Home ANTIHEROஅத்தியாயம் 15

அத்தியாயம் 15

by sreejanovels
192 views

இரத்தினவள்ளி மிகவும் பதட்டமாக வேலூர் செல்லும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். தன்னுடைய வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு ஒரு போன் கால் வந்தது. “உன்னுடைய மகள் நீ பிறந்த ஊருக்குத் தான் சென்று கொண்டிருக்கிறாள். மேலும் அவளுக்குத் திருமணம் முடிந்தால் தடுத்துப் பார்” என்று வைஷ்ணவி தென்னரசு உடன் இருக்கும் போட்டோ ஒன்று அனுப்பப்பட்டது.

இந்த மெசேஜ் வரவும் பதறியடித்துக் கொண்டு இரத்தினவள்ளி தன் மகளைத் தேடித் தன் ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்.சிறு வயதிலிருந்து பெண்களை அடக்கி ஆளும் ஆணாதிக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இரத்தினவள்ளி. வேலை விஷயமாக வந்த தன் கணவனைக் காதலித்து, வீட்டை எதிர்த்து, அந்த ஊரே வேண்டாம் என்று திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இதுவரை தன் பெற்றோர்களைப் பற்றியோ, உடன் பிறந்த தம்பியைப் பற்றியோ வீட்டில் பேசியது கிடையாது. தன் மகள் வைஷ்ணவியிடம் கூட “ஐயோ என் கண்ணு வைஷ்ணவி” இப்படி ஒரு குடும்பம் இருக்கிறது என்று சொல்லவில்லை. இப்பொழுது இந்த ஊரில் தன் மகளுக்கு ஆபத்து என்று செய்தி வந்திருக்கிறதே என்று ஒவ்வொரு நொடியும் பதறிக் கொண்டிருந்தார்.

அதேசமயம் இங்கே வைஷ்ணவி தனக்கு என்ன நடக்கிறது, எது நடக்கிறது என்று புரியாமல் சித்தப்பிரம்மை பிடித்தது போல் அமைதியாக அங்கே அமர்ந்து கொண்டு இருந்தாள். அவளுக்குத் தான் திருமண ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். “ஆனால் தனக்குத் திருமணமா? நாம் எதற்காக இங்கு வந்தோம்? தென்னரசு எங்க ஊரில் இருக்கிற சொத்தை விக்கலாம்னு தானே கூட்டிட்டு வந்தான்? இப்ப திடீர்னு எங்க அம்மாவுக்கு மெசேஜ் அனுப்புறான்.

நமக்குக் கல்யாணம், உங்க அம்மாவால எங்க குடும்பம் போச்சுன்னு சொல்லிட்டு இருக்கான். எனக்கு ஒன்னும் புரியலையே” மேலும் தன் தாய் ஓரமாக அமர்ந்து கொண்டிருக்க அவனால் எதையும் சொல்ல முடியவில்லை வைஷ்ணவிக்குச் சில நேரத்துக்கு முன்பாக நடந்த விஷயங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது.

இருவரும் மலைக் கிராமத்திற்குச் செல்லச் செல்ல அங்குச் சொந்த பந்தங்கள் அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.”என்ன தென்னரசு, சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு வர்ற மாதிரி உனக்கு வரவேற்பு கொடுக்கிறாங்க? ஒரு சொத்து விக்கிறதுக்கு இவ்வளவு சந்தோஷப்படுறாங்க?” என்று வைஷ்ணவி சாதாரணமாகக் கேட்க,”நான் எந்தச் சொத்தையும் எவனுக்கும் விற்க மாட்டேன். இது என் ஊரு, என் மண்ணு. ஒரு துரும்பு கூட என்னை விட்டுப் போகாது. ஒரு மிகப்பெரிய சொத்து இப்போ எனக்குக் கிடைக்கப்போகுது.

அதுக்கான விழா தான் இது. உன் கழுத்துல நான் மூணு முடிச்சுப் போடப் போறேன்” என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டிற்கு முன்பாக வண்டியை நிறுத்தினான். வீடு பந்தல், கோலம் போட்டு மிகவும் ஜெகஜோதியாக இருந்தது.தென்னரசு சொன்னது எதுவும் அவளுக்கு விளங்கவில்லை. என்ன சொல்கிறான் என்றே புரியவில்லை அவளுக்கு. “என்ன… என்ன சொல்ற நீ? என்ன சொல்லிட்டு இருக்க? ஏய் நீ யாரு?” அப்பொழுதுதான் ஒரு விஷயம் அவளுக்குப் புரிய வந்தது. இவன் யார் என்று தெரியாது, சில காலம் பழக்கம், நல்ல நட்பு. இவன் சொன்னான் என்று எப்படி இவ்வளவு தூரம் வந்தாள்? அடிமனதில் அவன் மீது இருக்கும் அந்த காதல்! ஆம், அவள் மனதில் அவன் மீது உள்ள காதல் தான்.

