Home ANTIHEROஅத்தியாயம் 16

அத்தியாயம் 16

by sreejanovels
317 views

வீட்டில் பிரச்சனை ஓய்ந்த பிறகு அருண்குமார் மாலை நேரத்தில் ராதா உணவகத்திற்குச் சென்று ஒரு காபி ஆர்டர் செய்து குடித்துக் கொண்டிருக்க, எதிர்பாராத விதமாக அங்கே எப்போதும் வாரத்துக்கு ஒருமுறை ரவுண்ட்ஸ் வரும் ராதா, அங்கே இருக்கும் அருண்குமாரைப் பார்த்து ‘எதற்காக இவர் இங்கே வரவேண்டும்’ என்று மனதில் அவரைத் திட்டிக் கொண்டு தன் வேலையைக் கவனிக்கச் சென்றார்.

அனைத்தும் முடிந்த பிறகு அருகில் இருக்கும் சிற்றுண்டி உணவகத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஓய்வுக்காக பின்பக்கம் இருக்கும் கார்டன் ஏரியாவில் அமர்ந்திருக்க, அவர் பின்னே தன் வலிய கரத்தை வைத்து அழுத்தமாகப் பிடித்து,”ராதுமா…”என்று ஆசையாக அருண்குமார் அணைக்க, தொடுகையை வைத்தே யார் என்று கண்டுபிடித்த ராதா, சிலை போல் அப்படியே இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

அவரின் புறக்கணிப்பு அவருக்குப் புரிந்தாலும், பொம்மைக்கு ஆசைப்படும் குழந்தை போல் அவரிடமே சுற்றிச் சுற்றி வந்தார்.”ராதா, நீ இப்ப என்மேல கோவமா இருக்கன்னு எனக்கு நல்லாவே தெரியுது. என் பக்கம் இருக்கும் நியாயத்தை என்ன சொல்ல விடு. அப்புறம் தெரியும் நான் எந்த மாதிரி சூழ்நிலையில உன்னை விட்டு வந்தேன் அப்படின்னு. நான் தப்பு பண்ணிட்டேன். ‘யார் எப்படி போனா எனக்கு என்ன?’ அப்படின்னு உன்னையும் நம்ம பையனையும் விட்டுட்டு இருக்கக் கூடாது.

நான் பண்ண தப்புக்குப் மன்னிப்புக் கிடையாது, ஆனால் செய்த செயலுக்குக் கர்மா நிச்சயம் கிடைக்கும். அதை அனுபவித்துக் கொண்டு நிற்கிறேன். உனக்கு நான் என்ன செய்தேனோ அதேதான் இப்போ என் மகளுக்கும் நடந்திருக்கு. யாருன்னு தெரியல, அவள் விரும்பி இருக்கா போல. இப்போ கர்ப்பமாகி வந்து நிற்கிறாள்.

என்னன்னு கேட்டா, ‘ரெண்டு பேருக்குள்ள சண்டை, பிரிஞ்சி இருக்கோம்’ அப்படின்னு சொல்றா.”என்று சொன்னவுடன் ராதாவுக்குக் கவலை ஆகிவிட்டது. அருண்குமார் விட்டு விலகி இருந்தாரே தவிர, அவர் நன்றாக இருக்கக் கூடாது என்று அவருக்குச் சாபம் அளிக்கவில்லை. இப்பொழுது அவர் மகளுக்கும் தன்னைப்போல் நிலை வந்து விட்டது.

தன்னுடைய அப்பா துடித்தாரே, அதேதானே ஒரு தந்தையாக இவரும் துடித்து இருப்பாரே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்க, அதே சமயம் அருண்குமார் பின்பக்கத்தில் இருந்து,”உங்களுக்கு வந்தா ரத்தம்; எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? உன்னோட பொண்ணு ஏமாந்து போய் நிற்கும் போதுதான் எங்க அம்மா ஞாபகம் வந்ததா? எந்தத் தைரியத்தில் நீ இங்க வந்த?”என்று சீறிக் கொண்டு, அருண்குமார் சட்டையைப் பிடித்து அவரை அடிக்கப் பாய்ந்து விட்டான் விமல்.மகனின் குரல் கேட்டுத் திடுக்கிட்ட ராதா, திரும்பிப் பார்க்க, அவர் சட்டையைப் பிடித்து அடிக்க ஓங்கியவனேப் பிடித்துத் தடுத்து,”கண்ணா, அம்மா சொன்னதைக் கேளு. அவர் என்ன வேணாலும் பேசிட்டுப் போகட்டும்.

