Home ANTIHEROஅத்தியாயம் 10

அத்தியாயம் 10

by sreejanovels
559 views

உணவகத்தில் பாரம்பரிய விழா களைகட்டியிருந்தது. எங்கும் தோரணங்களும், மல்லிகைப் பூ வாசனையும் நிறைந்திருக்க, இசை மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்தது. விழா ஆரம்பமான சில நிமிடங்களில், அதிரவன் தனது அறையிலிருந்து வெளியே வந்து உணவகத்தைப் பார்வையிட்டான்.

ஒவ்வொரு மேசையாகப் பார்த்துக் கொண்டு வந்தவன், உணவுகள் அடுக்கி வைக்கப்படிருந்த இடத்திற்கு வந்தான். அங்கே மீனாட்சி பாரம்பரிய முறைப்படி சந்தன நிறப் பட்டுப் புடவை கட்டி, தலையில் மல்லிகைச் சரம் சூடி, கையில் ஒரு பித்தளைத் தட்டோடு நின்று கொண்டிருந்தாள். அவளது அந்தத் தோற்றம் அதிரவனை ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது.

‘மலையூர்க் காட்டுவாசி என்று நினைத்தேன், ஆனால் இவள் அசல் தேவலோகத்துச் சிலை போலத் தெரிகிறாளே’ என்று அவன் மனதிற்குள் ஒரு கணம் வியந்தான். அவளது விழிகளில் தெரிந்த அந்தத் துறுதுறுப்பும், புன்னகையும் அவனது இறுக்கமான மனதைச் சற்றே தளர்த்தியது.மீனாட்சியும் அதிரவனைப் பார்த்தாள். கறுப்பு நிறக் கோட் சூட்டில், ஆஜானுபாகுவான தோற்றத்தில் அவன் நடந்து வருவதைப் பார்த்த போது, மீனாட்சியின் மனதிற்குள் இதுவரை உணராத ஒரு புதுவிதமான கிளர்ச்சி உண்டானது.

அவன் அருகில் வர வர, அவளது இதயம் வேகமெடுத்தது. ‘என்ன இது, இவனைப் பார்க்கும்போது மட்டும் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றுகிறதே’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.அதிரவன் அருகில் வந்து உணவுகளைப் பார்த்தான்.

“மீனாட்சி, நீங்களும் உங்க டீமும் சேர்ந்து பண்ண இந்த பிரசன்டேஷன் ரொம்ப நல்லா இருக்கு. பாரம்பரிய உணவுகளை இவ்வளவு அழகா அடுக்கி வச்சது சூப்பர். இதே எனர்ஜியை மெயின்டைன் பண்ணுங்க,” என்று முதன்முறையாக அவளைப் பாராட்டினான்.அந்தப் பாராட்டும், அவனது காந்தப் பார்வையும் மீனாட்சியை உச்சி குளிர வைத்தது.

அவனது பாராட்டைச் சொல்லிவிட்டு அவன் சென்ற பிறகும், அவனது வாசனையும் குரலும் அவளைச் சுற்றியே இருப்பது போல் உணர்ந்தாள்.ஆனால் இந்த அழகிய தருணத்தை அழிக்கும் விதமாக ஸ்ருதி தனது சதி வேலையை ஆரம்பித்தாள். மதுவின் பிடியில் இருந்த, பெண்கள் விஷயத்தில் மிகவும் பலவீனமான இளமாறன் என்பவனிடம் சென்று, “சார், அந்தப் பொண்ணு உங்களுக்காகத்தான் வெயிட் பண்றா.

அவளை 204-வது ரூமுக்கு வரச் சொல்லிடுறேன், நீங்க போங்க,” என்று அனுப்பி வைத்தாள்.இந்த ஹோட்டலில் ஸ்ருதி நிறைய பணக்காரர்களுக்கு இதுபோல வேலை செய்து நிறைய சம்பாதித்திருக்கிறாள். சில சமயம் தன்னையே விற்றும் சம்பாதித்திருக்கிறாள். இப்போது மீனாட்சியை மாட்டிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இளமாறனிடம் கோர்த்து விட, இளமாறன் புதிய பெண்ணை தனக்கு ஏற்பாடு செய்த ஸ்ருதிக்குக் கட்டுப் பணத்தைக் கொடுத்துவிட்டு, போதையோடு 204 என்ற அறைக்குச் செல்வதற்குப் பதிலாக 201 என்ற அறைக்குச் சென்று அங்கேயே மயங்கி விழுந்தான்.