அவன் நட்பாகப் பழகுகிறான் என்று இவளும் நட்பாகவே இருந்துவிட, அவளைத் தன் பக்கம் இழுத்த அவன் மீது கொண்ட காதலை அவள் மறந்திருந்தாள். இப்பொழுது அது ஞாபகம் வந்தது. “இவ்வளவு சீக்கிரம் அவனைப் பின் தொடர்ந்து வந்த காரணம் காதல் தானே” என்று விரக்தியாக அவள் முகம் மாறுவதைப் பார்த்தவன்,”என்ன புள்ள, என் மேல ரகசிய காதல் வச்சிருந்த தானே? அதனாலதான் நான் கூப்பிட்ட உடனே பின்னாடியே வந்த. என் கூடவே வந்த நான் யாரு என்னன்னு அதோ இருக்காங்க பாரு உன்னோட பாட்டி, உங்க அம்மாவைப் பெத்த அம்மா.

அவங்களைக் கேளு. அவங்க உங்க அம்மாவுக்கு மட்டும் அம்மா இல்லை, எனக்கும் அம்மா. இப்ப புரிஞ்சிருக்கும் நான் யாரு என்னன்னு. போ புள்ள, கொஞ்ச நேரம் நல்லா ஓய்வெடு. கொஞ்ச நேரத்துல நமக்குக் கல்யாணம்” என்று அவளைத் தள்ளி விட்டுச் சென்றுவிட, ராக்காயி வைஷ்ணவி அருகே வந்தார்.”ஐயோ என் பேத்தி எம்புட்டு அழகா இருக்கா! அப்படியே உங்க தாத்தாவைப் பார்க்கிற மாதிரியே இருக்கு.

உங்க ஆத்தாக்காரி இருக்காளே, அவ உங்க அப்பன் மாதிரி உரிச்சு வச்சிருப்பா. நீ அப்படியே உங்க அம்மா மாதிரியே இருக்கறதால உங்க தாத்தாவோட சாயல் அப்படியே தெரியுது ராஜாத்தி. எனக்கு இவ்வளவு பெரிய பேத்தி இருக்கா பாரு. இந்த முரட்டுப் பையன் இப்படியே இருந்து விடுவான் அப்படின்னு பயந்தேன். ஆனா இப்ப வரும்போது என்னோட ரத்த வழி சொந்தம், என் மகளோட பொண்ணு நீ வந்து இருக்க. அந்த முரட்டுப் பையன் அப்படித்தான் பேசுவான்.

சுத்தி இருக்கிறவங்க பேசிக்கிட்டாங்க, உன்னை ஏமாற்றி கூட்டிட்டு வந்துட்டான் அப்படின்னு… பாட்டி நான் இருக்கேன் டி, நீ வா.”ராக்காயி பேத்தியைப் பார்த்துச் சந்தோஷத்தில் ஏதேதோ பேச, வைஷ்ணவி சொன்னாள்: “இங்க பாருங்க, நீங்க என்னோட பாட்டின்னு சொல்றீங்க. ஆனா எங்க அம்மா இதுவரைக்கும் தன்னோட குடும்பத்தைப் பத்திப் பேசுறது கூட கிடையாது. உங்களைப் பத்திக் கேட்கும் போது ‘அந்தக் காட்டுமிராண்டி குடும்பத்தைப் பத்தி என்னால பேச முடியாது’ன்னு ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார்கள்.

தென்னரசு எனக்கு ஒரு நல்ல நண்பனா இருந்தாரு. அவர் மேல ஒரு நட்புக்கும் தாண்டி ஒரு வித உணர்வு இருந்துச்சு, அது உண்மைதான். ஆனால் அது என்னைப் பழிவாங்கத் தான்னு இப்ப புரிஞ்சுகிட்டேன். நிச்சயம் எங்க அம்மா உங்களைச் சுட்டிக்காட்டிப் பேசும்போதே புரிஞ்சு போச்சு. எங்க அம்மா காதலிச்சு இங்க இருந்து போயிருப்பாங்க. அவங்க அண்ணன் பையன்னு தெரிஞ்சுகிட்டுப் பழிவாங்கியிருக்கான் உங்க பையன்.