நான் அதையெல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டேன். தன் பக்கம் நியாயத்தைத்தான் எல்லா மனுஷங்களும் பேசுவாங்க. அடுத்தவங்க கஷ்டம் நமக்கு தேவையில்லாதது. நீ வா, நாம போகலாம்.”என்று மகனைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல, விமல் முறைத்துக் கொண்டு சென்றான். அருண்குமாருக்குப் பெருமையாக இருந்தது. அச்சில் வார்த்தது போல், தன்னைப் போல் இளம் வயதில் காணப்பட்டான் விமல்.”நீயும் அம்மாவும் கூடிய சீக்கிரம் என்னை புரிஞ்சிப்பீங்க.

எனக்கும் என் மகளுக்கும் நீங்க துணையாக இருக்கக் கடவுளிடம் வேண்டுகிறேன்.”என்று சத்தமாகக் கத்திக் சொல்ல, அது இருவரும் காதிலும் விழுந்தாலும், அமைதியாக அங்கிருந்து சென்று விட்டனர்.***இனியன் தனது அறையில் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, அவன் அறைக்குள் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தாள் இசை. ஒரு முடிவோடு அறைக்குள் நுழைந்திருக்கிறாள்.

அனுமதி கேட்பவளைப் பார்க்காமலே யார் என்று தெரிந்து கொண்டவர், உள்ளே வருமாறு உத்தரவிட்டார். அவளும் கைகளைப் பிசைந்தவாறு அவர் முன் நிற்க, ஏதோ பகிரங்கமான ஒரு முடிவை எடுத்திருப்பார் என்றுதான் அவள் நினைத்திருந்தாள்.எதுவும் பேசாமல் அமைதியாக நிற்பவளைப் பார்க்கப் பார்க்கக் கடுப்புதான் வந்தது அவனுக்கு. பொறுமையுடன்,”நீங்க வந்த விஷயத்தைச் சொன்னா நல்லா இருக்கும்.”என்று சொன்னவுடன், பொறுமையாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, எதுவா இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன்,”நான் பொறுமையா யோசிச்சு முடிவு பண்ணியிருக்கேன்.

முதல் கட்டமே நமக்கு ரொம்ப மோசமா அமைஞ்சு போச்சு. காதல் ஆரம்பிப்பதற்கு முன் தேவையில்லாத தகராறு நமக்குள்ள. அது போதாதுன்னு சில பல பர்சனல் காரணத்துக்காக நான், நமக்குள்ள இருக்கிற உறவு முறையில் இருந்து விடுபடலாம்னு இருக்கிறேன்.”என்று அவள் பயந்து பயந்து சொல்ல, ஆனால் அங்கே இருப்பவனோ எந்த ஒரு உணர்வும் காட்டாமல்,”ஓகே… ஓகே. ஒரு உறவு முறையைத் தேர்ந்தெடுப்பது நமக்குள்ள தான் இருக்கு. உனக்குப் பிடிக்காத போது நான். உன்னைக் கட்டாயப்படுத்தி சினிமா ஹீரோ மாதிரி சீன் காட்ட விரும்பல.

அதுக்காக உன்கிட்ட சண்டை போட்டு என்னுடைய எனர்ஜியை வீணடிக்கவும் விரும்பல. இனி உன்னோட டீச்சர் வேலையை மட்டும் பார்த்தா போதும். ஓகே, கிளம்பலாம்.”என்று சொன்னவுடன், அவளுக்குத்தான் பல்பு போனது போல் முகம் கருத்துப் போனது. ஏதாவது கேட்பான், சண்டையிடுவான் என்று நினைத்தால், எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறான்.

