பாரம்பரிய உணவு விழா வெற்றிகரமாக முடிந்திருந்தது.மீனாட்சி நடந்தவற்றை அப்படியே மறந்திருக்க, ஆனால் அதிரவன் மட்டும் எதையும் மறக்கவில்லை. மீனாட்சி தான் தவறு செய்யவில்லை என்று இளமாறன் குற்றச்சாட்டுக்கு எதிராகத் தன்னைத் தவிப்போடு பார்த்த பார்வை அவன் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.அந்த உணர்வுக்கு என்ன அர்த்தம் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் முடிவு செய்தான்.மறுநாள் அலுவலகமே பரபரப்பாக இருந்தது.இளமாறனின் கம்பெனியோடு இருந்த அனைத்து ஒப்பந்தங்களையும் அதிரவன் ரத்து செய்த செய்தி, காட்டுத்தீ போல ரெஸ்டாரன்ட் முழுவதும் பரவியிருந்தது.
சமையல் கூடத்தில் இதுதான் அன்றைய விவாதப் பொருள்.”பார்த்தீங்களா மீனாட்சி, அந்த இளமாறன் கம்பெனிக்கு அதிரவன் சார் வச்ச செக். அந்த ஆள் செஞ்ச தப்புக்குச் சரியான தண்டனை கொடுத்துட்டாரு. நேத்து அந்த ஆளு நம்ம ரெஸ்டாரன்ட்ல தப்பான விஷயம் பண்ண வந்தாரு போல இருக்கு, அதனாலதான் நம்ம சார் நல்ல பதிலடி கொடுத்திருக்காரு. நம்ம சார் யாருக்காகவும் அவர் கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டாருன்னு இன்னைக்கு நிரூபிச்சுட்டாரு,”
என்று சக ஊழியர்கள் பேசிக்கொள்ள, மீனாட்சியின் மனதில் ஒரு மின்னல் வெட்டியது.அதிரவன் தான் சொன்ன வார்த்தையை நம்பி, இளமாறன் போன்ற ஒரு செல்வாக்கு மிக்க மனிதனைப் பகைத்துக் கொண்டது அவளுக்கு வியப்பாக இருந்தது.
‘அவர் ஒரு முரடன்தான், ஆனால் நியாயத்தின் பக்கம் நிற்கத் தயங்குவதில்லை’ என்று எண்ணும்போது, அவனது அந்த கம்பீரமான நேர்மை மீனாட்சியை மெல்ல அவன் பக்கம் ஈர்த்தது.இதற்கிடையில், மீனாட்சிக்கு ஓர் இன்ப செய்தி காத்திருந்தது. அதிரவன் அங்கே வந்திருந்தான்.
அனைவரும் இந்த நேரத்தில் சார் எதற்காக வந்தார் என்று புரியாமல் பார்க்க, அவன் நேராக வந்தது மீனாட்சியிடம்.சீஃப் செஃப் அதிரவன் அருகில் நின்று பணிவாக என்ன வேண்டும் என்று கேட்க,”இன்னையோட மீனாட்சியோட ஒர்க்கிங் டே முடிகிறது. அவங்களோட பெர்மிஷன் பார்த்துதான் நான் பேச வந்திருக்கேன்.
அதாவது மீனாட்சி இனிமே இங்கே செஃப் வேலையை கண்டினியூ பண்ணலாம்,” என்று சொன்னவுடன் அனைவருக்கும் ஆச்சரியம். இதைப் பற்றி அதிரவனே நேரடியாக வந்திருக்கிறார் என்றால், அன்று விழாவில் மீனாட்சி செய்த சாதனைதான் காரணம். அவள் கொடுத்த ஐடியாவால்தானே அன்று உணவுப் பாரம்பரிய விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அங்கிருப்பவர்கள் மீனாட்சியைப் பாராட்டித் தள்ளினர். சில வன்மக் குரோதங்கள் அங்கே இருந்தன.