என்னைக் கல்யாணம் பண்ணா மட்டும் எல்லாம் முடிஞ்சு போயிடுமா? இது என்ன அநியாயம்! எனக்குத் தெரியாது, ஒழுங்கா என்னை எங்க ஊர்ல விட்டுடுங்க. இந்த மாதிரி காட்டுமிராண்டி கும்பலுக்கு நடுவுல மலைக் கிராமத்தில் என்னால எல்லாம் வாழ முடியாது. நான் இங்கிருந்து போயே ஆகணும்” என்று அங்கிருந்து வரும்போது தென்னரசு அவளை முறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.”என்ன புள்ள என்னென்னமோ பேசுற?”

“ஏய் உன்னை நல்லவன்னு நினைச்சேன், நீ இவ்வளவு பெரிய ஏமாற்றுக்காரன் அப்படின்னு எனக்குத் தெரியாது. அப்பாவி மாதிரி பேசிப் பேசி என்னை ஏமாத்தி இங்க கூட்டிட்டு வந்துட்ட. எங்க அம்மா காதலிச்சு கல்யாணம் பண்ணாங்கன்னு அவங்க பெத்த பொண்ணுகிட்ட வீரத்தைக் காட்ட வர்றியே, இதான் உன்னோட கிராமத்தோட ஆம்பளத் தனமா? இப்படிப் புறவாசல் வழியாக உங்கள் வீரத்தைக் காட்டுவது?”

என்று முகம் சுளித்துக் கொண்டிருந்த வைஷ்ணவியின் கன்னங்கள் இரண்டும் தென்னரசுவின் வலிமையான கரங்களுக்குள் சிறைபிடிக்கப்பட்டது.”இங்க பாரு புள்ள, உன்னை ஏமாத்துனது உண்மைதான். ஆரம்பத்தில் அந்த ஊருக்கு வந்த விஷயமே வேற. ஆனா உன்னைப் பத்தித் தகவல் தெரிந்த பிறகு என் நோக்கம் எல்லாம் உன் மேல போயிடுச்சு. சொல்லாட்டியும் நீ கொஞ்சம் சுமாராத் தான் இருக்க, அதான் போனாப் போகட்டும்னு உனக்குத் தாலி பாக்கியம் கொடுக்க வந்து இருக்கேன்.

இல்லன்னா ஓடுகாளி மகளை எவன் கல்யாணம் பண்ணிக்குவான்? ஒழுங்கா கல்யாணம் பண்ணி இந்த வீட்டோட அடக்கமா என்கூட குடும்பம் நடத்துற வழியைப் பாரு. அதுக்குன்னு உன்கூட சந்தோஷமாலாம் இருப்பேன் அப்படின்னு நினைக்காதே. நம்ம அம்மா அப்பாவுக்கு நீ செஞ்ச அசிங்கம் எவ்வளவு தப்புன்னு நீ ஒவ்வொரு நாளும் சித்திரவதைப்படும் போது உங்க அம்மா அதைத் தெரிஞ்சு கவலைப்படணும். கொஞ்ச நேரத்துல உன்னோட ஆத்தா வந்துடுவா. ஆத்தாளும் மகளும் பாட்டியும் மூணு பேரும் சேர்ந்து அழுவுங்க, யாரு வேணாம்னு சொன்னா? கொஞ்ச நேரம் தான் டைம் இருக்கு, அதுக்குள்ள அழகா ரெடி ஆயிட்டு வா”

என்று அவளைத் தள்ளி விட, சரியாக இரத்தினவள்ளி பதறியடித்துக் கிராமத்திற்குள் நுழைந்து தன் வீட்டை நெருங்கும் நேரம், தன் மகள் கீழே விழப்போவதைத் தாங்கிப் பிடித்தார்.”என்னடி கூத்து இது? நீ எதுக்கு இங்க வந்த?” என்று தன் மகளைப் பார்த்து கேட்க, அவ்வளவுதான், இவ்வளவு நேரம் தைரியமாகப் பேசியவள் தன் தாயைப் பார்த்தவுடன் மனதில் ஏமாற்றத்தின் வலி பிரதிபலிக்க அழுதுகொண்டு தன் அன்னையைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

“ஏமாந்து போயிட்டேன்மா! காதல் என்கிற பெயரில் நீ வாழ்க்கையை ஜெயிச்சுட்ட, ஆனா வாழ்க்கையில எல்லாம் ஜெயிச்சும் காதல் என்கிற விஷயத்துல நான் தோத்துப் போயிட்டேன். நான் சொன்னேனே எனக்கு ஒருத்தர் மேல அபிப்பிராயம் மரியாதை எல்லாம் இருக்குன்னு, அது இவன் தான். எனக்கு இப்பதான் இந்த விஷயம் தெரியும். நீ ஒரே வார்த்தைல முடிச்சிடுவ ‘காட்டுமிராண்டி குடும்பம்’னு, நிஜமா அப்படித்தான் இருக்கும் போல இருக்கு.