அவள் இப்படி ஒரு முடிவெடுக்கக் காரணம், நேற்று விமல் கோபமாக அவள் இருக்கும் அப்பார்ட்மென்டிற்கு வந்ததுதான். உடன் ராதாவும் வர, என்ன நடந்தது என்று கேட்டதற்கு, நடந்தவை அனைத்தையும் சொல்லி முடிக்க, ஏற்கனவே ஒருமுறை அருண்குமாரைப் பள்ளிக்கூடத்தில் சந்தித்திருக்கிறாள். அந்த அருண்குமார்தான் தன் சித்தியைக் ‘காதல்’ என்ற பெயரில் விட்டுச் சென்றவர் என்று புரிந்து கொண்டவளுக்குப் பயம் வந்துவிட்டது.

எங்கே தாய்மாமனைப் போல் இவனும் தன்னை விட்டுச் சென்று விடுவானோ என்று, அந்தப் பயம்தான் ‘உறவு முறையே வேண்டாம். இல்லை என்றால், தர்மசங்கடம் குடும்பத்திற்குத்தான்’ என்று ஒரு முடிவெடுத்தவள் இங்கு வந்து நின்றாள். இவன் ஏதாவது கேட்பான் என நினைக்க, அதுவும் நடக்கவில்லை. இதற்கு மேல் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று அங்கிருந்து சென்று விட்டாள்.

அமைதியாகச் சென்று கொண்டிருப்பவளைப் பார்த்து மர்மமாகச் சிரித்தவன்,”உன்னைத் தொல்லை பண்ண மாட்டேன். உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால், உன்னோட குடும்பமே ‘என்னோட பொண்ணைக் கட்டிக்கோங்க’ அப்படின்னு என் கால்ல விழாத குறை கேட்கப் போறாங்க. பார்க்கத்தானே போற?”என்று மனதில் ஒரு திட்டத்தை வைத்துத் தன் வேலைகளைக் கவனிக்கப் பார்த்தான்.

இங்கே வழக்கம்போல் பிசினஸ் மீட்டிங்கை முடித்துவிட்டு இரவு டின்னரை அந்த உயர்தர நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த செழியன் மற்றும் அம்பை இருவரும் ஒரு மகிழ்ச்சிகரமான முடிவெடுத்தனர்.”பேபி, நமக்கான நேரம் வந்தாச்சு. போதுமான அளவுக்குக் காதல் பண்ணியாச்சு. இனி மேரேஜ் தான். இதுக்கு மேல தாமதிக்க முடியாது. சரி, எங்க வீட்ல ஆல்ரெடி சொல்லியாச்சு.

நீதான் பட்டு, வீட்ல சொல்லி அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கணும்.”என்று சொல்ல,இசை மகிழ்ச்சியுடன் அவனைப் பார்த்து,”இதற்கான சமயம் எனக்கு வரும்னு ஆல்ரெடி தெரியும். அதனாலதான் அம்மா கிட்டயும் சொல்லியாச்சு. அவங்க பொறுமையா தாத்தா கிட்ட எடுத்துச் சொல்லி அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கலாம்னு நாங்களும் பிளான் பண்ணியாச்சு. சீக்கிரமா நம்ம மேரேஜ் பண்ணப் போறோம்.”

என்று மகிழ்ச்சியோடு அவன் கரங்களைப் பிடித்துக் கொண்டு காதலாகப் பார்க்க, அவனும் மகிழ்ச்சியாக அவளைப் பார்த்துக் கண்ணடிக்க, இருவரும் மேலும் மேலும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர்.காதல் ஜோடி விஷயத்தை ஆரப் போடாமல் விரைவாக வீட்டில் எடுத்துச் சொல்ல, குடும்பத்தார்களுக்கு மகிழ்ச்சி. முறைப்படி ஆலயத்தில் மதன், தென்றல், சிவகாமி பாட்டி, அருண்குமார் அனைவரும் இருக்க, மறுபக்கம் தென்றல், அவளது தாய், தந்தை, தாத்தா மூவரையும் அழைத்து வர, குடும்பமாகப் பேசி முடிவெடுத்தனர்.

