முதலிரவு இல்லையா என்று பதறி அடித்துக்கொண்டு இரு நபர்களின் குரல் வர, குரல் வந்த திசை நோக்கிப் பார்க்கும்போதுதான் தெரிந்தது, அலறிப் போனது ராம் மற்றும் அருண்குமார் என்று. குடும்பத்தார்கள் அனைவரும் அவர்களை முறைக்க, ஒரு பக்கம் ராதா, மறுபக்கம் யோகிதா இருவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.
“ஆமாப்பா, இன்னைக்குத்தான் முதன்முதல்ல முதலிரவு கொண்டாடப் போறீங்க இல்ல? உங்களுக்கு இல்லைன்னு சொன்ன உடனே ஷாக் ஆகுறதுக்கு, உங்களுக்கு முதலிரவு எல்லாம் ஒன்னும் கிடையாது. அதான் ஏற்கனவே பிள்ளைகளுக்கு அப்பா ஆகிட்டீங்கள்ள? அதனால உங்களுக்கு அந்தக் கணக்கு கிடையாது. நீங்க எப்பவும் போல இருக்கலாம். நான் சொன்னது புது மாப்பிள்ளைகளுக்கு ஒரு வாரம் எதுவும் கூடாதுனு” என்று சிவகாமி பாட்டி விளக்கமாகச் சொன்னார்.
சிவகாமி பாட்டி சொன்னதைக் கேட்டு அருண்குமார் மற்றும் ராம் இருவரும் மகிழ்ச்சி அடைய, மறுபக்கம் இனியனும் செழியனும் அவர்களைக் கொலைவெறியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.”சரி சரி, அதான் ஒரு வாரம் கழிச்சுத் தானே எல்லாச் சடங்கும் இருக்கு? இப்போ அவங்க அவங்க ரூமுக்குப்போய் ஓய்வெடுங்க. ராதாம்மா, நீ அருண் ரூமுக்குப்போ. யோகிதா, மாப்ள தம்பியை உன் ரூமுக்கு அழைச்சிட்டுப்போ.
இனியன், செழியன் ரெண்டு பேரும் உங்க பொண்டாட்டிங்களை அழைச்சிட்டுப் போங்க. சம்பந்தி, நீங்க இங்க இருக்குற ரூமை யூஸ் பண்ணிக்கோங்க. பேராண்டி, உனக்கு இந்தப் பக்கம் ஒரு ரூம் இருக்கு, அங்க போய் ஓய்வெடு. இது உன்னோட வீடுதான்” என்று சிவகாமி ஆளுமை நிறைந்த குரலில் சொல்ல, தென்றலுக்குக் கொள்ளை மகிழ்ச்சி.இந்த வீடு வெறும் மதன்குமாருக்கு மட்டும் சொந்தமில்லை.
மதன் மற்றும் அருண்குமார் இருவரும் சமப்பங்கு பணத்தைப் போட்டுக் கட்டிய வீடு. ஒவ்வொரு அறையையும் பார்த்துப் பார்த்து ஆசை நிறைந்த கனவோடு கட்டிய கனவு இல்லம். இந்த வீட்டிற்கு வந்த பிறகு கௌதமிக்கும் அருண்குமாருக்குமான தகராறின் வெளிப்பாடுதான் அருண்குமாரின் காதல் விஷயம். அது புரிந்த பிறகு தவறு செய்துவிட்டோம் என்று சிவகாமி குற்ற உணர்ச்சியில் அமைதியாகவே வலம் வந்தார்.
இதோ மகனின் காதல் நிறைவேறிய பிறகு, இப்போது மீண்டும் பழைய ஆளுமையுடன் கம்பீரமாகப் பேசுவதைப் பார்த்து மதன்குமாருக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. இத்தனை வருடங்கள் மனதை அரித்துக் கொண்டிருந்த குற்ற உணர்ச்சி நீங்கியது.தன் தங்கை செய்த தவறால் எத்தனை நல்ல உள்ளங்கள் பாதிக்கப்பட்டன என்று அவருக்குத் தெரியும்.
