நாட்கள் சென்றன.வைஷ்ணவியின் மனதுக்குள் அந்த மழைப்பொழுது ஏற்படுத்திய தாக்கம் குறையவில்லை. பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது கூட, தென்னரசுவின் அந்தப் பணிவான முகம் அவள் நினைவில் வந்து போனது.
ஒரு முரட்டுத்தனமான மனிதன், இவ்வளவு சீக்கிரம் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.அன்று பள்ளி முடிந்து அவள் வெளியே வந்தபோது, தென்னரசு அதேபோல் ஜீப் எடுத்து வருவானா என்று பார்க்க, “அய்யய்யோ என்ன நான் இப்படி அவர் வருகைக்காக எக்ஸ்பெக்ட் பண்றேன்”
என்று தலையில் அடித்துக்கொண்டாள் தன் மடத்தனத்தை எண்ணி.ஆனால், அவள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்கும்போது, தற்செயலாக வந்துகொண்டிருந்த தென்னரசு அவளைப் பார்த்து நின்றான்.”என்ன டீச்சர்… கிளம்பியாச்சா?” என்று அவன் கேட்டபோது, அவனது நெற்றியில் வழிந்த வியர்வைத் துளிகள் அவன் எவ்வளவு கடுமையாக உழைக்கிறான் என்பதைச் சொல்லின.”ஆமா தென்னரசு…
நீங்க இப்பதான் ஷிப்ட் முடிச்சுட்டு வரீங்களா?” என்று வைஷ்ணவி கனிவுடன் கேட்டாள்.”ஆமாங்க… இன்னைக்கு மெஷின்ல கொஞ்சம் வேலை அதிகம். நாங்க மெஷின் ஆபரேட்டர் தானே… கை கால் ஓயாம ஓடுனாத்தான் சோறு. எனக்கு வேற யாரு இருக்கா? ஒரு வாய் சோறு போட்டு ஆத்திக்கக் கூட ஆள் இல்லாத அனாதை நான்,”
என்று அவன் சொல்லும்போது, வைஷ்ணவியின் இதயம் அவனுக்காகப் பரிதாபப்பட்டது.தென்னரசுவின் மனதுக்குள் ரத்தம் கொதித்துக்கொண்டிருந்தது. ‘இந்தக் கருணைதான் எனக்கு வேணும் வைஷ்ணவி. உங்க அம்மா ரத்தினவள்ளி எங்க அப்பாவைக் கேவலப்படுத்தினதுக்கு, உன்னை வச்சு அவங்க நெஞ்சுல நான் ஈட்டி பாய்ச்சப் போறேன். நான் தெரியாம, ஒரு சாதாரணத் தொழிலாளினு நினைச்சு நீ காட்டுற இந்த அன்புதான் என் வெற்றிக்கான முதல் படி’ என்று வஞ்சகமாக எண்ணிக் கொண்டான்.
“என்ன நீங்க அப்பப்போ அனாதை அனாதைனு சொல்லிக்கிட்டு இருக்கீங்க? நீங்க ரொம்ப உங்களை நீங்களே தாழ்த்தி பேசக்கூடாது. இங்க பாருங்க, இப்போ உங்களுக்குன்னு யாரும் இல்லாம இருக்கலாம் ஆனா வருங்காலம்னு ஒன்னு இருக்கு இல்லையா? அதுக்காக நீங்க உழைச்சுதான் ஆகணும். சந்தோஷமா இருங்க.
