ரத்னவள்ளி பேரதிர்ச்சியாக நின்று கொண்டிருந்தார். தென்னரசு சொன்னது, “உன் மகள் என்னைத் தவிர யாராலும் திருமணம் செய்து கொள்ள முடியாது, முடிந்தால் அழைத்துச் செல்” என்று. ரத்தினவள்ளி தன் மகளைப் பார்த்தார்.
“என்னடி சொல்றான்? இவனைத் தவிர உன்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதா? அப்படி ஒரு காதலா அவன் மேல? அவன் உன்னை ஏமாத்தினவன். டேய் அரசு, உனக்கு அப்படியே உன் அப்பா புத்தி, தாத்தா புத்தி… மனுஷங்களுக்கு உணர்வு இருக்கும்னு புரிஞ்சுக்காத மிருகம் நீ! இந்த மாதிரி ஒருத்தனுக்கு என் பொண்ணைக் கொடுக்க முடியாது, போடா! நல்லவனாப் பார்த்து என் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பேன்,”
என்று சபதம் போட்டார்.
“ஐயோ என் உடன்பிறப்பே! என்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை. உன் பொண்ணை உன் மேல சத்தியம் பண்ணிச் சொல்லச் சொல்லு, அப்புறம் இங்கிருந்து போங்க,” என்று மிகவும் திமிராகப் பேசினான் அரசு. “இங்க பாரு வைஷு, முடிவைச் சொல்லு. நீ என்ன முடிவெடுத்தாலும் அம்மா உனக்குத் துணையாக இருப்பேன்,”
என்று வள்ளி தன் மகளுக்கு ஆறுதல் சொன்னார்.வைஷ்ணவி, “நீ எப்படி ஒருத்தரை நேசிச்சு, அவரை மட்டுமே கல்யாணம் பண்ணி வாழ்ந்தியோ, அந்த மாதிரிதான் என்னாலயும் இருக்க முடியும். அவர் என்னை ஏமாற்றி இருக்கலாம், ஆனா நான் அவரைத்தான் விரும்புறேன், விரும்பிக்கிட்டு இருக்கேன். இனி அவரைத் தவிர எனக்கு யாரும் இல்லை. பழகுனது கொஞ்ச நாள்தான், ஆனா எனக்கு அரசு மாமாவைத்தான் ரொம்பப் பிடிக்கும்,”
என்று திரும்பி அவனைப் பார்த்துச் சொல்லிவிட்டாள்.”சரிம்மா, அப்படியே ஆகட்டும். அம்மா, உன்னோட பேத்தி உனக்கே மருமகளா வரப்போறா… கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் சும்மா ஒன்னும் என் பொண்ணை அனுப்பப் போறது இல்லை. அவளுக்கான்னு சேர்த்து வச்சது நிறைய இருக்கு. அப்புறம் ஒன்னும் இல்லாம பொண்ணைக் கூட்டிட்டு வந்து விட்டுட்டான்னு சொல்லக் கூடாது,”
என்று தன் மகளுக்காகத் தன் கௌரவத்தை விட்டு ரத்தினவள்ளி தைரியமாகப் பேசினார்.”பொண்டாட்டிக்குச் சாப்பாடு போட்டு அவளை நல்லாப் பார்த்துக்கறதுக்கு மாமனார் மாமியார் வீட்டுச் சீதனம் எனக்குத் தேவையில்லை. நான் அப்படி ஒன்னும் இல்லாதவன், கையால ஆகாதவன் கிடையாது. என்னால என் பொண்டாட்டியப் பார்த்துக்க முடியும். சீக்கிரம் கல்யாணத்துக்கான ஏற்பாடெல்லாம் பண்ணுங்க. ஏய் புள்ள! போ மேலே ஒரு ரூம் இருக்கு, அங்க போய் ஓய்வு எடு,”
என்று அவளை அதிகாரம் செய்து அனுப்பினான் அரசு. ராக்காயி தனது பேத்தியை அழைத்துக்கொண்டு அறைக்குச் சென்றுவிட்டார். ரத்தினவள்ளி இதன் பிறகு என்ன செய்ய முடியும் என்று அமைதியாகத் திருமண ஏற்பாட்டு வேலைகளைத் தன் ஊர் மக்களோடு செய்து கொண்டிருந்தார்.”எப்படியோ ரொம்ப வருஷம் கழிச்சு உன்னைப் பார்க்கிறோம். நீ நல்லாதான் இருக்க. நாங்க எல்லாரும் இந்த ஊர்ல இருக்கிற காட்டுமிராண்டிப் பயல்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்படுறோம். எங்க பொண்ணுங்களைக் கூட நாங்க வெளியூருக்குத்தான் கட்டிக் கொடுக்கிறோம், இந்த ஊர்ல வச்சுக்க முடியாது.
