாப் படிச்சேன். அதைப் மட்டும் பண்ணி இருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. நடுவுல காதல் அது இதுன்னு ஏமாந்து, ரொம்ப பெரிய கஷ்டத்துல விதி எங்களைத் தள்ளிடுச்சு. அப்பாவும் அம்மாவும் துணையாக இருந்தார்கள். விமல் பொறந்து அவனைப் பார்த்துகிட்டாங்க. நானும் அப்பாவும் ஹோட்டல்ல பார்த்துகிட்டோம்.
அப்பதான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது. பணம் மட்டும் தான் ஒரு மனுஷனோட தகுதியைக் குறிப்பிடுகிறது அப்படின்னு. அதனால்தான் கடுமையா உழைச்சி, சின்னதா இருந்த டிபன் சென்டர் இப்போ மூன்று மாடி ரெஸ்டாரன்ட்டா இருக்குது. இப்போ என்கிட்ட இருக்கிற பணம் அப்போ இருந்திருந்தால் எனக்கு இந்தக் கஷ்டம் இருந்திருக்காது. பரவாயில்லை. வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாகப் பாடம் கற்றுக் கொடுக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு அப்படி ஒரு பாடம் கற்றுக் கொடுத்திருக்கு விதி.
இனி அதைப் பத்தி நான் கவலைப்படல. இதோ என்னோட பையனும் MBA முடிச்சிட்டு என் கூட பிசினஸில் எனக்குத் துணையாக இருக்கப் போறான். அதுக்கப்புறம் மொத்தத்தையும் அவன் தலையில கட்டிட்டு நான் நிம்மதியா ரெஸ்ட் எடுக்கப் போறேன்.”
என்று ராதா மூச்சு விடாமல் சொல்ல, அவரின் துணிச்சலைக் கண்டு அனைவரும் பாராட்டினர்.
என்னதான் வெளியே கஷ்டங்களை மறைத்துப் புன்னகை முகமாக ராதா வலம் வந்தாலும், உள்ளுக்குள் அந்தக் காதல் தோல்வி இன்னும் அவர் மனதில் ரணமாக இருக்கிறது. அதைப் யார் கண்டு கொள்ளாமல் போனாலும், இசை கண்டு கொண்டாள்.
“இந்தக் காதல் எப்பவுமே மனிதர்களுக்குக் கஷ்டத்தை மட்டும் தான் கொடுக்கும். தப்பு தவறி கூட நம்ம காதல் என்கிற மாயையில் விழவே கூடாது கடவுளே!”என்று இறைவனுக்குக் கடுமையான வேண்டுகோளை விடுத்தாள். அதைத் தவிடுபொடியாக்கி, 24 மணி நேரமும் ஒருவனை நினைத்துத் திக்குமுக்காடப் போகிறாள் என்பதை அறியாமல்.