சும்மா சும்மா அனாதைங்கிற வார்த்தையை யூஸ் பண்ண வேண்டாம். இப்ப நான் உங்களுக்கு நல்ல பிரண்டா இருக்கேன், இப்போ உங்களுக்கு ஓகே தானே?” என்று வைஷ்ணவி கேட்ட பிறகு தென்னரசு சிரித்தான்.”சரிங்க டீச்சர், உங்ககிட்ட பேசினாலே கொஞ்சம் மனசு ஆறுதலா இருக்கு. ஆரம்பத்துல உங்களை மகமாயி அப்படின்னு கூப்பிட்டு கிண்டல் பண்ணதுக்கு என்னை மன்னிக்கணும். சரி எப்படி நீங்க ஹாஸ்டல் பக்கம்தான் போகப்போறீங்க, நானே உங்களை டிராப் பண்றேன் வாங்க”
என்று சொன்னவுடன் வைஷ்ணவியும் சரி என்று சொல்லி அவன் வண்டியில் ஏறிக்கொண்டாள்.அடுத்த சில நாட்கள், தென்னரசு மிகவும் திட்டமிட்டு அவளுடன் நட்பாகப் பழகினான். அவளுக்குப் பிடித்தமான ஒரு சிறிய புத்தகத்தையோ அல்லது ஒரு இனிப்பையோ, “நான் வர்ற வழியில தற்செயலா பார்த்தேன், உங்களுக்குப் பிடிக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன்” என்று கொடுப்பான். வைஷ்ணவிக்கு அவன் ஒரு மிகச்சிறந்த நண்பனாகத் தெரிந்தான். அவனது முரட்டுத்தனமான பின்னணி தெரியாமல், அவனிடம் தன் மனதைத் திறக்கத் தொடங்கினாள்.—
மறுபுறம், அதிரவனின் அலுவலகத்தில் சூழல் மிக மோசமாக இருந்தது.இப்போது அதிரவனின் நடவடிக்கை வேறு விதமாக இருந்தது. சுத்தமாக அவளைக் கண்டுகொள்ளவில்லை. “காதல் தானே வேண்டும் என்று கேட்டேன், அதற்கு இப்படி ஒரு தண்டனையா? அதான் ஒரு பெண் அவளாகவே முன்வந்து காதல் பற்றிப் பேசினால் இந்த ஆண்களுக்கு இப்படித்தான் கேவலமாகத் தெரியும் போல”
என்று மீனாட்சி மிகவும் மன வேதனை கொண்டாள்.நாட்கள் கடந்தன. அவளைத் தனியாக அழைத்து ஏதாவது குறை சொல்லி திட்டி அனுப்பி விடுவான். இறுதியில் “நான் சொன்னதுக்கு என்ன பதில்?” என்று கேட்பான். இப்படித்தான் நாட்கள் சென்றன.இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அவன் கேட்ட காபியை எடுத்துக்கொண்டு மீனாட்சி அவன் அறையை நோக்கிச் சென்றாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்” என்று அனுமதி கேட்க, அவனும் “எஸ், கம்மிங்” என்று பதில் சொன்ன பிறகு மிகவும் பணிவாக அவன் காபியை அவனிடம் கொடுத்துவிட்டாள். அவன் குடித்துப்பார்த்தபோது அது அவ்வளவு நன்றாக இருந்தாலும்,”கவனம் எங்க இருக்குன்னு தெரியல. நான் கேக்குறது ஒரு காபி, அது கூட ஒழுங்கா வச்சுத் தர்றது கிடையாது. மனசுல கண்ட கண்ட எண்ணங்கள் இருக்கு. நான் சொல்றபடி கேட்டா இந்த நிலைமை உனக்குத் தேவையா என்கிட்ட திட்டு வாங்கிக்கிட்டு?” என்று மீண்டும் அவன் புராணத்தை ஆரம்பிக்க,
“சார்… ஏன் இப்படி இருக்கீங்க? குகையில நீங்க காட்டின அந்த அன்பு பொய்யா? நான் உங்களை உயிரா நேசிக்கிறேன். எனக்கு ஒரு மனைவியா உங்க வாழ்க்கையில இடம் கொடுங்க,” என்று அவள் மண்டியிட்டுக் கெஞ்சினாள்.பாவம், அவன் மரியாதையாக நடந்து கொள்வதும், ஆணவத்தோடு முகபாவத்தோடு நடந்து கொள்வதும் அழகிய மேனரிசம் என்று நினைத்துக்கொண்டு, அவன் தன்னிடம் நெருங்குவதை வைத்து நிச்சயம் தன் பேச்சு கேட்பான் என நினைத்து, மீனாட்சி வெட்கத்தை விட்டுத் தன் காதலைப் பலமுறை சொல்லுவது போல் இன்று மிகவும் உடைந்து அழுது சொன்னாள்.
அதிரவன் தன் கையில் இருந்த காஃபி கோப்பையை மேஜை மீது ஓங்கி வைத்தான். அவனது பார்வை கழுகைப் போல அவளைத் துளைத்தது. “மீனாட்சி… நான் அன்னைக்கே சொன்னேன். எனக்குத் திருமணத்துல விருப்பமில்லை. உன்னோட இந்த ‘கெஞ்சல்’ எனக்குப் பிடிக்கல. உனக்கு வசதிகள் வேணும்னா என்னோட ‘லிவிங்’ (Living) வாழ்க்கை வாழு. என்னோட படுக்கையைப் பகிர்ந்துக்கோ, ஆனா என் பேரைப் பகிர்ந்துக்க நினைக்காதே. தாலிங்கிற ஒரு கயிறு உன் கழுத்துல ஏறாது. ஏன்னா, இந்த அதிரவன் யாருக்கும் கட்டுப்பட்டவன் கிடையாது,”
என்று அதட்டினான்.”அப்போ நான் உங்களுக்கு வெறும் ஒரு பொம்மைதானா சார்? உங்க இச்சைக்காக மட்டும்தான் நான் இங்க இருக்கணுமா?” என்று மீனாட்சி கேவிக் கேட்டாள்.”பொருளா நினைக்கல… ஆனா உனக்கு மனைவிங்கிற அந்தஸ்தைத் தரமாட்டேன். உன்னோட அந்தத் திமிர் எனக்குப் பிடிச்சிருக்கு, ஆனா அது எனக்குக் கீழ இருக்கணும்,” என்று அவன் அவளை அவமானப்படுத்தினான்.அதிரவனின் இந்த விடாப்பிடியான சுபாவம் மீனாட்சியை உடைத்துப் போட்டது.