இதோ அனைவருக்கும் பிரச்சினைகள் சரியாகிப் போய்விட்டன. ஆனால், அந்தச் சீனிவாசனோடுதான் கௌதமி இருக்கிறாள். ஏதாவது குட்டிக்கரணம் செய்வாள், தகராறு நடக்கும், ஏன் மிகப்பெரிய கொலைப்பாவம் கூடச் செய்யத் துணிவாள். தன்னுடைய தங்கையைப் பற்றி அறியாதவரா அவர்? தனக்குத் தெரிந்த நபர்களைக் கொண்டு அவர்களைப் பின் தொடரச் செய்திருக்கிறார்.
நான்கு ஜோடிகளும் அறைக்குள் புகுந்துவிட, அருண்குமாரின் அறையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார் ராதா. அந்த அறையில் யோகிதாவும் அருண்குமாரும் இருக்கும் புகைப்படம் மட்டும்தான் இருந்தது, அவரின் திருமணப் புகைப்படம் இல்லை. மனைவியைப் பற்றிய விஷயம் அவருக்குத் தெரிந்திருந்தால் அதைப் பற்றிக் கேட்டு மனதைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.
தன்னோடு வாழாவிட்டால் என்ன, அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணோடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தாரே தவிர, வேறேதும் தவறாக நினைக்கவில்லை. ஆனால், திருமணம் ஆகியும் அருண்குமாரின் வாழ்க்கை இவ்வளவு மோசமாக இருப்பதை நினைத்து ராதாவுக்கும் சற்று வருத்தம். அதனால்தான் அமைதியாக இருக்கிறார்.
இப்படிச் சிந்தனையில் இருக்கும் ராதாவைப்பின்பக்கத்திலிருந்து கட்டிக்கொண்டார் அருண்குமார்.”என்னை நினைச்சுப் பரிதாபப்பட வேண்டாம், அதுக்காக ஓவரா என் மேல கோபமும் பட வேண்டாம். நமக்குள்ள இருக்கிற பஞ்சாயத்து ஒரு வாரத்துல பேசித் தீர்ந்தாப் போயிடும். என் பக்கம் இருக்கிற நியாயத்தைச் சொன்னா, ஓரளவுக்கு என் நிலைமை புரிஞ்சு என்கூட இருக்கணுமே தவிர, ‘ஐயோ பாவம்’ என்று பரிதாபப்படக் கூடாது.
‘துரோகி, துரோகி’ என்று பலமுறை என்னைக் குத்திப் பேசக்கூடாது. இதுதான் எனக்குத் தேவை. நீ, நான், நம் மகன், என் மகள் யோகிதா என நம் நால்வரும் ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். உனக்கு இதில் விருப்பமா?” என்று மண்டியிட்டு இருபது வயது வாலிபன் போல் ஒரு மோதிரத்தையும் ரோஜாவையும் அவர் முன்பாக நீட்டினார்.ராதாவிற்கு 22 வருடங்களுக்கு முன்பாகப் பார்த்த அருண்குமார் ஞாபகம் வந்துவிட்டது.
மெதுவாகச் சிரித்துக் கொண்டே அவருக்கு முன்பாக மண்டியிட்டவர், ரோஜாவையும் மோதிரத்தையும் அந்தப் பக்கம் வைத்துவிட்டு, அவர் தலையை வருடி நெற்றியில் முத்தமிட்டார். ஒரு துளி கண்ணீர் அவர் கண்களிலிருந்து எட்டிப்பார்த்தது.”இது போதும் ராதாம்மா, எனக்கு இது போதும்” என்று மனைவியை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டார் அருண்.”ஐயோ அருண், இது பால்கனி. தோட்டக்காரங்க இருக்காங்க”
என்று ராதா கூச்சப்பட, அவரோ மனைவியை அப்படியே அள்ளிக்கொண்டு கட்டிலில் போட்டார். அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று நடுக்கத்துடன் அவரைப் பார்த்தார் ராதா. அருண்குமாரின் செயலில் அவர் கண்களே பிதுங்கிப் போயின. சட்டையைக் கழற்றித் தூர வீசி எறிந்துவிட்டு, பொத்தென்று அவர் மேலே விழுந்து, போர்வையைத் தூக்கி இருவரையும் மறைத்துப் போர்த்திக்கொண்டார்.