நீ டவுன்ல இருந்துட்டு எப்படித்தான் உன் பிள்ளையை இங்கே கொடுக்க மனசு வந்ததோ?” என்று சக கிராமப் பெண்கள் அனைவரும் கேட்டனர். “எல்லாம் என் பொண்ணோட விருப்பம்தான். அவளால வாழ முடியும். அவளுக்கு வற்றாத செல்வமான கல்வி இருக்கு, அது போதும்,” என்று அமைதியாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் ரத்தினவள்ளி. அதன் பிறகு யாரும் எதுவும் பேசவில்லை.இப்படி நடந்தவை அனைத்தையும் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்த வைஷ்ணவிக்கு, இன்னும் சிறிது நேரத்தில் தனக்குத் திருமணம் என நினைக்கும் போது அவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. காதலித்தாள், ஆனால் ஒன்றாகக் காதலிக்கவில்லையே…
அவன் தன்னை ஏமாற்றி இருக்கிறான் என்பதுதான் அவள் மனதில் வந்து கொண்டே இருந்தது. அப்பொழுது யாரோ அறைக்குள் வருவது போல் இருந்தது, அரசு தான்! அறைக்குள் வந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டான். ஆனால் வைஷ்ணவி எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக உணர்வற்ற நிலையில் அமர்ந்திருந்தாள்.”என்ன புள்ள? எப்படியோ இந்தக் காட்டுப் பையன் உன்னை ஏமாத்திட்டான். கல்யாணத்துக்கு அப்புறம் கூட இருக்கிற மாதிரி இருந்துட்டு, அப்புறம் ஓடிப்போயிடலாம்னு மட்டும் பிளான் பண்ணாத. விட்டுட்டுப் போகிற நினைப்பு மட்டும் வச்சுக்காத புள்ள. எனக்கு என் கௌரவம் ரொம்பவே முக்கியம்.
நீ யாருன்னு எனக்குத் தெரியாம இருந்தா நீ இந்நேரம் இங்கே இருந்திருக்க மாட்டே. இந்த குடும்ப மானத்தை வாங்கிட்டு அத்தனை பேரும் முன்னாடி அவமானப்பட்டு நின்ன என் தாத்தா, எங்க ஐயா ரெண்டு பேருக்கும் மறுபடியும் பேரை மீட்டுக் கொடுக்கிற மாதிரிதான் இப்ப நமக்குக் கல்யாணம் நடக்குது. அதே சமயம் சின்ன வயசுல எங்க அம்மாவுக்குப் பிறகு என் அக்கா தான் என்னைத் தூக்கி வளர்த்தது. அக்காவோட சொந்தம் எனக்கு வேணும்னு நினைச்சு இப்படிப் பண்ணினேன்னு கூட வச்சுக்கலாம்.
ஆனா ஒன்னு, நான் இந்த காலத்து ஆம்பளைங்க மாதிரி கிடையாது. பொண்டாட்டிகூட பழகுற மாதிரி எனக்கு எப்பவுமே பொண்டாட்டி எனக்குக் கீழேதான் இருக்கணும். நான் சொல்றதெல்லாம் செய்யணும், வீட்ல இருக்க எல்லா வேலையும் பார்க்கணும், புருஷனுக்குச் சேவை செய்யணும்.
எனக்கு அதெல்லாம் வேணும். விருப்பம் இருந்தா இரு, இல்லனா போன்னு சொல்ற ஆள் நான் கிடையாது; நீ அப்படி இருந்துதான் ஆகணும். இந்தா, இது காஞ்சிபுரத்திலிருந்து வரவழைச்ச புடவை, உன் நிறத்துக்கு நல்லா இருக்கும்,” என்று மஞ்சள் நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த ஒரு பட்டுப்புடவையைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.இரண்டு மணி நேரம் கழித்து சில பெண்கள் வந்து சடங்குப்படி அவளுக்கு மஞ்சள் நீராட்டுச் சடங்கெல்லாம் செய்து முடித்தனர்.