ஆனால் ஸ்ருதி ஏதோ ஒரு காரணத்துக்காகப் பணி நீக்கம் செய்யப்பட்ட செய்தி தெரிந்துகொண்டு, ‘நாம் இனி எந்த வம்பிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது’ என்று அந்த வன்மக் கும்பல் அமைதியாகக் கைதட்டிக் கொண்டிருந்தது. அனைவரும் மீனாட்சிக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
“ஓகே ஓகே, இதெல்லாம் அப்புறம் இருக்கட்டும். இன்னொரு குட் நியூஸ் என்னன்னா, மலைச்சாரல் ரிசார்ட் இருக்கு இல்லையா? அங்கயும் இதே மாதிரி ட்ரெடிஷனல் ஃபுட் ஃபெஸ்டிவல் நம்ம ரெஸ்டாரன்ட் ரெப்ரசென்ட் பண்ணி மீனாட்சி அப்புறம் சில நியூ செஃப் எல்லாரும் அங்க போகப் போறோம். எப்பவும் போல உங்களோட சீஃப் செஃப் உங்களை கைட் பண்ணுவாரு. அங்கேயும் உங்களுடைய பெஸ்ட்டை காட்டணும். இது நமக்காக வந்த ஒரு முதல் அவுட்சைடு ஃபுட் ஃபெஸ்டிவல் பிரசன்டேஷன்.
அங்க நான் கெஸ்ட், அதனாலதான் நம்ம டீம் எல்லாரும் ஒண்ணா போகலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். நாளைக்கு நாம அங்க இருக்கணும், அதனால சீக்கிரம் எல்லாரும் பிரிபரேஷன் பண்ணிக்கோங்க,” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.அங்கிருப்பவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
செலக்ட் ஆன நபர்கள் எல்லாரும் சீக்கிரமாக உடைமைகளை எடுத்துக் கொண்டனர். இன்று மாலை புறப்பட்டால்தான் நாளை காலை அங்கு சேர முடியும். பிறகு சமையல் வேலையெல்லாம் முடித்து மாலை நேரத்தில் பிரசன்டேஷன் செய்ய முடியும் என்று தலைமை நிபுணர் சொன்னவுடன் அனைவரும் பரபரப்பாகச் செயல்பட்டனர்.
மீனாட்சிக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.விரைவாகத் தன்னுடைய ஹாஸ்டலுக்குச் சென்று வைஷ்ணவிக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல,
“ஆல் தி பெஸ்ட் மீனாட்சி! நேத்துதான் அதிரவன் சார் பத்திப் புகழ்ந்துட்டு இருந்தே, இப்போ திடீர்னு அதிரவன் சார் இவ்வளவு பெரிய ஆப்பர்சூனிட்டி கொடுக்கிறாரு. எனிவே, அதிரவன் சார் உன் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கிறவராக இருக்கட்டும்,”
என்று வைஷ்ணவி சிரிக்க, மீனாட்சி ஒரு வெட்கத்தோடு ‘சரி’ என்று சொல்லி மொபைலை கட் செய்துவிட்டுப் புதிய பயணத்திற்குப் புறப்பட்டாள். ஆனால் அங்கே நடக்கப் போவதைப் பற்றி அவள் அறியவில்லை பாவம்.
இவர்களுக்காகப் பிரத்தியேக வாகனம் தயார் செய்யப்பட்டு இருந்தது. அதில்தான் அனைவரும் பிரயாணம் செய்தார்கள். ஐந்து மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு அந்த மலை ரிசார்ட்டிற்கு வந்தார்கள்..
.மலைச்சாரல் ரிசார்ட்..
அந்த ரிசார்ட், மேகங்கள் முத்தமிடும் மலை உச்சியில் இருந்தது.குக்கிங் டீம் சிறிது நேரம் ரிசார்ட் முழுக்கச் சுற்றிப் பார்த்து முடித்து, குறிப்பிட்ட நேரம் வந்தவுடன் தங்கள் வேலையில் ஈடுபட்டனர். மிகவும் கவனமாகச் சிரத்தையாகத் தங்கள் சமையலை இன்னும் புதுவித வகையாகப் பல திட்டங்கள் போட்டு ஒற்றுமையாக அனைவரும் செய்து முடித்தனர்.