அடுத்து ஏதோ சம்பவம் என்று எதிர்பார்த்ததற்கு ஏமாற்றமாக, ராதாவின் நெஞ்சில் தலை வைத்து அவரைக்கட்டிக்கொண்டு உறங்க ஆரம்பித்தார் அருண்.—இங்கே யோகிதா மடியில் ராம் தலை வைத்துப் படுத்துக்கொண்டே அவள் முகத்தைப் பார்க்க, அவளும் மெதுவாக அவன் தலை வருடிக்கொண்டிருந்தாள். அவனுக்குக் குற்ற உணர்வு மேலும் மேலும் நெஞ்சைக் கிழித்தது. இந்நேரம் வேறு பெண்ணாக இருந்தால், தனிமையில் சிக்கிக்கொண்டதற்குப் பலத்த அடி கிடைத்திருக்கும் அல்லது சுடுசொல் வார்த்தைகள் கிடைத்திருக்கும்.
ஆனால் இவள் எதுவும் பேசாமல் தலையை வருடிக்கொண்டிருக்கிறாள். என்ன விதமான பெண் இவள் என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் பேச மாட்டாள் என்று தெரிந்து அவனே ஆரம்பித்தான்.”எல்லாமே என்னோட விருப்பமாத்தான் இருக்கு. கடைசியில் நம்ம கல்யாணம் ஆன வரைக்கும் நீ ஒரு வார்த்தை கூட எதுவும் கேட்கல. கோபத்தில் அடித்தாய், அவ்வளவுதான்.
ஏதாவது என்கிட்ட பேசு, சொல்லு. உன் மனசுல எதையும் அழுத்திக்க வேண்டாம் இந்த மாதிரி டைம்ல” என்று அவன் கெஞ்சிய பிறகுதான் அவள் வாயைத் திறந்தாள்.”நீ என்னைத் தனித்துவிட்டுப் போகமாட்டாய் என்று எனக்குத் தெரியும் ராம். அன்னைக்கு நீ சொன்ன பிறகுதான் எனக்குத் தெரியும், உனக்கு எனக்கு முன்னாடி நிறையப் பெண்களுடன் தொடர்பு இருந்தது என்று.
ஆனா அந்த டைம்ல நம்ம ரெண்டு பேரும் உலகத்தை மறந்து ஒருத்தர் பெயரை ஒருத்தர்தான் மாத்திச் சொல்லி இருக்கோம். இதுக்கு முன்னாடி நிறையப் பெண்களுடன் உடலுறவில் இருக்கும்போது அவங்க பெயர் சொல்லித்தான் பண்ணுவியா? கொஞ்சம் யோசிச்சுச் சொல்லு” என்று அவள் கேட்ட பிறகுதான் அவனுக்குத் தெரிந்தது. சத்தியமாக அப்படிச் செய்தது கிடையாது.
பெண்கள் வருவார்கள், உச்ச போதையில் அவர்களோடு இணைந்து தேவையான பணத்தைக் கொடுத்துவிட்டு அனுப்பி விடுவான். ஆனால் யோகிதா அப்படி கிடையாது. ‘சம்திங் ஸ்பெஷல்’ என்பார்களே, அதுதான் அவன் வாழ்க்கையில் நடந்தது.”நீ சொன்னதுக்கப்புறம்தான் எனக்கே புரியுது. நான் இதுவரைக்கும் அப்படிப் பண்ணது கிடையாது. அதுவும் உன்கிட்ட இருந்த அளவுக்குக் கூட நான் யார்கிட்டயும் அப்படி இருந்தது கிடையாது.