அரசு கொடுத்த அந்தப் பட்டுப்புடவையை எடுத்து அவர்கள் கிராமத்து முறைப்படி வித்தியாசமாகக் கட்டிவிட்டு, அவளுக்கு மலர்களால் அலங்காரம் செய்து, நேரம் வரும் வரை அங்கேயே இருக்கும்படி சொன்னார்கள். அதே சமயம் திருமண வீட்டிற்குள் ஊர் தலைவரான சுந்தரம், அவர் மனைவி மற்றும் அவர்களது மகள் மீனாட்சி மூவரும் வந்தனர். மணப்பெண்ணைப் பார்ப்பதற்காக மீனாட்சியும் அவள் அம்மாவும் அறைக்குள் வர, மணப்பெண்ணைப் பார்த்து மீனாட்சிக்கு பேரதிர்ச்சி!”ஹே வைஷ்ணவி! நீங்களா? அம்மா, இவங்க கூடத்தான் நான் சென்னையில ரூம்ல இருந்தேன்.
இவங்கதான் தென்னரசு கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணா? வைஷ்ணவி, உங்களுக்குக் கல்யாணம்னு ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே? நேத்து கூட நீங்க அந்த மாதிரி எதுவும் சொல்லலியே!” என்று சொன்னவுடன், அப்போதுதான் வைஷ்ணவி மீனாட்சியைப் பார்த்தாள்.”நான் ஏமாந்துட்டேன் மீனு,” என்று நடந்தவை அனைத்தையும் சொல்லி முடித்தாள். “அடக்கடவுளே! அவர் சென்னைக்கு வந்தப்போ நான் கவனிக்கலையே…
நீங்க அவர்கிட்ட பேசிப் பழகி இப்போ இந்த நிலை வரைக்கும் வந்துட்டீங்க. ஆனா கடைசியில் அவர் உங்க மாமாவா? மாமா… நீங்க நினைச்சா கல்யாணத்தை நிறுத்திட்டுப் போயிருக்கலாமே? எதுக்கு அவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிருக்கீங்க?” என்று மீனாட்சி கேட்டாள்.”நான் அவரை விரும்பிட்டேன் மீனு. வாழ்க்கையில காதல் ஒருமுறைதான் ஒருத்தர் மேல வரும். அந்த ஒருத்தர் என்னோட மாமாவா இருக்காரு. அவரே என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றாரு, அப்ப நான் யாரைக் கல்யாணம் பண்ணிக்க முடியும்? எனக்கு அவரைத்தான் பிடிக்கும். அவர் என்னை எப்படிப் பார்த்துக்கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் அவருக்கு உண்மையா இருப்பேன்,”
என்று சொன்னாள் வைஷ்ணவி.மீனாட்சியின் அம்மா, “இங்க பாருடி, இந்த காலத்துல இந்த பிள்ளைங்க எப்படி இருக்கு? மெட்ராஸ்ல படிச்ச புள்ள எப்படி இருக்கு? கிராமத்துல பிறந்த பொண்ணுங்கதான் ரொம்பப் பண்றீங்க. உனக்கும் நல்ல மாப்பிள்ளைதான் பார்த்திருக்கு, அவர் கூட அன்யோனியமா வாழப் பாரு. இங்க பாரு தென்னரசு பொண்டாட்டி, என் பொண்ணுக்கும் இன்னும் பத்து நாளில் கல்யாணம் ஏற்பாடு பண்ணியிருக்கு. கல்யாணமான புது ஜோடிகளா எங்க பொண்ணு கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வந்தே ஆகணும். அப்புறம் என் வீட்டுக்காரர் இன்னும் கொஞ்ச நேரத்துல ஒரு புது அறிவிப்பு தரப்போறாரு. முகூர்த்த நேரம் வரட்டும்,” என்றார்.
கோவில் பூசாரி மணமகளை அழைத்து வரச் சொல்ல, மீனாட்சி வைஷ்ணவியை அழைத்துச் சென்றாள். வைஷ்ணவி மனதில் ஒன்றே ஒன்றுதான் – தன் மனதில் காதல் என்று வந்தது அதிரவன் மீதுதான், ஆனால் அவன் மனதில் காதல் இல்லை, பெரும் காமம் மட்டும்தான் இருக்கிறது. இப்படி இருப்பவனை எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று விரக்தியாகப் பெருமூச்சு விட்டாள்.ஊர் எல்லை அம்மன் கோவில் வளாகத்தில் திருமண ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனைவரும் அங்கே ஒன்று கூடியிருந்தனர். ஊர் தலைவரான சுந்தரம் தாலிக் கயிறு எடுத்துக் கொடுக்க, அதைத் தென்னரசு வைஷ்ணவி கழுத்தில் கட்டினான்.
