Home ANTIHEROஅத்தியாயம் 14

அத்தியாயம் 14

by sreejanovels
299 views

நாட்கள் அதன் போக்கில் சென்றன. ராம் மிகவும் சோர்வுடன் காணப்பட்டான். இனியன், செழியன் இருவரும் பேசினால் கூட, அதற்கான பதில் அளிப்பானே தவிர, அதற்கு மேல் பேசமாட்டான்.மறுபக்கம் யோகிதா அவனைப் புறக்கணிப்பது இன்னும் அவனுக்கு வலியைத் தந்தது.

அவளிடம் செல்லும் மனதைக் கட்டுப்படுத்தினால் கூட சுத்தமாக முடியவில்லை. மறுபக்கம் யோகிதா, ராம் என்ற ஒருவன் இந்த உலகத்திலேயே இல்லாதது போல் நடந்து கொண்டாள்.மேலும், அவனது குட்டி வாரிசு அவளை இம்சை செய்தது. அடிக்கடி ஒவ்வாமை வந்து, வாந்தி, மயக்கம், தலை சுற்றல் வந்தது.

முடிந்தளவு கட்டுப்படுத்திக் கொண்டாள். இன்னும் மூன்று நாட்களில் மூன்றாம் மாதம் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தி இருக்க, அதற்காக தனக்கான அப்பாயின்ட்மென்ட்டை ஆன்லைனில் அப்ளை செய்து பெற்றுக் கொண்டாள்.தன் மனப்பாரத்தை கூட யாரிடம் சொல்ல முடியாத மோசமான நிலை அவளுக்கு.இங்கே காதல் ஜோடிகள் உல்லாச உலகத்தில் பறந்து கொண்டிருந்தனர்.

செழியன், அம்பை இருவருக்குமான நெருக்கம் இன்னும் இன்னும் அதிகரித்தது. சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலையில் இருந்தனர். ஆனால், தக்க சமயத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாரே தவிர, அவசரப்பட்டு முடிவெடுக்கவில்லை இருவரும்.இங்கே இனியன் மற்றும் இசை நடுவில் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருந்தது.

அன்றைய நிகழ்வுக்குப் பிறகு இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அப்படி என்ன நடந்திருக்கும்?சில நாட்களுக்கு முன்பு, லைப்ரரி அறையில் ஒரு புத்தகத்திற்காக இசை தேடுதல் வேட்டையில் இறங்க, அவள் தனிமையில் இருப்பது உணர்ந்து கொண்ட இனியன், அவளிடம் தன் மனதில் இருப்பதைச் சொல்லலாம் என்று யாரும் இல்லாமல் இருக்க, அது சாதகமாய் போய்விட, கதவை லாக் செய்து அவள் பின்னால் நிற்க, திடீரென்று தன் பின்னால் ஏதோ உருவம் இருப்பதை உணர்ந்தவள் வெடுக்கென்று திரும்ப, இருவரும் ஒருசேர கீழே உருண்டு விழுந்தனர்.

இதுதான் சமயம் என்று தேன்மிட்டாய் இதழ்களைத் தன் இதழுக்குள் இழுத்துக் கொண்டான்.இசையின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அவனை விட்டு விலகலாம் என்று பார்த்தால், சுத்தமாக முடியாமல், உடம்பின் பிடியில் அவள் இடையைக் கசக்கிக் கொண்டிருந்தான்.முழுமூச்சாக அவனைப் பிடித்துத் தள்ளி விட்டவள், காயப்பட்ட தன் இதழ்களைத் துடைத்து,”கொஞ்சமாவது உங்களுக்கு மேனர்ஸ் இருக்கா? இப்படித்தான் தனியா இருக்கிற பொண்ணு கிட்ட பண்ணுவாங்களா? உங்களை என்னவோ நினைச்சேன்.

ஜென்டில்மேன், மிஸ்டர் பர்ஃபெக்ட் அப்படின்னு. ஆனா நீங்களும் சந்தையில் சிந்து பாடுற கேஸ் தான். உங்க முகத்தைப் பார்க்கவே அருவருப்பா இருக்கு,” என்று சொல்லி முகம் சுளித்து அங்கிருந்து நகரப் போனவளைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி, சற்று யோசிக்காமல் அவள் மீது படர்ந்து, அவள் காதோரத்தில் முகம் புதைத்து வாசம் இழுக்க, இன்னும் கூச்சத்தில் நெளிந்து போனாள் இசை.சிறிது நேரம் அவளை இம்சை செய்துவிட்டு, அவள் முகத்தைப் பார்த்து,