“போதும் சார்… உங்களை மாத்த முடியும்னு நான் நினைச்சது என் தப்புதான். இனியும் நான் இங்க இருந்து உங்களை வந்து கெஞ்ச மாட்டேன். உங்களோட இந்த அதிகாரமும், ஆணாதிக்கமும் உங்ககூடவே இருக்கட்டும். நான் என் வழியைப் பார்த்துட்டுப் போறேன்,” என்று ஆவேசமாகச் சொன்னாள் மீனாட்சி.அதிரவன் இதைக் கேட்டுச் சிரித்தான்.
“எங்க போவ? நீ எங்க போனாலும் என் நிழல் உன்னைத் துரத்தும். உனக்கு பத்து நாள் டைம் கொடுக்கிறேன், அதுக்குள்ள மனசு மாத்தி சீக்கிரம் என்கிட்ட வந்துரு. உன்னால என்னை விட்டு எங்கடி போக முடியும்?” என்றான் கர்வமாக.மீனாட்சி அங்கிருந்து வெளியேறினாள். அவளுக்குத் தெரியும், இன்று வழக்கம் போல்தான் தன்னை அவமானப்படுத்துவான் என்று.
ஆனால் எவ்வளவுதான் கெஞ்ச முடியும்? தனக்கு அனைத்தும் இருக்கிறது என்கிற அகம்பாவம் அவனுக்கு. இவரிடம் இனி கெஞ்சுவது வீண். இங்கு அலுவலகத்தில் இருந்தால் நிச்சயம் இவனால் மன உளைச்சலுக்குத்தான் ஆளாக வேண்டும். இன்னும் கான்ட்ராக்டில் செயல்படவில்லை, பணியை நிறுத்திவிட்டு கல்லூரிக்கு வெறும் எக்ஸாம் நாட்களில் மட்டும் சென்னை வந்து எழுதிவிட்டுச் செல்ல வேண்டும்.
அதிரவனிடம் இருந்து விடுதலை பெற அதுதான் ஒரே வழி என்று அவள் முடிவு செய்தாள். ஆனால், அவளுக்குத் தெரியாது, அதிரவன் அவளைத் தன் உடமையாக மட்டுமல்லாமல் உரிமையாக்கவும் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வான் என்று.மீனாட்சி தன் தந்தை சுந்தரத்திற்கு போன் செய்ய,”என்ன கண்ணு எப்படி இருக்க நேத்து போன் பண்ணவே இல்ல, உங்க அம்மா ஒரே அழுகை, என் பொண்ணு போன் பண்ணல அப்படின்னு.
உனக்கு எல்லாமே சரியா தானே இருக்கு? நீ நல்லா தானே இருக்க? உனக்கு ஏதாவது வேணுமா தாயி?” என்று பணிவாக அவள் தந்தை பேசினார்.தன் தந்தையை ஏமாற்றிப் படிக்க வருகிறேன் என்று சொல்லி வேலைக்குச் சேர்ந்து, சேர்ந்த சில நாட்களில் ஒருவரிடம் மனதைக் கொடுத்து, அவனும் தன்னிடம் நெருக்கமாகப் பழகி, இறுதியில்”படுக்கைக்கு மட்டும்தான் நம் உறவு” என்று சொல்வான் என்று அவள் கனவா கண்டாள்? அனைத்தும் தவிப்பாகப் போய்விட்டது. நன்றாக வேலைக்குச் செல்ல வேண்டும், மாஸ்டர் டிகிரி முடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டவளுக்கு மன உளைச்சல்தான் கிடைத்தது.
தன் தந்தை சற்றுப் பணிவாகப் பேசியவுடன் வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு,”அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. எனக்கு தினமும் காலேஜ் போறதுக்குப் பிடிக்கவே இல்லை. ஏற்கனவே மூணு வருஷம் காலேஜ் போனதால எனக்கு இது வெறுப்பு தருது. அதுவும் இந்தச் சென்னையில சுத்தமா என்னால இருக்க முடியல. அதனால நானும் கரஸ்பாண்டன்ஸ் மூலியமா படிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அது கூட அவங்ககிட்ட பேசிட்டு எக்ஸாம் மட்டும் வந்து எழுதினா போதும்.