அருண்குமார், ராதா வருவார் என்று எதிர்பார்த்தார். ஆனால், அவர் வரவில்லை.அம்பை தன் காதலிக்கும் நபரைப் பற்றி ராதாவிடம் தெரிவிக்கும் போது மொத்த விவரம் சொல்லிவிட, அதனால் சபையில் பிரச்சனை வேண்டாம் தன்னால் என்று விலகிக் கொண்டார் ராதா.ராதா, அருண்குமாரைப் பற்றி குடும்பத்தாரிடம் தெரிவித்ததில்லை. வெறும் இசை, தனது மகன் விமலுக்கு மட்டுமே இந்த விஷயம் தெரியும் என்பதால், பிரச்சனை இல்லாமல் திருமணப் பேச்சு ஆரம்பித்தது.”கல்யாணம் வேண்டாம் வேண்டாம் அப்படின்னு சொல்லி நாட்களைக் கடத்திக் கொண்டு இருந்தான்.

நான் கூட என் பையன் கல்யாணத்து மேல விருப்பமில்லாமல் இருக்கிறானோ அப்படின்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன். நல்ல வேலை, மகாலட்சுமி மாதிரி உங்க பொண்ணை விரும்பி இருக்கான். அதனாலதான் என் பையன் இவ்வளவு நாள் தள்ளிப் போட்டு இருக்கான். விஷயத்தைப் தட்டி கழிக்க வேண்டாம். முடிவைச் சீக்கிரம் எடுத்திடலாம். வரும் முகூர்த்தத்தில் கல்யாணத்தை வெச்சுக்கலாம். அதுக்கு முன்னாடி நம்ம ரெண்டு குடும்பமும் சிம்பிளா இங்கேயே பார்க்க வெற்றிலை மாலை மாற்றிக்கலாம்.

இதுக்கு ஒரு ஃபங்க்ஷன், அதுக்கு ஒரு ஃபங்க்ஷன் பசங்களுக்கு அலைச்சல். அந்த செலவு பண்ற காசுல கோவில்லயோ இல்லைனா அனாதை ஆசிரமத்திலயோ அன்னதானம் பண்ணிக்கலாம். என்ன சொல்றீங்க?”என்று தென்றல், மகன் திருமணத்திற்கு எப்படிப் பேச வேண்டும், என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்று அனைத்தையும் மறைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகச் சொல்லிவிட, அவரின் வெளிப்படையான பேச்சில் மகிழ்ந்து போன அம்பையின் பெற்றோர்கள்,”உங்களைப் மாதிரி நல்ல குடும்பத்துக்கு என்னோட பொண்ணை கொடுக்கிறது எனக்கு ரொம்பச் சந்தோஷம் சம்மந்தி.

கடவுள் சன்னிதானத்தில் சொல்கிறேன். என்னோட மகள் அம்பை, உங்க மூத்த மகன் செழியனுக்கு நீங்க சொன்ன முகூர்த்தத்தில் கல்யாணத்துக்கான ஏற்பாடு பண்ணலாம். ஏற்கனவே எங்க பொண்ணுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று தயார் பண்ணி வச்சிருக்கோம்.”என்று கோவில் மண்டபத்தில் ஓரமாக அமர்ந்து குடும்பத்தார்கள் திருமணப் பேச்சு பேச, அங்கே காதல் ஜோடிகள் ஓரமாக அமர்ந்து கொண்டு வருங்காலத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் இனியன் அங்கு வந்துவிட,”இதோ, இவன் தான் சம்மந்தி, எங்களுடைய இளைய மகன். எங்க ஸ்கூல் பிரின்சிபல்.