“வாய் தான் அப்படி பேசுதே தவிர, கண்ணும் மனசும் அதை ஏத்துக்கிற மாதிரி தான் இருக்கு. இது உனக்கு அருவருப்பா இருக்கா?” என்று மீண்டும் மீண்டும் அவளைச் சீண்டிச் சிவக்க வைக்க,”போதும் போதும் விஷ்ணு (இனியனின் செல்லப் பெயர்). ரொம்ப எல்லை மீறி போறீங்க. எனக்கு உங்க மேல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு சொல்ல முடியாது. ஆனா எனக்கு உங்களைப் பிடிக்கும். அதுக்காக உடனடியா மனச தூக்கித் தர அளவுக்கு நான் பெரிய மனசுக்காரி இல்லை. கொஞ்சம் யோசிக்க டைம் தாங்க,”

என்று சொல்லிய உடன் அவனுக்குக் கோபம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பரவி இருந்தது. இத்தனை மாதங்கள் ஒட்டி உரசிப் பேசி, சிரித்து, கண்களில் காதலைப் பொங்க வைத்துவிட்டு, இப்பொழுது திடீரென்று யோசிக்க நேரம் தாங்க என்று சொன்னால் எந்த ஒரு ஆண் மகனுக்கும் கோபம் வரத்தான் செய்யும்.

அதுவும் தாங்களாகப் போய்க் காதல் சொன்னால், ஏன் இந்தப் பெண்கள் தங்களைத் துச்சமாக நினைக்கிறார்கள் என்று அவள் தவறாக நினைத்துக் கொண்டான். ஆனால் அவள் அப்படி அர்த்தத்தோடு சொல்லவில்லை. சிறு வயதிலிருந்து அனைவரிடமும் ‘நான் நீங்கள் சொல்லும் மாப்பிள்ளை தான் திருமணம் செய்து கொள்வேன்’ என்று சபதம் போட்டவள். மேலும், சித்தியின் வாழ்க்கையைப் பார்த்து, இன்னும் இன்னும் பயத்தில் காதலித்து தானும் ஏமாந்து போகக்கூடாது என்ற பக்குவத்தில் இருப்பவள்.

அதனால், பொறுமையாக வீட்டாரிடம் எடுத்துச் சொல்லி நல்ல முறையில் திருமணம் செய்ய வேண்டும் என்று அவள் நினைக்க, ஆனால் அவனோ உடனடியாகக் காதல் தெரிவிக்க வேண்டும், உடனடியாக அனைத்தும் நடக்க வேண்டும் என்று அடம் பிடிக்க, இருவருக்கும் முட்டிக் கொண்டது.

“இங்க பாருங்க. கல்யாணம் என்பது சாதாரண விஷயம் இல்லை. ரெண்டு குடும்பம் இணைக்கப்பட வேண்டிய விஷயம். நான் மட்டும் ஈஸியா எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு உங்க கூட வர முடியாது. எனக்குன்னு குடும்பம் இருக்கு. அம்மா, அப்பா, அக்கா, தாத்தா, சித்தி, அண்ணன் அப்படின்னு ஒரு குடும்பம் இருக்கு. அதையும் நான் யோசிக்கணும். அதனால சும்மா சும்மா என்கிட்ட இந்த மாதிரி நடந்துகிட்டா ஆக்‌ஷன் எடுக்க வேண்டி வரும்,”

என்று அவள் சீரியஸாகச் சொன்னாலும், இனியன் அவள் இடுப்பை வளைத்து பிடித்து அவளை கொஞ்சிக் கொண்டே இருக்க, எரிச்சல் அடைந்த இசை அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு ஓங்கி ஒரு அறை விட, ஸ்தம்பித்து போய் நின்று விட்டான்.”உங்களுக்கு மூளை இருக்கா இல்லையா? இவ்வளவு பெரிய பதவில இருக்கீங்க.

நாலு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தர டீச்சர் நீங்களே இப்படி மீறினால், உங்ககிட்ட படிக்கிற பசங்க எப்படி இருக்கும்? சித்தி சரியாக சொன்னாங்க. இந்த ஆம்பளைங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். கொஞ்சம் ஒரு பொண்ணு சிரிச்சிப் பேசி நெருங்கிப் பழகுனா போதும், அப்படியே மேலே பாய்ந்து விட வேண்டியது.