மாலையில் விழா தொடங்கிப் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்க,அதிரவன் சிறப்பு விருந்தினராக அங்கு வந்திருந்தான். அங்கு இருக்கும் பார்ட்டி அனைத்தையும் கண்காணித்துக் கொண்டே தன்னுடைய ரெஸ்டாரன்ட் குக்கிங் டீம் இருக்கும் இடத்திற்குச் சென்று ஒரு பார்வை இட்டான்.
மீண்டும் அதேபோல் குழு நிபுணர்கள் அனைவரும் சிறப்பாகப் பிரசன்டேஷன் செய்து வைத்திருந்தனர். ஒருமுறை அவர்களைப் பாராட்டிவிட்டு பார்ட்டியை மீண்டும் என்ஜாய் செய்து கொண்டிருக்கும் பொழுது,திடீரென அந்தப் பகுதியில் கலவரம் தொடங்கியது. காரணம் அந்த ரிசார்ட் ஓனர் மலைக்குக் கீழே இருக்கும் ஒரு தொழிற்சாலையில் முதலீடு செய்து ஏமாற்றியதால், அங்கிருக்கும் தொழிற்சங்க நபர்களால் கலவரம் வெடித்தது.
கற்களும் பாட்டில்களும் வீசப்பட, அனைவரும் தப்பித்துச் செல்ல முற்பட்டனர். விருந்தினர்கள் பத்திரமாக அங்கிருக்கும் பாடிகார்ட் மூலம் தனிமைப்படுத்தப்பட, ஒவ்வொரு ரெஸ்டாரண்டில் இருந்து வந்த குழு நபர்கள் அவரவர் குழுக்களோடு தனியாகத் தாங்கள் வந்த வண்டியில் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
அதிரவன் ரெஸ்டாரண்டில் வந்த அனைத்து சமையல் நிபுணர்களும் தங்கள் வண்டியில் ஏறிவிட, அப்போதுதான் மீனாட்சி இந்த வண்டியில் ஏறவில்லை என்ற விஷயமே அவர்களுக்குத் தெரிந்தது.இப்போது மீண்டும் அங்கு சென்றால் கலவரத்தில் மாட்டிக்கொள்வோம் என்று வேறு ஒரு ரகசிய இடத்தில் பத்திரமாக இருந்தனர்.
இங்கே ஒரு பக்கம் மீனாட்சி எங்கே தப்பிப்பது என்று தெரியாமல் ரிசார்ட் பின்பக்கம் ஓடிக்கொண்டிருக்க, அப்போது ஒரு வலுவான கரம் அவளைப் பிடித்து இழுத்தது. அது அதிரவன்தான். அவள் எங்கே ஓடுகிறாள் என்று அவளையே பின்தொடர்ந்து, தன் பாதுகாப்பை மறந்து அவள் பின்னால் ஓடி வந்துவிட்டான்.
“நீங்க…” என்று சொல்ல வருவதற்குள் அங்கு சில நபர்கள் இவர்களைத் தாக்க வர, இருவரும் ரிசார்ட்டின் பின்புறம் இருந்த காட்டுப் பாதை வழியாகத் தப்பிக்க முயன்றனர்.இருள் சூழ்ந்த காடு. மழை மேகங்கள் திரண்டு வந்து இருட்டை இன்னும் அதிகமாக்கின.அதிரவன் மீனாட்சியை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற பயத்தில் ஓடிக்கொண்டிருந்தான். எதிரே இருந்த சரிவுப் பகுதியை அவன் கவனிக்கவில்லை.
ஆனால் மீனாட்சி தன் கூர்மையான கண்களால் அதைக் கவனித்து,”சார், இந்த வழி வேண்டாம்… இது சரிவான பகுதி!” என்று மீனாட்சி எச்சரித்தும், பின்னால் வரும் கும்பலுக்குப் பயந்து அதிரவன் வேகமாக ஓடினான். காலடி வழுக்க, அதிரவன் கீழே சரிய, அவனைக் காப்பாற்ற மீனாட்சி கையைப் பிடிக்க, இருவருமே உருண்டு சென்று ஒரு பாறை இடுக்கிற்குள் விழுந்தனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் தழுவியபடி உருண்டு கீழே விழுந்தனர்.மழை சடசடவெனக் கொட்டத் தொடங்கியது. அதிரவனின் கறுப்பு நிறக் கோட் நனைந்து அவனது உடலோடு ஒட்டியிருந்தது. நெற்றியில் பட்ட காயத்திலிருந்து ரத்தம் கசிந்தது.