இங்கே ஸ்ருதி மீனாட்சியிடம் வந்து, “மீனாட்சி, அதிரவன் சார் 201-வது ரூம்ல ஒரு முக்கியமான ஃபைல் வச்சிருக்காராம் (201 என்று மாற்றிச் சொன்னாள்). அதை உடனே எடுத்துட்டு வரச் சொன்னார். பாராட்டியிருக்காரேன்னு லேட் பண்ணாதே, சீக்கிரம் போ,” என்று பொய்யான கட்டளையை இட்டாள்.அதிரவன் பாராட்டிய மகிழ்ச்சியில் இருந்த மீனாட்சி, எதுவும் யோசிக்காமல் மாடிக்கு விரைந்தாள்.

அவள் 201-வது அறைக்குள் நுழைய, அங்கு ஏற்கனவே ஒரு முக்கியமான போன் காலில் அதிரவன் ஒரு ஃபைலைப் பார்த்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான்.’சார் ஃபைல் எடுத்துட்டு வரச் சொல்லித்தானே ஸ்ருதி என்னை அனுப்பினாள்? ஆனால் சார் ஏற்கனவே இங்கேதான் இருக்கிறாரே’ என்று அவள் யோசித்துக் கொண்டு நிற்க, திடீரென்று அறைக்குள் யாரோ வருவதைப் பார்த்த அதிரவன் திரும்பிப் பார்த்தான்.

மீனாட்சியைப் பார்த்து கண்கள் சுருக்கி, “நீ என்ன இங்கே பண்ற?” என்று கேட்டான். சார், “நீங்க ஃபைல் கேட்டதா…” என்று அவள் சொல்ல வருவதற்குள்,”ரூம் மாறி வந்துட்டேனா? இதுதான் கரெக்டான ரூமா? அந்தப் பொண்ணு வந்தாளா இல்லையான்னு தெரியலையே!” என்று சொல்லிக்கொண்டே இளமாறன் அறைக்குள் நுழைந்தான்.”இளமாறன், நீ என்ன இங்கே பண்ற?” என்று அதிரவன் கேட்க,”ஓ… நீ கூட இங்கேதான் இருக்கியா? இந்தப் பொண்ணு ஏற்கனவே இங்கே வந்துட்டாளா? நான் தான் லேட்.

இந்தப் பொண்ணு ரொம்ப நேரமா எனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கா போல. இன்னைக்கு நைட்டு எனக்கு என்ஜாய்மென்ட் தான்! அதிரவன், நீ எதுக்கு இந்த ரூம்ல இருக்க? இந்தப் பொண்ணை நீயும் புக் பண்ணியிருக்கியா?” என்று ஒரு விலைமாதைப் போலச் சித்தரித்து மீனாட்சியைப் பார்த்து இளமாறன் கேட்க, மீனாட்சியின் முகம் அருவருப்பில் சுருங்கியது. அவளது முக மாற்றத்தைப் பார்த்த அதிரவன் கோபமானான்.”இளமாறன், என்ன பேசுகிறாய் நீ? யார் யாரைப் புக் பண்ணியிருக்கா? அதுமட்டுமில்லாம, இது என்னோட ஹோட்டல். இங்கே மத்தவங்களுக்கான பிரைவசி, என்ஜாய்மென்ட் எல்லாம் நடக்குதா என்ன?”

என்று கடுகடுப்பான குரலில் கேட்டான்.”அது… அது வந்து… இந்தப் பொண்ணுதான் ஃப்ரீயா இருந்தா வாங்கலேன் அப்படின்னு கூப்பிட்டா, அதான் நானும் வந்தேன். உனக்கும் பொண்ணுங்க ஒன்னும் புதுசு கிடையாது, இன்னைக்கு பார்ட்டி வேற அதான்…” என்று ஏதேதோ சொல்லி இளமாறன் தப்பிக்கப் பார்த்தான்.”சார், இவர் பொய் சொல்றாரு! ஆக்சுவலி என்ன நடந்துச்சு அப்படின்னா…”

என்று மீனாட்சி தன் பக்கம் இருக்கும் நியாயத்தைச் சொல்ல வருவதற்குள்,”போதும், ஸ்டாப் இட்! இது என்னோட ரெஸ்டாரன்ட். எனக்கான பிரைவசியான சில வசதிகள் இங்கே இருக்குமே தவிர, இந்த மாதிரி எல்லாருக்கும் தெரியுற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். ஆனா எனக்கே தெரியாம என்னோட ஹோட்டல்ல இந்த மாதிரி புது பிசினஸ் ஆரம்பிச்சிருக்கீங்க. இதுவே கடைசி முறையா இருக்கணும்!”