அதுக்காக நான் நல்லவன், உனக்கு மட்டும் ஸ்பெஷல் அப்படின்னு சொல்லல. நான் உன்னை ஒதுக்கக் காரணமே, எங்கே உன்னைக் காதலிச்சு என்னைப் பத்தி விஷயம் தெரிஞ்ச பிறகு நீ என்னை விட்டுப் போயிடுவியோனுதான். பெத்தவங்க அவங்கவங்க விருப்பப்படி போயிட்டாங்க. ஊரைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு அனாதை. ஆனா எனக்குத்தான் தெரியும் என் பெத்தவங்க பண்ண அசிங்கம் என்னன்னு. ரெண்டு பேரும் பணக்கார வீட்டுப் பசங்க.
கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமும் அவங்களுக்கு இருந்த தப்பான சகவாசத்தில், எங்க அம்மா இன்னொருத்தரை கூட்டிட்டு வந்து ரூம்ல இருக்கிறது, எங்க அப்பா இன்னொரு பொம்பளை கூட உல்லாசமாக இருக்கிறதுதான் என் கண்ணு முன்னாடிப் பார்த்து இருக்கேன். அதுக்கப்புறம் மொத்தமா உறவுகளை முறித்துக்கொண்டு ரெண்டு பேரும் பிரிஞ்சு போயிட்டாங்க.
இப்ப அவங்க எந்த நாட்டுல இருக்காங்கன்னு கூடத் தெரியாது. எங்க அம்மா அவங்க சொத்துக்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. எங்க அப்பா அவரோட சொத்துக்களை எடுத்துட்டுப் போயிட்டாரு. பரம்பரைச் சொத்துல எனக்குன்னு வர வேண்டிய பங்குதான் எனக்குக் கிடைச்சது. நான் மேஜரான பிறகு பிசினஸ் ஆரம்பிச்சேன். போகப்போக என்னோட சொத்துக்களை நான் அதிகரித்துக்கொண்டேன். அவ்வளவுதான் எனக்கான வாழ்க்கை. ரொம்ப வெறுப்பு யோகிதா. அதனால்தான் கல்யாணம் பண்ணிக்காம இப்படிப் போயிடலாம் அப்படின்னு முடிவு பண்ணேன்.
அதெல்லாம் உன்னைப் பார்த்த பிறகுதான் வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அதனால்தான் இங்க டீச்சர் வேலைக்கு வந்தேன். வந்த உடனே நீ என்னை மயக்கிட்ட. அப்போ மயங்கினவன்தான் இன்னும் மடியில் இருக்கேன்” என்று சொல்லிச் சிரிக்க, அவனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள் யோகிதா.”சரி விடுங்க, நான் இவ்வளவு தைரியமா இருக்கக் காரணம் உங்க கண்ணுல நான் பார்த்த காதல். அதுமட்டுமில்லாம முதல் ஸ்கேன் எடுக்கும்போது நீங்க அடைந்த சந்தோஷத்தை நான் பார்த்தேன். அப்போ முடிவு பண்ணேன், நிச்சயம் நீங்களே என்னைத் தேடி வருவீங்க அப்படின்னு.
இதோ நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணமும் ஆயிடுச்சு. இனிமே பழைய விஷயத்தைப் பத்தி யோசிக்க வேண்டாம். நீங்க, நான், நம்ம பாப்பா என மூணு பேரும் இருக்கோம்” என்று சொல்லி கணவன் தோளில் சாய, அவளை வாரி அணைத்துக்கொண்டான்.
இங்கே இனியன் கொடுத்த அடிக்குச் சுருண்டு கீழே விழுந்து கிடந்தாள் இசை.