“சார்… எழுந்திருங்க, இங்கே ஒரு குகை மாதிரி இடம் இருக்கு,” என்று மீனாட்சி அவனைத் தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றாள்.குளிர் உடலைத் துளைத்தது. அதிரவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து சிகரெட் லைட்டரை எடுத்தான். மீனாட்சி அருகில் இருந்த காய்ந்த இலைகளையும் சருகுகளையும் சேகரித்து வர, அவன் நெருப்பு மூட்டினான்.
அந்தச் சிறு நெருப்பின் வெளிச்சத்தில் குகையின் இருள் விலகியது.மழைச்சாரலின் குளிர்ச்சியும், எரியும் நெருப்பின் சூடும் அவர்களுக்குள் ஒரு விசித்திரமான நெருக்கத்தை ஏற்படுத்தின. அதிரவன் தன் காயத்தைப் பொருட்படுத்தாமல் மீனாட்சியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நனைந்த புடவையில், குளிரில் நடுங்கும் உதடுகளுடன் அவள் ஒரு காட்டுத் தேவதை போலத் தெரிந்தாள்.”ஏன் மீனாட்சி… என்னைச் சாக விட்டுட்டு நீ மட்டும் தப்பிச்சுப் போயிருக்கலாமே? எதுக்காக என் கூட வந்து மாட்டிக்கிட்ட?” அதிரவனின் குரலில் எப்போதும் இருக்கும் அதிகாரம் குறைந்து, ஒரு மென்மை இழையோடியது.
மீனாட்சி அவனது காயத்தைத் தன் புடவை முந்தானையால் துடைத்தாள்.
“சாகுறது ரொம்ப சுலபம் சார். ஆனா சாகுற நிலைமையில இருக்கிறவனைச் சாகவிடாம காப்பாத்துறதுதான் மனுஷத்தன்மை. நீங்க ஒரு முரடனா இருக்கலாம், ஆனா ஒரு நல்ல மனுஷன்னு எனக்குத் தெரியும். அப்புறம் நீங்க உயிரோடு இல்லன்னா எனக்கு யார் சம்பளம் தருவா?” என்று மென்மையாகப் பேசி இறுதியில் குறும்பு கலந்து சொன்னாள்.
அதிரவன் அவளது கையைப் பற்றினான். அவனது கைகளின் சூடு மீனாட்சியின் ரத்த ஓட்டத்தைச் சீண்டிப் பார்த்தது. “நீ வித்தியாசமானவ மீனாட்சி. இதுவரைக்கும் நான் பார்த்த பொண்ணுங்க எல்லாம் என் பணத்துக்கும் அந்தஸ்துக்கும் காத்துக் கிடப்பாங்க. ஆனா நீ, ஒரு நடுக்காட்டுல என் உயிரைக் காப்பாத்திட்டு, என்னை மிரட்டுற மாதிரி பேசுற… உன்னைப் பார்க்கும்போது எனக்குள்ள ஏதோ ஒரு மிதமான ஃபீலிங்ஸ் வருது, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியல,” என்று சொல்லிக்கொண்டே அவளது முகத்திற்கு மிக அருகில் வந்தான்.
அவளது சுவாசக் காற்று அவனது முகத்தில் பட, அந்தச் சூழலின் ஈர்ப்பு இருவரையும் ஆட்கொண்டது.ஏற்கனவே அதிரவனை முதன்முதலில் பார்க்கும் பொழுது மனதில் ஏற்பட்ட அந்தச் சிலிர்ப்பு, அவனது தவறான குணம் ஒரு பக்கம் இருந்தாலும் அவனது அதிகாரமிக்க செயல்கள் அனைத்தும் நேர்மையானது என்று புரிந்துகொண்ட பிறகு, மேலும் மேலும் அவன் பக்கம் சாய்ந்த மனதைக் கட்டுப்படுத்த முடியாத மீனாட்சியும், சற்று அவன் நெருக்கத்திற்கு அடிபணிந்து கண்களை மயக்கமாகச் சுருக்கி அவனைப் பார்த்தாள்.