சபல புத்தியுடன் தான் இந்த ஆண்கள் இருப்பாங்க போல. இனி என்கிட்ட பேசுவதோ, இல்ல மறுபடியும் என்கிட்ட இந்த மாதிரி நடந்துகிட்டா மரியாதை இருக்காது,” என்று அவனை வசைப்பாடி விட்டு அங்கிருந்து சென்றுவிட, ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் வருத்தம் இரண்டும் அவனை ஆட்கொண்டது.’என்ன தவறு செய்து விட்டோம்? அவளும் தன்னிடம் அப்படித்தானே பழகினால்? திடீரென்று எப்படி அவளால் இப்படிப் பேச முடிகிறது? கண்களில் காதலைப் பார்த்தேனே,

அதை நம்பி தானே மனதைக் கொடுத்து, இது போதாது என்று இரண்டு ஆண்டு காலமாக இவளுக்காக தானே காத்திருந்தேன்? கனவில் இவள்தான் உன் தேவதை என்று காட்டி, நிதர்சனத்தில் அவள் என்னை விட்டு விலகிச் செல்வது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விடமாட்டேன்.

மனதில் காதலை வைத்துக் கொண்டு இப்படி வாய் பேச்சால் விலகி செல்பவளை எப்படி விட முடியும்? விடக்கூடாது. என்னுடைய இசை எனக்கு மட்டும்தான் சொந்தம்,’ என்று காதல் ரசிகனாக இருந்தவன், இப்போது அவளை வதைக்கும் அசுரனாக மாறிக்கொண்டிருந்தான்.

கோபத்தில் சென்று கொண்டிருந்த அவளை மர்ம சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். நிச்சயம் அந்தப் பார்வையில் ‘உன்னை அடைந்தே தீருவேன்’ என்ற அர்த்தம் இருந்தது.இப்படி மூன்று காதல் ஜோடிகளும் ஒவ்வொரு பரிணாமத்தில் தங்கள் காதலுக்காகப் புதுப்புது சவால்களைச் சந்திக்க நேர்ந்தது.அதன் பிறகு இனியன், இசை முகத்தை கூடப் பார்க்கவில்லை.

அவளும் எதுவும் பேசவில்லை. வேறு ஆசிரியர்கள் மூலம் தகவலைத் தெரிவிப்பானே தவிர, தலைமை ஆசிரியர் அடங்கிக் கிடந்தான்.சரியாக மூன்று நாட்கள் கழித்து, யோகிதா அன்று பள்ளிக்கு வராமல் அரை நாள் விடுமுறை போட்டு, ஸ்கேனுக்காக ஒரு புகழ்பெற்ற மருத்துவமனைக்குச் செல்ல, அவள் போதாத காலம், அவள் அன்னையின் தோழி ஒருவர் அங்கே மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இதை அறியாத யோகிதா அங்கே தனக்கான நேரம் வருவது காத்திருந்தாள். தண்ணீர் நன்றாகக் குடித்து நடந்து கொண்டிருந்தாள், அப்போதுதான் ஸ்கேன் நன்றாகத் தெரியும் என்பதால்.அதே சமயம், இன்று யோகிதா பள்ளிக்கு வந்து அரை நாள் விடுமுறை வேண்டும் என்று பர்மிஷன் கேட்டுச் சென்றதை கவனித்த ராம், அவனும் பர்மிஷன் போட்டு, அவள் செல்லும் இடத்தைப் பின் தொடர்ந்து செல்ல, அவள் சென்றது மருத்துவமனை.

‘எதற்காக இங்கே வரவேண்டும்? ஒருவேளை உடம்பு சரியில்லாமல் போய்விட்டதோ? இதற்கும் தான் காரணமோ?’ என்று மனம் உடைந்து போனான். கலகலவென்று இருந்தவள் இன்று வாடியக் கொடி போல் இருப்பதற்கு தானும் ஒரு காரணம் என்று குற்ற உணர்வில் விழுந்தான். மெதுவாக அவளைப் பின்தொடர, அவளோ தண்ணீர் அருந்தி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

அவள் அருகில் சில கர்ப்பிணிப் பெண்கள் இருந்து கொண்டிருந்தனர். அவனுக்கு ஒன்றும் ஒரு நிமிடம் புரியவில்லை.அப்பொழுது ஒரு செவிலியர் அறையில் இருந்து வெளியே வந்து ‘யோகிதா’ என்று அழைக்க, அவளும் அவரைப் பின்தொடர்ந்து அந்த அறைக்குள் சென்றாள்.

அப்போதுதான் அந்த அறையைக் கவனித்தான். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அறை என்று.ஒரு நிமிடம் அவனுக்கு உலகமே சுழன்று நின்றது. ஸ்கேன் அறைக்குள் செல்கிறாள் என்றால், ஒரு வேலை என்று யோசித்தவன் உடனடியாக அறைக்குள் அவனும் மின்னல் என புகுந்து கொண்டான்.