எனக்கு பயமா இருக்குமா, என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடுமா” என்று பயத்தில் வைஷ்ணவி அழ ஆரம்பித்து விட,”ஏய் நீ எதுக்குடி அழுவுற? தப்பு நீ ஒன்னும் பண்ணல. ஏமாத்திட்டு உன்னைத் தூக்கிட்டு வந்தவன் இவன். இவன் அப்பாவும் தாத்தாவும் ஊர்ல பண்ணாத அட்டூழியம் இல்லை. பொம்பளைங்கன்னா அவ்வளவு இளக்காரம், அவ்வளவு கேவலமா நடத்துவாங்க.

அந்த வீட்டில் பிறந்த என்னை ஒரு அடிமை மாதிரி பார்த்தாங்க. ஒரு பொறுக்கிக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்தாங்க. நல்லவேளை என் வாழ்க்கையில் உங்க அப்பன் வந்தான், அவன் கையப் பிடிச்சு வந்தவதான் இந்த ஊரையே தலைமுழுகிப் போயிட்டேன். எல்லாம் நிம்மதியா இருக்கும் போது தேடி வந்து நம்மளக் கஷ்டப்படுத்தறதுக்காகவே எங்க அப்பாவும் தாத்தாவும் கடைசியா விட்டு வச்ச வாரிசா இவன் வந்து நிக்கிறான்.

டேய், நீ நல்லவன்னு கொஞ்சம் பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். பரவால்ல அப்பா தாத்தா மாதிரி நீ இருக்க மாட்ட அப்படின்னு நினைச்சேன், ஆனா நீயும் அப்படித்தான் இருக்க இல்ல?” என்று தன் தம்பியைப் பார்த்துப் பெற்றவள் கேட்க,”ஏய் உனக்கு என்கிட்ட பேசுறதுக்கே உரிமை இல்லை. ஊர் தலைவர் என்கிற நல்ல பதவியில நம்ம தாத்தா வாழ்ந்துக்கிட்டு இருந்தாரு.

புடவை பணத்தை வாங்கிட்டு நீ ஓடிப்போன, அதுக்கப்புறம் எல்லாம் போயிடுச்சு. அப்பா போயிட்டாரு, தாத்தா போயிட்டாரு, நான் மட்டும் தான் பாக்கி. உன்னால தான் அது போச்சு. அதனால தான் உன் பொண்ணு மூலமா என் கௌரவத்தைக் காப்பாத்தப் பார்க்கிறேன். இல்லன்னா உன்ன மாதிரி ஓடுகாலிக்குப் பிறந்த மகளை எவன் கல்யாணம் பண்ணிக்குவான்? ஒழுங்கா உன் பொண்ண நானே கட்டிக்கிட்டா பரவால்ல, ‘ரத்தினவள்ளி தம்பிக்கு பொண்ணு கொடுத்து குடும்பத்தோட சேர்ந்துடுச்சு, இவங்களும் நல்ல குடும்பம் தான்பா’ அப்படின்னு கௌரவமா நாலு பேர் மத்தியில பேச்சு கிடைக்கும்.

உன் பொண்ணுக்கு எந்த ஒரு குறையும் வைக்க மாட்டேன். சொத்து நிறைய இருக்கு, நானும் வக்கற்றவன் கிடையாது, நல்லாச் சம்பாதிக்கிறேன். உன் பொண்ணைக் கேளு அவளுக்கே தெரியும் எல்லாமே. ஆனா ஒன்னு, நீ பண்ண தப்புக்குத் தண்டனை உன் பொண்ணுக்குக் கிடைக்கும். நீங்க வந்து தப்பிக்கலாம்னு மட்டும் நினைக்காதே” என்று தன் சகோதரிக்கு மிரட்டல் விடுக்க,”டேய் என்ன மிரட்டுறியா? வைஷ்ணவி ஒழுங்கா வா கிளம்பலாம்.

காதலிக்கிறதுக்கு வேற ஆளே கிடைக்கல பாரு, வாடி போலாம்” என்று தன் மகளின் கைபிடித்து இரத்தினவள்ளி கிளம்ப முற்பட்ட பொழுது, தென்னரசு சொன்ன ஒரு சொல்லில் அப்படியே நின்று விட்டார்.—

You may also like

Leave a Comment

About Me

Featured