முக்கியமான நாள் மட்டும் அவங்க கூப்பிடும்போது வந்துட்டுப் போனா மட்டும் போதும். இனிமே நம்ம ஊர்ல தான் இருக்கப் போறேன். என்னால உங்களை விட்டுப் பிரிந்து இருக்க முடியலப்பா,” என்று மீனாட்சி தன் தந்தையிடம் சொன்னாள்.”அட சின்ன புள்ள, இதுதான் பிரச்சனையா? இதை மட்டும் உங்க அம்மாகிட்ட சொன்னா அவ்வளவு சந்தோஷப்படுவா.
நல்லவேளை நாங்களே சொல்லிக்கிட்டு இருந்தோம், இப்ப நீயே வரேன்னு சொல்லிட்ட. கல்யாண வேலைக்கு பிரச்சனை இருக்காது,” என்று சுந்தரம் சொல்ல,”என்னப்பா சொல்றீங்க கல்யாணமா?””ஆமா தாயி, அதான் ஏற்கனவே உங்க மாமா பையனோட பரிசம் போட்டாச்சு. சின்ன வயசுல முடிவு பண்ணதுதானே. உங்க அம்மா அவ அண்ணன் பையனுக்கு எப்படியாவது கட்டிக் கொடுத்து உன்னை பெரிய மகாராணி மாதிரி வச்சுப் பார்த்துக்கணும்னு ஆசைப்படுறா. என் மகள் கிராமத்தில் கஷ்டப்பட்ட மாதிரி நீ கஷ்டப்படக்கூடாது, அதான் டவுன்ல கட்டிக் கொடுக்க உங்க அம்மா முடிவு பண்ணிட்டா.
எல்லா ஏற்பாடும் நடந்துகிட்டுதான் இருக்குது. முகூர்த்த நாள் நெருங்கிட்டுதான் இருக்கு. இன்னும் 15 நாள் கழித்து கல்யாணம். இதைப்பற்றி உன்கிட்ட கேட்க நினைச்சேன், ஆனா உங்க அம்மா எதையும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டா. அதான்,” என்று சுந்தரம் அவளுக்குத் திருமணம் என்று சொல்லிவிட,”அப்பா… அது வந்து சரிங்கப்பா, எதுவா இருந்தாலும் நான் ஊருக்கு வரேன் அப்ப பேசிக்கலாம். இப்போ ட்ரெயின் ஏறினால்தான் நம்ம ஊருக்கு வர முடியும். ராத்திரி கூட நம்ம வீட்டுக்கு வர முடியும். ரயில்வே ஸ்டேஷன்ல யாராவது ஆளை அனுப்புவீங்கதானே?”
என்று மீனாட்சி கேட்க,”யாரை அனுப்புறது? நானே வந்து உன்னைக் கூட்டிட்டுப் போறேன். நான் செங்கல்பட்டு ஸ்டேஷனுக்கு வர்றேன்,” என்றார்.என்று சுந்தரமும் உரையாடலை முடித்துவிட்டார். மீனாட்சிக்கு மனம் வெறுப்படைந்தது. இப்போதுதான் ஒருவனிடம் காதல் பிச்சை கேட்டுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வர, அவன் தன்னை கேவலப்படுத்தி அனுப்பிவிட்டான். இப்போது தன் தந்தை திருமணம் செய்து கொள் என்று சொல்கிறார்.
தன்னிடம் ஒரு அனுமதிகூடக் கேட்காமல் மறைமுகமாகத் தன் தாயின் பெயரைச் சொல்லித் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார். இல்லை என்று சொன்னால் விட்டுவிடுவார்களா என்ன? அனைத்துப் பெண்களைப் போல நானும் மனதில் ஒருவன் மீது காதலை வைத்து இன்னொருவர் மனைவியாகச் சமூகத்தில் வாழ வேண்டிய கேவலமான கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டேனே என்று தன்னைத்தானே நொந்துகொண்டு மீனாட்சி தனது ஊருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தாள்.
இங்கே வைஷ்ணவி, மீனாட்சியிடமும் தன் தாயிடமும் தோழி வீட்டுத் திருமணம் என்று சொல்லித் தென்னரசுவை நம்பி அவன் ஊருக்கு வந்துவிட, அங்கே வைஷ்ணவிக்குப் பெரும் அதிர்ச்சி. அங்கே தென்னரசு அவளுக்குக் கட்டாயத் தாலி கட்டிக் கொண்டிருந்தான். மறுபக்கம் வைஷ்ணவியின் தாய் இதைப் பார்த்து ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.—