என்று அதிரவன் சொன்னவுடன் மீனாட்சிக்கு உயிரே போய்விடுவது போலிருந்தது. இளமாறன் தப்பித்தோம் என்று அங்கிருந்து நழுவிவிட்டான். மீனாட்சி அங்கிருந்து நகராமல் இருப்பதைப் பார்த்து, அதிரவன் பார்வையாலேயே என்னவென்று கேட்டான்.”என் பக்கம் இருக்கிற நியாயத்தைச் சொல்லாமல் நான் இங்கிருந்து போகமாட்டேன்.

ஸ்ருதி தான் இந்த ரூம்ல முக்கியமான ஃபைல் இருக்கு எடுத்துட்டு வான்னு சொன்னாள். நீங்கதான் எடுத்துட்டு வரச் சொன்னீங்கன்னு சொன்னதால் நானும் வந்தேன். ஏற்கனவே நீங்க இங்கே இருக்கிறீங்கன்னு தெரிந்ததும் நான் யோசிச்சு நின்னுட்டு இருந்தேன்.

அப்பொழுது இந்த நபர் யாருன்னு தெரியல, திடீர்னு வந்து என்னென்னமோ சொல்றாரு. நீங்க பிசினஸ் அது இதுன்னு தப்பா பேசுறீங்க. நீங்க ஒரு தப்பு பண்ணா எல்லாரும் அதே தப்பு பண்ணுவாங்கன்னு நினைக்கக் கூடாது. இங்கே தப்பு நடந்ததா இல்லையான்னு செக் பண்றது ரொம்ப ஈஸி. சிசிடிவி ஃபுடேஜ் பார்த்தால் எல்லாமே தெரிஞ்சிடும். ஒரு விஷயத்தைத் தீர விசாரிக்கிறதுக்கு முன்னாடி ஒரு மனுஷன் மேல பழி போடக்கூடாது!”

என்று சொல்லிவிட்டு மீனாட்சி அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டாள்.அதிரவன் எதையும் சிந்திக்காமல் நேரடியாக சிசிடிவி கண்காணிப்பு அறைக்குச் சென்றான். அங்கு நடந்த மொத்த வீடியோவையும் பார்த்தான். ஸ்ருதி இளமாறனிடம் எதையோ சுட்டிக்காட்டிப் பேசிக் கொண்டிருப்பதும், பிறகு ஸ்ருதி மீனாட்சியிடம் ஏதோ சொல்லி அனுப்புவதும் வீடியோவில் தெரிந்தது. ஸ்ருதிதான் திட்டமிட்டு இதைச் செய்திருக்கிறாள் என்று அவனுக்கு உறுதியானது.

மீனாட்சி இதுபோன்ற பெண் அல்ல என்று அவனுக்கு முன்பே தெரியும். அவள் ஒரு நெருப்பு என்பதை அவள் அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருக்கிறாள்.இளமாறன் அங்கிருந்து வெளியேறிவிட, மீனாட்சியை அவன் சீரழித்திருப்பான் என்று கனவு கண்டு கொண்டிருந்த ஸ்ருதிக்குத் திடீரென்று அதிரவன் கூப்பிடுவதாகத் தகவல் வந்தது. ‘ஒருவேளை சார் இன்றைய இரவை என்னோடு கழிக்க விரும்புகிறாரோ’ என்று நினைத்துக் கொண்டே அவன் அறைக்குள் நுழைந்தவளுக்கு, அங்கே டிஸ்மிஸ் லெட்டர் காத்துக் கொண்டிருந்தது.