திடீரென்று ஒரு ஆண்மகன் அறைக்குள் நுழைவதைப் பார்த்து செவிலியர் ‘யார்?’ என்று விசாரிக்க,அவனைப் பார்த்த யோகிதாவுக்கும் சற்று அதிர்ச்சி தான். ‘இவன் என்ன இங்கு வரை வந்திருக்கிறான்?’ என்று.அவளுக்குப் புரிந்து போனது என்னவாக இருக்கும் என்று. தட்டு தடுமாறி வரும் வார்த்தைகள் தொண்டையில் அடைத்தது.

இருந்தாலும் தன்னைச் சமன் செய்து கொண்டு திக்கித் திணறி,”நா… நான்.. அவளோட ஹஸ்பண்ட். அவங்க வயித்துல வளர குழந்தைக்கு அப்பா நான் தான். ஸ்கேன் பார்க்கும் போது அட்டெண்டர் இருக்கலாம் இல்ல?” என்று சந்தேகமாக கேட்டாலும், கண்கள் நிறைந்த மகிழ்ச்சி அவனுக்கு. அது யோகிதாவும் கவனித்தாள்.

இருந்தாலும் அமைதியாகவே இருந்தாள்.செவிலியர் புன்னகைத்துக் கொண்டே,”சூப்பர்! அட்டெண்டர் கூட இருக்கிறது நல்லது தான். அவங்க கொஞ்சம் டென்ஷன் ஆகாம இருக்கலாம். அதுவும் ஹஸ்பண்ட் இந்த மாதிரி ஸ்கேன் டைம்ல கூட இருக்கிறது ரொம்ப ரொம்ப நல்ல விஷயம். சரி மிஸ்டர், நீங்க உட்காருங்க. மேடம், நீங்க வயித்தைக் காட்டிட்டு அங்க படுங்க,”

என்று சொன்னவுடன் யோகிதா அங்கிருக்கும் பெட்டில் படுத்து, புடவை திரைச்சீலையை விலக்கி வயிற்றைக் காண்பிக்க, ஜெல் தடவி மருத்துவர் ஸ்கேன் பரிசோதனை செய்ய ஆரம்பித்தார். மூன்று மாதக் கரு என்பதால் சிறு அத்திப்பழ உருவமாக தெரிந்தது.

சிறிது நேரத்தில் யோகிதா மற்றும் ராம் இருவர் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. காரணம், அவர்களது உயிர் தன் இதயத்துடிப்பைத் தாய் தந்தைக்குத் தெரிவித்தது.பெண்கள் சதைக்குப் பின்னால் அலைந்தவன் இன்று தன்னை ‘உறவு’ என்று சொல்ல ஒரு உயிர், அதன் முதல் புள்ளி, அதனுடைய இதயத்துடிப்பு, அதைக் கேட்கக் கேட்கப் பூரித்துப் போனது அவனுக்கு. யோகிதாவின் கரங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

‘இனி அவளைக் கைவிடக்கூடாது’ என்று. ஆனால் பட்டது போதும் என்று அவன் கரங்களை மெதுவாக விடுவித்து முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் கோபம் கண்டு குறும்பு புன்னகை பூத்தவன், மெதுவாக அவள் வயிற்றை வருடி அவள் காதோரம் குனிந்து,”அவ்ளோ சீக்கிரம் உன்னால என்ன இக்னோர் பண்ண முடியாது செல்லம்.

இனி நல்லா சாப்பிட்டு உடம்ப தேத்து. கூடிய சீக்கிரம் உன்னையும் நம்ம குழந்தையையும் நான் கூட்டிட்டுப் போகிற காலம் நெருங்கிடுச்சு. இந்த ஜென்மத்துல நான் உன்னை கைவிடமாட்டேன்,” என்று சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட, அவர்களைப் பார்த்து நர்ஸ், டாக்டர் இருவரும் பெருமை புகழ் பாடி கொண்டிருந்தனர்.

குழந்தை நன்றாக இருக்கிறது என்று அங்கே மருத்துவர் சொன்னவுடன், நிம்மதியோடு அங்கிருந்து அவசர வேலையால் ராம் சென்றுவிட,யோகிதா மற்ற ஃபார்மாலிட்டி அனைத்தையும் முடித்துவிட்டு, ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வர, அங்கே ருத்ர காளியாக கௌதமி நின்று கொண்டிருந்தார்.

அம்மாவைப் பார்த்தவுடன் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட, ஓடிவந்த கௌதமி மகளைச் சுற்றியிருப்பவர்களைக் கவனிக்காமல் அடி வெளுத்து விட்டார்.

You may also like

Leave a Comment

About Me

Featured