ரத்தினவள்ளி ஒரு பக்கம் தன் மகள் குடும்பத்தோடுதான் இருக்கிறாள் என்று மகிழ்ச்சியடைந்தாலும், ஒரு முழுமையான நல்வாழ்வை தன் மகள் வாழ முடியுமா என்ற கவலையில் கண்ணீரோடு ஆசீர்வதித்தார்.பிறகு சுந்தரம் ஜனங்களுக்கு முன்பாக வந்து, “கிட்டத்தட்ட 20 வருஷமா ஊர் தலைவர் பதவியை எங்க அப்பாவும் நானும் தக்க வச்சு நல்லபடியா இந்த ஊரை நடத்திக்கிட்டு வர்றோம்.
இனிமே இந்த ஊர் தலைவர் பதவியை என்னால பார்த்துக்க முடியாது. இதோ நம்ம தென்னரசு… பரம்பரை பரம்பரையா இவங்க குடும்பம்தான் இதைப் பார்த்துட்டு இருக்கு. இவங்க தாத்தாவும் அப்பாவும் செஞ்ச சில விஷயத்தால் பதவி கைமாறுச்சு, ஆனா நம்ம அரசு அப்படி இல்ல. நல்லா படிச்சிருக்கான், நல்ல வேலையில இருக்கான், இப்ப அவனுக்கும் குடும்பம் வந்தாச்சு.
அதனால இந்தப் பொறுப்பை அவன் கையில கொடுக்கலாம்னு இருக்கேன். எனக்கு இருப்பது ஒரே பொண்ணு, அவளையும் கல்யாணம் கட்டிக் கொடுத்துட்டா, மகள் வீட்டுக்கும் எங்க தோட்டத்துக்கும் எனக்கு நடமாட சரியா இருக்கும். அதனால இந்த பதவியை நான் இன்னையோட முடிச்சுக்கிறேன்,” என்று சொல்லிவிட்டுத் தன் கையில் இருக்கும் ஊர் தலைவருக்கான காப்பை எடுத்து அரசு கையில் மாட்டிவிட்டார்.அவ்வளவுதான்! அரசுக்குத் தன் கையை விட்டுப் போன குடும்ப மானம் மீண்டும் கிடைத்தது போல் ஒரு உணர்வு.
மீனாட்சியைத் திருமணம் செய்திருந்தால் கூட இப்படி ஒரு மகிழ்ச்சியான தருணம் நடந்திருக்குமா என்று தெரியாது. ஆனால் மீனாட்சியைப் பார்த்த பிறகு அவள் மீது எந்த ஒரு உணர்வும் தனக்கு வரவில்லை என்றுதான் அவனுக்குத் தோன்றியது. அதே சமயம் தன் அருகில் பொம்மை போல் இருக்கும் வைஷ்ணவியை ஒருமுறை பார்த்து, அவள் கரங்களை அழுத்தமாகப் பிடித்து, “நீ வந்த ராசிதான் புள்ள,” என்று மென்மையாகச் சொன்னான். வைஷு எதுவும் சொல்லாமல் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
,,,,,,,,,,
இங்கே ஒருவனுக்கு மீனாட்சிப் பைத்தியம் பிடித்திருந்தது. “போடி, எங்கே போகப் போற?” என்று அவள் கோபமாகச் சென்ற பிறகு கண்டுகொள்ளாதவன், அவள் அலுவலகம் வராதது கண்டு தவித்தான். அதுவும் அவள் ஊருக்குச் சென்றிருக்கிறாள் என்று தகவல் வந்ததும் அவனுக்குக் கோபம் அதிகமானது. “என்னை விட்டுப் போற அளவுக்கு உனக்குத் திமிர் வந்துடுச்சா?
எவ்வளவு நாள் உன்னால தனியா இருக்க முடியும் மீனு? சீக்கிரம் என்கிட்ட வந்துதான் ஆகணும். இந்த பைத்தியக்காரத்தனமான காதல், கல்யாணம், குழந்தைங்கன்னு எந்த கமிட்மென்ட்டும் இல்லாம நீயும் நானும் பீஸ்ஃபுல்லா ஒரு லைஃப் வாழணும்… அதுக்காகத்தான் நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரமா நீ என்னைத் தேடி வருவ மீனு,” என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டான்.இன்னும் பத்து நாட்களில் மீனாட்சி வேறு ஒருவனுக்குச் சொந்தமாகப் போகும் விஷயத்தைக் கேள்விப்பட்ட பிறகு அவன் என்ன ஆவானோ?—