இருவரின் தேகமும் உரச, இருவருக்கும் என்ன தேவைப்பட்டதோ… இதழ்கள் இரண்டும் ஒட்டிக்கொண்டன. நீண்ட நேரம் இது நீடித்தது.மழை வந்து கொண்டிருக்கும்போது திடீரென்று மின்னல் வெட்ட, மின்னல் வெளிச்சத்தில்தான் இருவரும் சுயநினைவுக்கு வந்து ஒருவரை ஒருவர் விடுவித்து இடைவெளி விட்டு அமர்ந்தனர்.
அதிரவன் ஏதோ சொல்ல வருவதற்குள்,”சார்… நீங்க நல்ல மனுஷன். ஆனா, இந்த ஆணாதிக்கத்தையும் அதிகாரத்தையும் மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும். பெண்களை உங்களுக்குக் கீழே இருக்கிறவங்களா நினைக்காதீங்க. நாங்களும் மனுஷங்கதான். அதே சமயம் உங்கள் தொடுதலுக்கு ஒரு பொண்ணு அடிபணியிறா அப்படின்னா அவளைக் கேவலமாக எடை போடாதீங்க,” என்று அவள் உரிமையோடு சொல்ல,அதிரவனின் முகம் சட்டெனக் கடுகடுப்பானது.
அவன் அவளது தோளை வலுவாகப் பற்றினான்.”ஹேய்! நான் எப்படி இருக்கணும்னு ஒரு பொண்ணு எனக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாது. நீ என்ன வேணாலும் சொல்லிக்கோ, ஆனா உன்னோட அதிகாரம், உன்னோட திமிர், உன்னோட அகம்பாவம் எப்பவுமே எனக்குக் கீழேதான் இருக்கணும். என் விருப்பத்துக்கு அடங்கி நடக்கக் கத்துக்கோ.
இந்த அதிரவன் யாருக்கும் வளைஞ்சு கொடுக்க மாட்டான். ஆனா உனக்கு ஒரு ஆஃபர் கொடுக்கிறேன். இனி எவ கூடயும் நான் போக மாட்டேன், மொத்தமா உன் கூடவே வாழ்க்கை முழுக்க… இந்த ஆஃபர் எனக்குத் திடீர்னுதான் தோணுச்சு. உனக்கு இதுல ஓகேவா? என்ன ஓகே… நீ இருந்துதான் ஆகணும். நீ எனக்கு மட்டும்தான் சொந்தம் மீனாட்சி!” என்று கர்ஜித்தான்.மீனாட்சியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“காதல்ல கூட அதிகாரம் பார்க்குற உங்களை நினைச்சா பாவமா இருக்கு சார்,” என்று சொல்லிவிட்டு விலகி அமர்ந்தாள்.அதிரவனுக்குச் சிரிப்பு வந்தது.”காதல் என்ற வார்த்தை நம்ம இரண்டு பேருக்கும் நடக்குற விஷயத்துக்கு எதுக்குத் தலைப்பா போடுற? உனக்குக் காதல் இருந்தா வச்சுக்கோ, ஆனா எனக்கு அதுல இன்ட்ரஸ்ட் இல்ல. ஐ வாண்ட் ஒன்லி பிசிகல் நீட். நீ என் கூடவே இருக்கணும், எனக்குக் கீழே… நான் சொல்றதச் செய்யணும், அவ்வளவுதான்,”
என்று மீனாட்சியின் மீது தனக்கு ஏற்பட்ட ஈர்ப்பைக் காதல் என்று ஒப்புக்கொள்ளாமல், ஆணவத்தோடு அதிரவன் இவ்வாறு பேச, மீனாட்சி முகம் சோகத்தில் ஆழ்ந்தது. இவ்வளவு விரைவாக மனதில் இருக்கும் விஷயத்தைச் சொல்லியும் இவர் இப்படி இருக்கிறாரே என்று.—
மறுபுறம் சென்னையில்…
நேற்றைய மதிய நேரம் மீனாட்சி தன் உடைமையோடு இங்கிருந்து சென்றதைப் பார்த்துத் தென்னரசனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. இன்னும் ஹாஸ்டல் பக்கம் வரவில்லை. அவள் வருவதற்காக இன்று அலுவலகம் கூடச் செல்லாமல் காத்துக் கொண்டிருக்கிறான். ஆனால் மீனாட்சி ஹாஸ்டல் பக்கம் வரவே இல்லையே? ஒருவேளை ஊருக்குச் சென்றிருப்பாளோ என்ற சந்தேகத்தில் அங்கிருக்கும் நபர்களிடம் சாதாரணமாக விசாரிப்பது போல் பேசினான். ஆனால் மீனாட்சி அங்கு வரவில்லை என்று செய்தி கிடைத்தது.