இவனுக்கும் வரம் தேடலாம்னு பார்த்தோம். இவனும் ‘ஒரு பொண்ணை விருப்பப்பட்டு கல்யாணம் பண்ண அவள தான் பண்ணுவேன்’ அப்படின்னு சொல்லிட்டு இருக்கான். ஆனா, அந்தப் பொண்ணைப் பத்தி இப்போ வரை ஒரு தகவலும் இல்லை.”என்று பெரியோர்கள் கவலையாகச் சொல்ல, அம்பையின் தந்தை அவனைப் பார்த்து,”தம்பி, அம்மா, அப்பா இவ்வளவு கேக்குறாங்களே, நீங்க விருப்பப்படுற பொண்ணைப் பத்தி சொன்னீங்கன்னா உங்களுக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணுவாங்களே? உனக்கும் உங்க அண்ணனுக்கும் அவ்வளவு வயசு வித்தியாசம் இல்லையே.

ஒரே வயசுதானே? சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோப்பா. அனுபவத்தில் சொல்கிறேன். மனைவி ஒருத்தி இருந்தா தான் கணவனோட வாழ்க்கை சீரான நேர்கோட்டில் போகுது. என்னோட முதல் வாழ்க்கை ரொம்பவே தடுமாறிப் போச்சு. அதுக்கப்புறம் இவ வந்த பிறகு என் வாழ்க்கை மறுபடியும் சீராக அமைந்திருந்தது.

என்னோட மூத்த மகளும் சரி, இளைய மகளும் சரி, பாரபட்சம் இல்லாமல், மாற்றான் தாய் பிள்ளை இல்லாம, கூடப் பிறந்த சகோதரி மாதிரி இருக்கக் காரணம் என்னோட மனைவியோட அன்புதான். உங்களுக்கும் நல்ல பொண்ணு கிடைப்பா. சரியான பொண்ணைப் பத்தி விவரம் சொன்னீங்கன்னா, நாங்களும் அதைப் பத்தி பேசலாம் இல்ல.”

என்று அவர் ஆர்வமாகக் கேட்க,இனியன் சிரித்துக் கொண்டே இசை பெயரை மட்டும் சொல்லாமல், தங்களுக்குள் நடந்த காதல் மற்றும் ஊடல் பற்றி விவரமாக மட்டுமல்லாமல், அத்துடன் இசையின் மீது சில பல பழிகளைப் போட்டு, தன்னை நல்லவன் என்று காண்பிக்க பல புரட்டுகளைச் சொல்லி முடிக்க,அதுவும் ஜமுனா பெற்ற மகள் என்று தெரியாமல்,”இப்ப இருக்குற பொண்ணுங்க எல்லாம் காதல் என்கிற விஷயத்தைப் பொழுதுபோக்கா பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. ஒரு சீரியஸ்னஸ் தெரியல.

பழகிப் பார்ப்பாங்களாம், அப்புறம் ‘செட் ஆகாது’ அப்படின்னு கிளம்பிடுவாங்களாம். அப்ப இந்த பையன் மனசுல ஆசையை விளைவிச்சுப் போனதெல்லாம் தப்பில்லையா? இந்த மாதிரி என் பொண்ணுங்க மட்டும் பண்ணி இருந்தாங்க, பொண்ணு கூடப் பார்த்து இருக்க மாட்டேன். அவ்வளவுதான், பிச்சுப் போட்டு இருப்பேன். ஆனா, என்னோட ரெண்டு பொண்ணுங்க சொக்கத்தங்கம்.”

என்று மகளைப் போற்றிப் புகழ் பாடி முடிக்க, இனியனுக்குச் சிரிப்புதான் வந்தது.’ஆத்தாடி, மாமியார் பெயர் சொல்லாமலேயே இப்படிப் பேசுறாங்களே! இது அவங்க பெத்த மகராசி விஷயம் தெரிஞ்சா அவ்வளவுதான்’என்று மனத்திற்குள் தன் வேலை முடிந்தது என்று மகிழ்ச்சியாக இருந்தான்.

You may also like

Leave a Comment

About Me

Featured