“வாங்க ஸ்ருதி. இத்தனை நாள் நம்ம ரெஸ்டாரன்ட்ல வேலை பார்த்தீங்க, இன்னைக்கு ரொம்ப ‘நல்ல’ வேலை பார்த்திருக்கீங்க. அதற்கான புரமோஷன் இது. இனிமேல் இங்கே மட்டும் இல்லை, உங்களுக்கு எந்த ஒரு ரெஸ்டாரன்ட்லயும் செஃப் வேலை கிடைக்காது,”

என்று அவள் மீது பிளாக் மார்க் போட்டு நீக்கினான்.”என்ன ஆச்சு? நான் என்ன பண்ணினேன்? எதுக்காகச் சொல்லாம வேலையை விட்டு அனுப்பணும்? காரணம் தெரிஞ்சே ஆகணும்!” என்று கோபத்தில் ஸ்ருதி கத்தினாள்.”நீங்க ஒண்ணுமே பண்ணலையா? இன்னைக்கு என்ன பண்ணியிருக்கீங்க? ஒரு பொண்ணை ஒரு போதை ஆசாமிக்கு விபச்சாரம் பண்ண அனுப்பியிருக்கீங்க. ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம அவளைத் தொடறது எவ்வளவு மோசமான விஷயம்னு ஒரு பொண்ணா உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை.

நான் யாருடைய பர்சனல் லைஃப்லயும் தலையிட மாட்டேன், ஆனா அத்துமீறி தவறான செயலைச் செய்தால் கண்டிப்பா இந்த அதிரவன் குரல் கொடுப்பான். இன்னைக்கு மீனாட்சியை அவள் அனுமதி இல்லாம ஒரு ஆளோட அனுப்பப் பார்த்திருக்க, அதற்கான தண்டனைதான் இந்த டிஸ்மிஸ் லெட்டர். இதுபோல எத்தனை முறை நடந்திருக்குன்னு தெரியல, இனி அது நடக்கக்கூடாது.

உடனே நீங்க மட்டும் சரியான்னு கேட்கலாம். இது என்னோட ஹோட்டல், என்னோட பர்சனல், நான் என்ன வேணாலும் பண்ணுவேன். அதனால் யாருக்கும் தொந்தரவு இருந்திருக்காது. ஆனா நீ பணம் சம்பாதிக்கப் பல பேருக்குத் தொந்தரவு கொடுத்திருக்க. இந்தத் தொழிலைத் தனியா ஒரு பங்களா வாங்கிப் பண்ணியிருக்கலாமே? என் ரெஸ்டாரன்ட் தான் கிடைச்சதா? இப்போ நான் வேற மனநிலையில் இருக்கிறதால உன்னைச் சும்மா விடுறேன். வேலை மட்டும் போச்சுன்னு இங்கிருந்து தப்பிச்சுடு. என்னைச் சீண்டிப் பார்க்கணும்னு நினைச்சால் நீ உயிரோடவே இருக்க மாட்டாய். இது என்னோட கடைசி எச்சரிக்கை!”

என்று கோபமாகச் சொன்னான்.நடுங்கிப் போனாள் ஸ்ருதி. கர்வத்தோடு சுற்றிக் கொண்டிருந்தவளின் கர்வம் தவிடுபொடியானது. இருந்தாலும் தன் பயத்தை மறைத்துக் கொண்டு, “அந்தக் காட்டுவாசி உங்களை மயக்கிட்டா போல, அதனால்தான் அவளுக்கு சப்போர்ட் பண்ணி என்னை வேலையை விட்டுத் தூக்குறீங்க. பார்க்கலாம் அவ எத்தனை நாளைக்குன்னு…”

என்று வன்மத்தைக் கொட்டிவிட்டுச் சென்றாள்.அதிரவனுக்குக் கோபம் வந்தது. ‘அவளுக்காகவா பேசினோம்?’ என்று அவன் யோசிக்க, அவன் மனசாட்சியோ, ‘அவளுக்காகத்தானே இப்போது வருத்தப்பட்டாய்? அதனால்தானே ஸ்ருதியை நீக்கினாய்?’ என்று கிண்டல் செய்தது.

“இல்லை இல்லை, என் மனசுல எதுவுமே இல்லை!” என்று தனக்குள் கத்தினான் அதிரவன்.

ஆனால், அவனது இந்த உக்கிரத்திற்கு காரணமானவளோ, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி அங்கு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருந்தாள்.—

You may also like

Leave a Comment

About Me

Featured