இப்படி இருக்கும் பொழுது,மீனாட்சி இருக்கும் ஹாஸ்டல் அறையில் இருந்து வெளியே வந்த வைஷ்ணவி, மொபைலில் யாரிடமோ பேசி பால்கனி வழியாக யாருக்கோ கை அசைக்க, அவனும் என்னவென்று ஹாஸ்டல் கேட் பக்கம் பார்த்தான். உடைமையோடு ஒரு நடுத்தர வயது பெண்மணி ஹாஸ்டலுக்குள் நுழைந்து கொண்டிருந்தார்.
யாராக இருக்கும் என்று தன் அறையில் இருந்து கீழே வந்த தென்னரசு, இரு பெண்களும் ஹாஸ்டல் அறைக்குள் செல்வதற்குள் ஹாஸ்டல் சுவர் வழியாக ஏறி நின்று வைஷ்ணவி அருகில் இருக்கும் பெண்மணியை உற்றுப் பார்த்தான். அவரின் முகத்தைப் பார்த்தவுடன் தென்னரசுவின் ரத்தம் கொதித்தது.”இவளா? இவளால் தானே எங்க குடும்ப மானம் போச்சு? எங்க தாத்தா கிட்ட இருந்து தலைவர் பதவி போனதுக்கு முக்கிய காரணமே வேற ஜாதி ஆளோட கலப்புத் திருமணம் பண்ண இந்த ஒரு ஓடுகாலியால்தானே?” என்று கண்கள் சிவக்க ஆத்திரத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
மேலும் அந்தப் பெண்மணியை பார்த்து வைஷ்ணவி,”உனக்கு மகளாப் பிறந்த பாவத்துக்கு உன்னை மாதிரி நானும் வம்பான மனுஷியா இருக்கணும் போல இருக்கு. இந்த ராத்திரியில என்னைத் தேடி நீ வரணுமா?” என்று சிறு கோபத்தோடு தன் அம்மாவை அழைத்துக்கொண்டு ஹாஸ்டல் அறைக்குச் சென்றாள். வைஷ்ணவியையும் அந்தப் பெண்மணியையும் தென்னரசு பார்த்துக் கொண்டிருந்தான்.”இந்த மகமாயி இவளோட பொண்ணுதானா? அதான் திமிர் பேச்சு அள்ளி வீசுது… ஓடுகாலி குடும்பம்,”
என்று அவர்களைப் பார்த்து வன்மம் நிறைந்து சொல்லிக் கொண்டிருந்தான். அவர் வேறு யாரும் அல்ல, 23 வருடங்களுக்கு முன்பாகத் தாத்தாவும் தந்தையும் பெண்கள் மீது மரியாதை இல்லாமல், பெண்களை அடிமைப்படுத்தி வாழ்வதைப் பிடிக்காமல், அங்கே வியாபார விஷயமாக வந்த வேறு கிராமத்தைச் சேர்ந்த வேறு ஜாதி இளைஞனைக் காதல் திருமணம் செய்துகொண்டு அந்த ஊரை விட்டுச் சென்ற, தென்னரசுவுக்கு முன்பாகப் பிறந்த அவனது சகோதரி ரத்தினவள்ளிதான்.